To search this blog

Wednesday, November 13, 2024

Thamizh Thalaivan Sri Peyazhwar Sarrumurai 2024

அகடு;  அஞர்;  அண்ணாத்தல்;  அற்றம்;  இகல்; இலங்கிழாய்;  உண்கண்; உயல்; உய்யா;  கெடுஆக; கெழுதகைமை;  கேண்மை         .. .. …  சந்தேகம் வேண்டாம் !    தமிழ் சொற்கள் தாம் !!  இவற்றில் எவ்வளவுக்கு உங்களுக்கு அர்த்தம்  தெரியும் ????



Sunday 10th Nov 2024   was  ‘Aippasiyil Sadayam’ marking the sarrumurai vaibhavam of –  Thamizh Thalaivan Sri Peyalwar.   




எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனிடத்தில்  பக்தி  மூலம் ஒன்றியுணர்தலை மையமாக கொண்டு  அவர்தம் கல்யாண குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர்களே  ஆழ்வார்கள். பக்தன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான, இறைவன் மீது பக்தி செலுத்துதல் என்பது காம்ய பக்தியாகும்.  ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருள்பெற்று எம்பெருமானையே சிந்தித்து, எந்த பலனையும் எதிர்பார்க்காமல்,  அவர் மீது பாசுரங்கள் பாடி வணங்கி தொழுதார்கள்.  பரம்பொருளான ஸ்ரீமன் நாரணனை   எண்ணி எண்ணி மகிழ்ந்து, பக்தி மேலீட்டால் ஆடுதல், பாடுதல், அழுதல், சிரித்தல் முதலான செயல்களைச்  செய்தமையால்     பேயாழ்வார் என அழைக்கப்பட்டார்.

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – என  ஸ்ரீமணவாள மாமுனிகள் தமது 'உபதேசரத்தினமாலையில்' எடுத்து உரைத்தார். இவை எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - இவ்வுலகில் வந்துதித்த நாள்கள். பன்னிரு ஆழ்வார்களில் முதலில் வந்துதித்ததனால் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் இவர்கள்.  ஸ்ரீ மணவாள மாமுனிகள்  "உபதேசரத்தினமாலை"யில் மேலும்  :

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *

நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * -

பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *

நின்றது உலகத்தே  நிகழ்ந்து  --  என சிறப்பித்தார். 

நம் நாலாயிர திவ்யப்ரபந்தத்திலே - இசைப்பா, இயற்பா எனப் பிரித்து, இசைப்பாக்களை மூன்று பகுதிகளாகவும், இயற்பாக்களை ஒருபகுதியாகவும் ஸ்ரீமன் நாதமுனிகள் வகுத்தருளினார். அவற்றில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா, இயலாகச் சேவிக்கத்தக்கது எனும் பொருளில் அவ்வாறு பெயர்பெற்றது.  முதலாவார் மூவரே என பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரின் படைப்புகளும் தான் இயற்பாவின் ஆரம்பம்.  திருக்கோவலூரிலே ஒரு இடைகழியிலே, ஒரு மழை நாளிலே, மூவரும் சந்தித்த போது - அவர்கள் அடைந்த ஆனந்த அனுபவமே இந்த  அந்தாதிப்பாடல்கள் - முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள்.  

பக்தி இலக்கியத்தில்  அகவல், வெண்பா, தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் சிறப்புற அமைந்துள்ளன. வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள்.  முதலாழ்வார்கள் மூன்று திருவந்தாதிகளும்  வெண்பாக்களே.

ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார்- திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் அருள்மிகு ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோவில் மிக அருகே  உள்ளது.  

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்று சொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலை ஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த தெரு "பேயாழ்வார் தெரு".   

முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர்.  ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்தபோது, முதலில் பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு  (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார். 

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து:  

"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்,*

என்னாழி வண்ணன் பால் இன்று"  -

                                என "மூன்றாம்திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார். 

            On Peyalwar sarrumurai day – first Sri Peyalwar would come in pallakku to the sannathi – then there will be the short purappadu of Sri Parthasarathi perumal to Peyalwar sannathi – thriumanjanam – thirumozhi goshti, Moonram thiruvanthathi;  in the evening there would be periya mada veethi purappadu ; thiruvaimozhi goshti in Peyazhwar sannathi and Perumal along with azhwar would return to Thirukovil late in the day.  Next day morning would be ganthapodi uthsavam of Azhwar.   Here are some photos of the evening  purappadu of Peyazhvar with Sri Parthasarathi Perumal. 


திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே *

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே *

மருக்கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே *

மலர்க்கரிய நெய்தல் தனில் வந்துதித்தான் வாழியே *

நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே *

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே *

பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன் வாழியே *

பேயாழ்வார் தாளினை இப் பெருநிலத்தில் வாழியே *

 

அகடு - வயிறு; அஞர் - துன்பம்; அண்ணாத்தல் - வாய் திறத்தல்; அற்றம் –அழிவு; அற்றம் - கெடுதல், குறைகள்; இகல்- மாறுபாடு-பகை; இலங்கிழாய் - ஒளிவீசும் அணி; உண்கண் -      மை எழுதிய கண்கள்; உயல் – இருத்தல்; உய்யா -மீளா; கெடுஆக – வறுமையாக; கெழுதகைமை – உரிமை; கேண்மை – நட்பு  .. .. .. 

இவற்றை தமிழ் மொழி இலக்கணத்தில் ' அருஞ்சொற்கள்' எனலாம். சொற்களைப் பற்றிய வகைப்பாடுகளில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நான்கினை அறிவோம். இவற்றில் பெயர்ச்சொற்கள் என்பவை மொழிக்குத் தலையானவை. பெயர்ச்சொற்களே யாவற்றுக்கும் முதலாக நிற்பவை. எவ்வொன்றையும் பெயரைக்கொண்டுதான் குறிப்பிட வேண்டும். மொழி தோன்றியதற்கு முதற் காரணமே ஒவ்வொன்றையும் பெயரிட்டு வழங்கியாக வேண்டும் எனும் கட்டாயம்தான்.  

பெயர்கள் தோன்றிய பிறகு அப்பெயர்க்குரியவை என்னென்ன செயல்களைச் செய்தன என்று மொழிக் கல்வி விரிந்தது.  அந்த வெளிப்பாடுகளைத் தெரிவிக்க வினைச்சொற்கள் தோன்றின. பெயர்க்குரிய ஒன்று செய்யும் தொழிலை வினைச்சொற்கள் விளக்கின. பெயரும் வினையும் தோன்றியபோது  எவ்வொன்றையும் பெயர் சொல்லிக் குறிப்பிடலாம். அங்கே நடக்கும்  தொழிலையும் உணர்த்திவிடலாம்.  

விண்ணிலிருந்து விழும் நீர்த்துளிகளுக்கு 'மழை'  என்று பெயர் - அது என் செய்யும் எனின் - மழை பொழியும் !   “மழை பெய்தது” எனும்போது, அது வானில் இருந்து பொழியும் மழை நீரை, அந்த செயலை குறிக்கிறது.  அவ்வாறு மழை பொழிதல்  நின்றால்  'மழை ஓய்ந்தது'.  மழை இன்றும் பெய்கிறது !!  ஆனால் முன்னாளில் மனிதர்கள் செய்த சில செயல்கள் இன்று வழக்கொழிந்துவிட்டன !!  தானியங்களில் கலந்திருக்கும் உமியையும் தூசுகளையும் பொடிக்கற்களையும் புடைத்து அகற்றுவதற்கு “முறம்” என்ற மூங்கிலில் முடைந்த அகன்ற தட்டுகளைப் பயன்படுத்தினார்கள். முறத்தின் பயன்பாடு காலப்போக்கில் குறைந்தது. இன்று முறத்தைப் பயன்படுத்தி தானியம் புடைப்போர் இல்லை.  அவ்வாறு அந்த செயலும் இல்லாமல், செய்த அந்த  முறம் என்ற பொருள் வழக்கொழிந்தால் அந்தச் சொல் பயனற்றுப் போகும். முறத்தினால் செய்யப்படுகின்ற   வினைச்சொற்கள் ஆன புதைத்தல், சளித்தல், தூற்றுதல் போன்றன பின்னால் வரும் சந்ததியனர்க்கு  தெரியாமலே போய் விடும் !!  இவ்வாறாக மொழியின் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் தோன்றி வளர்ந்து பயன்பட்டு, பிறகு மறைந்து வழக்கொழிந்து அருஞ்சொற்களாக மாறுகின்றன.

 

adiyen Srinivasadhasan.  
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.11.2024










 

  

No comments:

Post a Comment