To search this blog

Sunday, July 25, 2010

Saturmurai Purappadu of Acharyan Aalavanthaar - Gajendra moksham


இன்று (ஜூலை 25) ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். இன்று ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை - கூடவே கஜேந்திர மோக்ஷம். 

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசர்யர் என்கிற ஆளவந்தார்    ( 916-1041 AD ); பல ஆசார்ய சிரேஷ்டர்கள் வேதநூற் பிராயம் எனப்படும் 100 வயது கடந்து வாழ்ந்துள்ளனர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர். 

""ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதி,
 ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே;
அகிஞ்சானோனான்யகதி: சரண்ய!
 த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே!!""
நான் தர்மத்தை அறிந்தவனல்லன். அன்றி தன்னையறிந்தவனுமல்லன். உன்னுடைய பாதகமலங்களை சரணடைந்த பக்தனுமல்லன். வேறொன்றுமறியாது உன்னை சரணடைவதே கதியென்றெண்ணி உன் பாதங்களில் சரணடைகிறேன். என்பது - ஆளவந்தார் வாக்கு. நாதமுனிகள் இல்லாமலிருந்தால் நமக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைத்திராது. சுவாமி நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஒன்று திரட்டியவர். இவருடைய புதல்வன் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துரைவர் எனப்படும் யாமுனாசாரியர். 

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில உள்ள கோவில் ஆளவந்தாரின் திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆனா ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரை பற்றி கூறினாராம். 

ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட. ஒவ்வொரு வருடமும் ஆடி  மாதம் உத்திராட நட்சத்திரத்தில் ஆளவந்தாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.  இவர் அருளிச் செய்த நூல்கள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சதுஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள். 

அடியேன் - சம்பத்குமார்                                                                       
 ஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவையில்
 

சுவாமி ஆளவந்தார்


எனது நண்பர்களுக்கு ஆளவந்தாரை பற்றி தெரிவிக்க பல இடுகைகளையும் படித்து தொகுத்தது . குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.