To search this blog

Tuesday, November 14, 2023

அன்னக்கூட உத்சவம் 2023 - அருங்கல உருவின் ஆயர் பெருமான்

அருங்கல உருவின் ஆயர் பெருமான்



சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் திருவிழா என்றவுடன் ராட்டினம், பச்சை குத்துபவர்கள், வளையல் வண்டிக்கார்கள், பலூன் விற்பவர்கள் எனக் கிராமமே களைகட்டும்.  பல பழைய படங்களில், வளையல் விற்பவர்கள் கதாபாத்திரமாக வருவது நினைவு இருக்கலாம். வாழ்க்கை மாறிவிட்டது.  வளையல்  பழங்காலத்திலிருந்தே ஒரு அலங்காரப் பொருளாக இருந்து வருகிறது. பாரம்பரியமாக, திருமணமான பெண்கள் மட்டுமல்லாமல்  எல்லா பெண்ணினத்துக்கும் பிடித்த ஆபரணம் வளையல். வளையலுக்கென்று தனி வரலாறே உள்ளது. ஆரிய நாகரிகம் முதல் ரோமானியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள் போன்றோர் வளையலை பாதுகாப்பு அணிகலனாக பயன்படுத்தி வந்தார்கள் என்று பல பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.  இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகட் மற்றும் சால்சிதோனி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட வளையல்கள் கிடைத்துள்ளன. வளையல் அணிவது உடல் ஆரோக்கியம், அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது.



கன்றுகள் மேய்த்து தம் தோழரோடு வலம் வந்த மாயோன் கண்ணபிரான்.  இன்று 14.11.2023   திருவல்லிக்கேணியில் அன்னக்கூட உத்சவம்.  அருங்கல உருவின் ஆயர் பெருமான்  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் 'ஆயர் குலத்தில்வந்து உதித்தவராக  கோல் (சாட்டை)தலைப்பாகை,  தண்டம்என அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார்.   

இன்று பெருமாளுக்கு கதம்பம் முதலான அன்னங்கள் அமுது செய்விக்கப் படுகின்றன.  'இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில்’  என  'கோவர்தனகிரி'  பிரபாவம்   நினைவு கூறப்படுகின்றது. ஸ்ரீபார்த்தசாரதி  பெருமாள் 'ஆயர் குலத்தில்' வந்து உதித்தவராக  கோல் (சாட்டை), தலைப்பாகை,  தண்டம், என அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார். "சீலை குதம்பை ஒரு காது, ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ" என கண்ணன் கன்றுகள் மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்ந்ததை பெரியாழ்வார் அனுபவித்த வண்ணம், ஸ்ரீபார்த்தசாரதி தனது காதுகளில் 'ஓலை மற்றும் பூ' போன்ற திருவாபரணங்களை அணிந்து கொண்டு அழகான பட்டு உடுத்தி, கைகளில் வளைகள் அணிந்து சேவை சாதித்தது நம் போன்றோர்க்கு கிடைத்தற்கரியது.   

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒரு அற்புதம்.  எம்பெருமான் இடையனாக, பலப்பல கஷ்டங்களுக்கு நடுவே நாளொரு மேனியும் பொழுதொரு  அற்புதலீலைகளுமாய் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான்.  யசோதாபிராட்டியும் மற்றைய ஆயரும் கொஞ்சி குலாவி பாலூட்டி சீராட்டி கண்ணனை வளர்த்தனர்.  கண்ணனும் பலராமனும் “காடுகளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி” என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள்தோறும் திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே சென்று வந்தான்.  

மழைக்கும் மேகத்துக்கும் அதிபதி இந்திரன். அவனே தேவர்களுக்கும் அதிபதியானதால் தேவேந்திரன் என்ற திருநாமத்தைப் பெற்றான். இந்திரனின் பெருங்கருணையால் மாதம் மும்மாரி பெய்து நிலங்களில் பயிர் செழுமையாக விளைந்து, மக்கள் பசிப்பிணியின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நன்றியை இந்திரனுக்குத் தெரிவிப்பதற்காக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதல் பயிரை அவனுக்கே படைத்தனர். இதனை ‘இந்திர விழா’ என்று கோலாகலமாகக் கொண்டாடினர்.  நான் மட்டுமே அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறேன். என்னையன்றி மக்களுக்கு நன்மைகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை!’ என்ற அகம்பாவம் இந்திரனுக்கு மிக அதிகமாக இருந்தது. இந்தச் செருக்கை அடக்கிட பரந்தாமனானகண்ணபிரான்,  ஒரு விருத்தாந்தம் அருளினார்.   

கர்வத்தில் தன் மதி இழந்த பலவகையான மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் ‘ஸாங்வர்த்தக’ என்ற கொடிய மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் ஒரே மூச்சில் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்திரன், விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்படி ‘ஸாங்வர்த்தக’ மேகத்திற்குக் கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின்மேல் தோன்றி, தம் பலம் முழுவதையும் பிரயோகித்து அழிவை ஏற்படுத்தத் தொடங்கின. ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன.   

மாடுகளும், கன்றுகளும் கஷ்டப்பட, மனிதர்கள் பெரும்பயத்துடன் கிருஷ்ணனைசரணடைந்து, ‘‘கிருஷ்ணா, நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று தீனக்குரலில் வேண்டினர்.   இடி, மின்னல், மழையோடு பெருங்காற்றும் வீசியதால் ஒவ்வொரு ஜீவராசியும் கடுங்குளிரால் நடுங்கின.  ‘பக்தர்களே! நீங்கள் யாவரும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்ச வேண்டாம். அதை நான் இந்த மலையைத் தூக்கிப் பிடித்துத் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள இடங்களில் அவரவர் விருப்பம்போலச் சுகமாக இருக்கலாம். மலை மேலே விழுந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்!’’ என்று கூறியபடியே மலையைத் தனது விரலாலே கிருஷ்ண பகவான் தாங்கிப்பிடித்துக்கொண்டார்.  தமது இடதுகையின் சுண்டுவிரலின் நுனியில் நிறுத்தியிருந்ததைக் கண்டும், பசி, தாகம், வேறு எந்தவிதமான கவலையுமில்லாமல்  அவர் முகம் ஒளிவிட்டதை எண்ணியும் ஆச்சர்யமடைந்தார்கள், அவ்வூர் மக்கள். . ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய, சுவாமியும் அந்த கோவர்த்தனகிரி மலையை குடைபோல ஏந்தி அனைவரையும் காத்தருளினார்.

 அன்னக்கூட உத்சவத்தன்று  'கோவர்தனகிரி'  பிரபாவம்   நினைவு கூறப்படுகின்றது. மஹாபாரதத்து  நாயகன்  ஸ்ரீகண்ணபிரான்  வட மதுரையில் பிறந்து, திருவாயர்ப்பாடியில் சிறப்புற வளர்ந்த ஒவ்வொரு பருவத்தையும் பெரியாழ்வார் தமது பெரியாழ்வார் திருமொழியில் அழகாக உரைக்கின்றார்.  மாயக்கண்ணன் கற்றினம் பசு  மாட்டுக்கன்றுகளை மேய்த்து வருவதைக்கண்டு யசோதை மகிழும் பாசுரம் இங்கே : 

சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிறமேல்  தோன்றிப்பூ*

கோலப்பணைக் கச்சும்  கூறையுடையும் குளிர்முத்தின்  கோடாலமும்*

காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்*

ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே  மற்றாருமில்லை. 

நங்கைமீர்காள்  அனைவரும் வாருங்கள்   ~   ஒரு காதிலே,  சீலைக்குதம்பை (காது துளையைப் பெருக்குவதற்காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள்) என  ஆபரணத்தையும், மற்றொரு காதிலே செங்காந்தள் பூவையும் (அணிந்துகொண்டு);  திருப்பரிவட்டத்தின் உடுப்பையும், அது நழுவாமைக்குச் சாத்தின அழகிய பெரிய கச்சுப்பட்டையையும், குளிர் முத்தாலே தொடுக்கப்பெற்று பிறைபோல் வளைந்திருக்கின்ற ஹாரத்தையும் - உடைகளாய் அணிவித்துக்கொண்டு, கன்றுகளின் பின்னே வருகின்ற கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய  வேஷத்தை வந்து பாருங்கள்;   இந்த பூமண்டலத்திலே பிள்ளையை பெற்றவர்களுள், நானே நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத்தக்கவள் !  வேறொருத்தியுமில்லை என யசோதை மகிழ்ந்தாளாம். 





தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. நன்கு பலமாக பெய்து வரும் மழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளிகள் / கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இன்று மதியம் முதலே திருவல்லிக்கேணியில் பலத்த மழை பெய்து வருவதால் - இன்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் 8ம் உத்சவ புறப்பாடு நடைபெறவில்லை.  அன்னக்கூட உத்சவம் சிறப்பாக திருக்கோவிலில் நடைபெற்றது.  மதியம் திருமஞ்சனத்திற்க்கு பிறகு - திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருமொழி 6-7-8 பதிகங்களும், இரவு திருவாய்மொழி 8ம் பத்தும் சேவிக்கப்பெற்றது.

இங்குள்ள படங்கள் சென்ற (2022) வருடத்து அன்னக்கூட உத்சவ சிறப்பு படங்கள்.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
14.11.2023          




No comments:

Post a Comment