காலை வேளைகளில் மரங்கள் அடர்ந்த பகுதியில் கிளிகள் கீச் கீச் என்று
சத்தம் எழுப்பும். கிளிகளின் குரலை 'பேசுதல்'
என்கின்றனர்.
புரட்டாசி மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். எல்லா ஸ்ரீவைஷ்ணவ தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவேங்கடவன் இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக சென்று வணங்குகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலையில் "பிரம்மோத்சவம்" சிறப்புற நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் "நவராத்திரி" வருகிறது. புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நாளை சரஸ்வதி பூஜை. ஞாயிறு 13.10.2024 அன்று விஜயதசமி.
எல்லா ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களிலும் நவராத்திரி சிறப்புற கொண்டாடப்படுகிறது.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே - நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வேதவல்லி தாயார் வாகனங்களில்
உள்புறப்பாடு நடைபெறுகிறது. இரண்டாம் உத்சவத்தன்று ஸ்ரீ வேதவல்லி தாயார் கிளி வாகனத்தில்
புறப்பாடு கண்டருள்கிறார். நவராத்திரி புறப்பாடு எல்லா நாட்களிலும் திருமங்கை
மன்னன் அருளிச்செய்த 'சிறிய திருமடல்' சேவிக்கப்பெறுகிறது. நிறைய சிறுவர்களும் அருளிச்செயல் கோஷ்டியில் கலந்து
கொண்டு உச்சஸ்தாயி குரலில் மடல் சேவிப்பது மிக அருமையாக, இனிமையாக, இருக்கும்.
இனிய நற் சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத - கொடிய, தவறான சொற்களைக் கூறுதல், இனிக்கும் சுவை மிகுந்த கனி இருக்க காயைத் தின்பது போன்றதே என்பது திருவள்ளுவரின் வாய்மொழி.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
திருமங்கை மன்னன் சிறியமடல் பாசுரத்தில் - ஏரார்முயல்விட்டு காக்கைப்பின் போவதே? என வினவுகிறார். கறுப்பு நிறம் கொண்ட காக்கை அப்படி ஒன்றும் மனிதர்களுக்கு
பிடித்ததன்று! (மனிதர்கள் வேலைகளை செய்துகொள்ள
காக்காய் பிடித்தல் வேறு ரகம்) - இப்பூவுலகில்
மனிதர்கள் பலர் அழகான ஒன்றை பார்க்கும் பொது ஏனைய பிறவற்றை விலக்கி எள்ளி நகையாடுவர். வெள்ளை நிற
முயல்கள் மிக அழகானவை. இன்பத்தை விட்டு
விட்டு சாதாரனவற்றை தேடி அலைவது முயலை விட்டு விட்டுக் காக்கையின் பின் போவது போன்றது
என்று சிறிய திருமடல் கூறுகிறது.
அழகிய முயலைவிட்டு- அழகற்ற, உபயோகமற்ற காக்கையின் பின்னே தொடர்ந்து போவாருமுண்டோ? நிலத்திலே ஓடுவது முயல், மரங்களின் மேலே பறந்து திரிவது காக்கை, மாம்ஸம் வேண்டியவன் கைப்பட்ட முயலைவிட்டுக் கைப்பட அரியதும் கைப்பட்டாலும் உபயோகப்படாத்துமான காக்கையைப் பின்பற்றித்திரிதல் எப்படி அவிவேகிக்ருத்யமோ, அப்படியே எளிதாயும் ரஸவத்தரமாயுமுள்ள அர்ச்சாவதார போகத்தைவிட்டு அரிதாயும் அஸாரமாயுமுள்ள மோக்ஷபோகத்தைப்பெற விரும்புகையும் பேதைமையின் பணி என்றாராயிற்று. (கச்சி ஸ்வாமி வியாக்கியானம்) [திராவிடவேதா இணைய களஞ்சியம்]
இதே கருத்து சைவ திருமுறை பாசுரத்தில் உள்ளது. நக்கீரதேவ நாயனாரால் எழுதப்பட்ட 'கோபப் பிரசாதம்' எனும் நூல் ஆசிரியப்பாவால் ஆனது. புலவர் கூற்றுவன் மேல் கோபம் கொண்டு பாடிய செய்தியைக் கொண்டது. பயனற்ற செயல்களைச் செய்கின்ற மக்களை, யமன் கொண்டு போகாமல் இன்னும் உலகில் வைத்திருப்பது ஏன் என்று, இயமன் மீது கோபம் கொண்டு பாடிய பாடல். ஆதலால், "கோபப் பிரசாதம்" எனப்பட்டது.
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்றறி வரியவன் .. ..
தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக் காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருக்க மின்மினி கவரும் அளப்பருஞ் சிறப்பில்
ஆதர் போலவும்
இதோ இங்கே நாச்சியார் கோவில் திவ்யதேசத்தில் கிளி வாகனத்தில் அருள்
பாலித்த ஸ்ரீவஞ்சுளவல்லி தாயார் சேவை. இரண்டொரு
வருஷங்கள் முன்பு ப்ரஹ்மோத்சவத்தில் எடுக்கப்பட்டது.
மாமண்டுர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
11.10.2024
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment