To search this blog

Monday, January 13, 2025

திருவாதிரை - ஆருத்ரா தரிசனம்

 

திருவாதிரையும் களி  -   ஆருத்ரா தரிசனம்

 

 மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.  ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு  உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர்.  

 


மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்

வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்

ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே

ஆனந்தமாகி நின்றாடாமோ தோணோக்கம்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

 

மங்கைப்பருவத்தையுடைய நல்ல பெண்களே,  அடியோங்கள்,  ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற இறைவனது திருவருளைப் பெற்றுள்ளோமென்றால், அபிமானம் கெட்டோமாயினோம், நம்மை மறந்தோமாயினோம், ஆகையால்,  நாம் அவ்வாறே,  விண்ணுலகத்தவர் வணங்குகின்ற தென்னவனாகிய அவனது, நீண்ட வீரகழலையணிந்த திருவடிகளையே நினைந்து, ஆனந்தம் அடைந்து  தோணோக்கம் ஆடுவோம். 

'தோணோக்கம்' மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று.   இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார். 

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் சிவ வழிபாட்டுக்கு உகந்த நாள். அன்று ஆருத்ரா தரிசனத்தில் இறைவன் அருள்பாலிப்பார்.    பதஞ்சலி முனிவர் ஈசனின் திருநடனம் காண வேண்டித் தவம் புரிந்தார். அப்போது இறைவன் அசரீரியாக  'திருவாதிரைத் திருநாளில் எனது திருநடனக் காட்சியைக் காண்பாய் '  என்று வாக்களித்தார்.அதன்படி பதஞ்சலிக்கு  மார்கழித் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம் தந்து ஆட்கொண்டார். 

திருவாதிரை நாளில் இறைவனுக்குக் களி படைப்பது சிறப்பு.  தினமும் சிவனடியார் ஒருவருக்கு அமுதிட்டு உண்ணும் வழக்கம் கொண்ட சேந்தன் இல்லத்தில் இறைவன் களி உண்டு அவன் புகழை உலகறியச் செய்த தினமும் மார்கழித் திருவாதிரையே.   இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. 

நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அந்த ஆறு  நாட்களில் மார்கழி மாதத் திருவாதிரை அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.   திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாக -  களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.

 



நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு:  திருவாலங்காடு(ரத்தின சபை), சிதம்பரம்(கனக சபை), திருநெல்வேலி(தாமிர சபை), மதுரை(வெள்ளி சபை), குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.  சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே பராந்தக சோழனால் கட்டப்பட்ட  நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம்

 



இன்று திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் திருக்கோவிலில், ஆனந்த நடனமாடும் நடன சபாபதி நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் மற்றும் மாணிக்க வாசகர் - முத்தங்கி சாற்றிக்கொண்டு சேவை.
 
அடியேன் தாசன் - திருவல்லிக்கேணி வாழ் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
13.1.2025

No comments:

Post a Comment