To search this blog

Tuesday, April 1, 2025

Thiruvallikkeni Sri Rama Piran ~ Kamba Ramayanam 2025

 

மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய மிக மிக சிறந்த யுகா புருஷன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.    அவன் அவதரித்த அழகிய திருநாடு கோசல நாடு. அது பழம் பெருமைமிக்கது; அதைச் சத்திய விரதன் ஆகிய தசரதன், சக்கரவர்த்தி என்ற பெருமையோடு ஆண்டு வந்தான். அவன் உதித்த குலம் சூரிய குலம் என்பர். 

கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது. வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக் கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின. 

சீர்மிகு இராமனின் வாழ்க்கையை உரைப்பது ஸ்ரீராமாயணம்.  அதை செந்தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் நயம்பட உரைத்துள்ளார்.

 

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்

இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்

தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை

சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.

 

நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம். அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம், வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது (காவியம் முழுவதும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது பெயரை எங்கும் கூறவில்லை. தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரை மட்டுமே தொடக்கத்திலும் வெகுசில இடங்களிலும் கூறுகிறார்).

 


இன்று காலை திருவல்லிக்கேணியில் ஸ்ரீராமநவமி உத்சவத்தில் நான்காம் நாள் - தவன உத்சவம்.  ஸ்ரீராமபிரானை கண்டு களியுங்கள்.

 
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
1.4.2025

No comments:

Post a Comment