திருவல்லிக்கேணியில் தினமும் ஒரு கொண்டாட்டம் - பெருமாள் எழுந்தருளும் வீதிகளில் அழகு கோலங்கள் மிளிரும். திருவல்லிக்கேணி மகளிர் பலர் மிக அழகாக கோலங்கள் வரைந்து எம்பெருமானுக்கு அர்பணிக்கின்றனர். சில மாந்தர்களும் மிக அழகாக வரைய வல்லார்கள்.
இன்று ஸ்ரீராமபிரானின் திருத்தேர் புறப்பாட்டின் போது பல கோலங்கள் கண்ணை கவர்ந்தன. இந்த கோலம் எப்படி உள்ளது? சில மாதங்கள் முன்னர் திருமதி அரவிந்தா கிருஷ்ணா வரைந்ததை எடுத்த புகைப்படம். இன்று கண்ட கோலம் ஒன்று இதை விட சிறப்பாக மனதை கவர்ந்தது. வரைவாளர் : செல்வி ஜானகி என்கிற கோதா.
தமிழ் மூதாட்டி ஒளவையாரைப் பார்த்து முருகபெருமாள் , ‘ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் அன்பு மொழியால் போக்குங்கள்’ என வினவின கதை அறிவீர்கள் !!
‘முருகா! நீ அறியாதது எதுவும் உண்டா? நீ சாமிநாதனாக இருந்து உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்’ என்றார் ஒளவையார். அப்போது முருகன் கொடியது, இனியது, பெரியது, அரியது எவை என்று கேட்டான்.
அவ்வையார் சொன்ன அற்புத பதில்கள். இந்த உலகில் மிகவும் இனிமையானது எது என்றால், தனிமையில் இருப்பதுதான். அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது. இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.
முருகன் சிறப்பான கோலம் எது? என்று கேட்டு இருந்தால் தமிழ் மூதாட்டி பதில் சொல்ல கஷ்டப்பட்டு இருப்பாள். இந்த கோலம் போட தேரோடும் வீதியில், மாடுகள் சுற்றி வர, வாகனங்கள் அலற, பெரும் பிரயத்யனத்துடன் - கர்மமே கண்ணாக வரைந்த செல்வி கோதா என்கிற ஜானகிக்கு மூன்றரை வயதுதான்.
அழகு ! செல்ல குழந்தைக்கு ஆசீர்வாதங்கள் பெற்றோர் திருமதி விஜயலக்ஷ்மி,
திரு பெரியன் ஜெகந்நாதன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
16.4.2024
No comments:
Post a Comment