To search this blog

Monday, November 27, 2023

Thirukkarthigai Sokkapanai 2023 - அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

இன்று 27.11.2023  திருவல்லிக்கேணியில் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புற கொண்டாடப்பட்டது.  இன்று திருமங்கையாழ்வார் சாற்றுமுறையும் கூட.  நம் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கோபுரவாசல் தாண்டி எழுந்தருளி - திருக்கோவிலில் வாசலில், தெற்கு மாட வீதியில்  சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. 



தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இவ்விழாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு  இனிய கொண்டாட்டங்கள்  நடைபெறும்.  கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.  பனை மரத்தை இலக்கியங்கள் - , `பூலோக கற்பகவிருட்சம்’ என்று போற்றுகின்றன.   கார்த்திகை புறப்பாட்டின் போது சொக்கப்பனை கொளுத்துதல் உண்டு. இது காய்ந்த பனை ஓலைகளால் ஆனது.




பாரதியாரின் தனிப்பாடல்கள் வரிசையில் இந்த பாடலை படித்து, ரசித்து இருப்பீர்கள்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு- தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!”

நூறாண்டுகள் முன் அந்நியரது ஆதிக்கத்தில் நம் தாய்நாடு அடிமைப்பட்டு இருந்தபோது, மக்கள், முக்கியமாக வீர சுதந்திரம் வேண்டி நின்றோர் சொல்லொணா துன்பங்களை சந்தித்தனர்.   பிரிட்டிஷ் நாட்டவர் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் விடுதலை எனும் தீப்பொறியை ஏற்றி வைத்தேன். அதன் தாக்கத்தால் அனைவரது மனங்களிலும் படர்ந்திருந்த அடிமைத்தனம் எனும் காடு அழிந்தது. அடிமைத்தனக் கொடுமையில் ஆட்பட்டு அதிலிருந்து மீள முயல்வோர்க்கு சிறு பொறியளவிலான விடுதலை வேட்கையே போதுமானது. அச்சிறு பொறி பல்கிப்பெருகி அதன் தாக்கத்தால் அடிமைத்தளை நீங்கும். 

ஆங்கிலேயர்களால் பலமுறை சிறை பிடிக்கப்பட்டு கடின வாழ்க்கை வாழ்ந்த திருவல்லிக்கேணி வாசி மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் தம் பாடல்கள், மேடை பேச்சுகள் மூலம் மக்கள் மனதில் தீப்பொறி ஏற்றினார்.  மனித மனமும் ஒரு காடுதான்.  அழுக்காறுகள் அதில் உள்ள மரங்கள், இதில் ஒரு மரத்தின் பொந்தில் ஞானத்தீயின் ஒரு சிறுபொறியை பாரதி வைக்க,  அந்நெருப்புப் பொறியின் தாக்கத்தால் அம்மரங்கள் அடர்ந்த அக்காடு அழிந்தது. அதாவது மன அழுக்குகள் அனைத்தும் அழிந்து ஒழிந்தது. ஞானவேட்கையில் ஆட்பட்டு தெளிவுபெற முனைவோர்க்கு சிறு பொறியளவிலான ஞானமே போதும். அதன் தாக்கத்தால் மனசஞ்சலம் அனைத்தும் தீரும். 

பாரதி கனவு கண்ட பாரதம் இன்று பொலிவுற்று பாரில் உள்ள தேசங்களில் உன்னதமான நாடாக திகழ ஆரம்பித்துள்ளது. 

திருக்கார்த்திகை சொக்கப்பனை தீ  போல துன்பங்கள் ஓடட்டும் !  மக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மைகள் விளைந்து, நல்லனவும் இனியனவும் நடக்கட்டும்.  

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே உன் பாதமே கதி 

Photos of  Thirukarthigai deepam, chokkapanai, Thirumangai Mannan sarrumurai will be uploaded separately later. 

~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
28.11.2021.  







No comments:

Post a Comment