To search this blog

Sunday, July 25, 2021

Sri Azhagiya Singar Garuda Sevai ~ நாடிநாடி நரசிங்காவென்று

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எளியன்   .. .. தன் பக்தர்களை ஓடோடி வந்து காப்பவன்.  நற்பயன் பெற நாம் என்னென்ன செய்ய வேண்டும் ? -  திவ்யதேசத்தில்,  வசிக்கும் நாம் ஒன்றுமே செய்யவேண்டாம் .. .. எம்பெருமானை நினைத்து, அவன்தம் பெருமைகளை நாம சங்கீர்த்தனம் செய்து, அவன் உறையுமிடங்களுக்கு சென்று, அவர்தம் அர்ச்சாவதார திருமேனியை கைகூப்பி வணங்கினாலே போதுமானது. 



அவ்வாறு திருத்தலங்களுக்கு செல்லும்போது எம்பெருமானுக்கு உகப்பான புஷ்பங்கள், பழங்கள் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள் ! - எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்யுங்கள் ! - அவன் உகக்கும் அவர்தம் அடியார்க்கு - பாகவதர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகள் செய்வோம் .. ..

திருவல்லிக்கேணி ஒரு புண்ணிய பூமி - இவ்வளவு சிறப்பான திவ்யதேசத்தில் வாழும் நாம் புண்ணியம் செய்தவர்கள்.  மிக அழகான திருக்கோவில் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு கிழக்கு வாசல் - திரு அழகியசிங்கப்பெருமாளுக்கு மேற்கு வாசல். நரசிம்ம அவதாரமே உக்கிரத்தின் வெளிப்பாடு - எனினும் இங்கு மூலவர் யோக நரசிம்மராகவும் உத்சவர் மிக அழகிய தெள்ளியசிங்கன் ஆகவும் நம்மை அழைத்து  அருள் தந்து ஆள்விக்கிறார்.

இன்று நரசிம்ம அவதார சாராம்சம் - சிறுவர்களுக்காக (விஷயம் தெரிந்த பெரியவர்கள் அருள் கூர்ந்து இந்த அடியேனின் வார்த்தைகளில் உள்ள பிழைகளை பொறுத்தருள்க !) எம்பெருமான் ஸ்ரீமன் நாரணணின்  திருவவதாரங்களில் நரசிம்ஹ அவதாரம் பெருமை பெற்றது.    இந்த அவதாரத்தின்போது  பெருமாள் சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் தூணிலிருந்து வெளிப்பட்டு தன பக்தனை காத்து அருளினார்.  

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்ஷன் எனும்  இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.  மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

முன்னொரு காலத்தில் அரக்கர்தம் ராஜ்ஜியத்தில் நன்மை குறைந்து தீமைகள், கொடுமைகள் மலிந்து தலை தூக்கி ஆடின.  அரக்கன்  அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்று  ஆணையிட்டு,  இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் கொடூர செயல்கள் பல புரிந்தனர்.  ஹிரண்யகசிபு யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் பெற, அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்தான்.   உருக்கி வார்த்த பொன்மேனியுடன் காட்சி தந்த  பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே, உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக் கூடாது.  எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியா தபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத் தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக் கும் பெருமையை நான் அடைய வேண்டும் அன்று அவரிடம் வரம் பெற்றான். 

வலிமைகளை நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் - ஆனால் அவனது அரக்க குணம் தலை தூக்கி அவனை கெட்ட வழியில் செலுத்தியது.  தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான்.  மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார்.

பிரகலாதன் அரக்கனுக்கு மகனாக வந்து பிறந்தான் - பெரிய பக்தனாக திகழ்ந்தான்.  எவ்வளவு சொல்லியும் எம்பெருமான் வழிபாட்டை நிறுத்தாததால்  சினம் வெகுண்ட ஹிரண்யகசிபு - தனது  மகனையே கொல்ல ஆணைகள் பிறப்பித்தான். பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும்  ஸ்ரீமன் நாரணன்  தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் மகனையும் எம்பெருமானையும்  தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள்  ஸ்ரீமன் நாராயணன்  எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார்,  தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று உரைக்க, 

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ   - பரிபூரண நம்பிக்கையுடன்,  நாரணன் எங்குமுளன் என உரைதான். ஆழ்வார் பாசுரத்தில் உள்ளது போல, அளந்திட்ட அத்தூணை அவன் தட்ட, அங்கேயே எம்பெருமான்  சிங்க உருவாக - ஆளரியாக  நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.  நரசிங்காவென்று வாடிவாடும் ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானுக்குத்தான் உதவவேணும், மற்றையோர்க்கு எளிதில் உதவிடுவான் என்பதில் ஐயமில்லை.. .. இதோ அவ்வெம்பெருமானையே நினைந்து உருகிய ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம். :

ஆடியாடி  அகம்  கரைந்து*, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி*, எங்கும்

நாடிநாடி   நரசிங்காவென்று,

வாடிவாடும்  இவ்  வாணுதலே !!

இப்பாசுரத்தில் நம்மாழ்வார் - பராங்குச நாயகி பாவத்தில் - ஒளிபொருந்திய நெற்றியையுடையளான இப்பராங்குச நாயகி பலகாலும் ஆடி, மனமுருகி,  எம்பெருமானை உகக்கும் பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி, கண்களில் நீர்நிரம்பப் பெற்று, எவ்விடத்தலும் - அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து  நரசிங்கா,  நரசிங்கமூர்த்தியே! என்று கதறி அவன் வரவை எதிர்கொண்டு மிகவும் வாடுகின்றால்.  தன் பக்தர்களுக்கு இரங்கி அவர்தம் குரலுக்கு உடனே பறந்து ஓடி வரும் எம்பெருமான் நம் கோரிக்கைகள் அனைத்துக்கும் செவி சாய்த்து நம்மை காத்து அருள்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.   

Reminiscing the good olden days, here are some photos of the grand Garuda Seva for Sri Azhagiya Singa Perumal during Aani brahmothsavam at Thiruvallikkeni divyadesam on 20.6.2013.

adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
25th July 2021.












2 comments:

  1. அருமையான பக்தி ததும்பும் விளக்கம்

    ReplyDelete