To search this blog

Friday, May 3, 2024

Thiruvallikkeni Iyal Sarru 2024

மயர்வறமதிநலம்  அருளப் பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல் ஸ்ரீநாலாயிர திவ்யப்ரபந்தம்.  இதில் மூன்றாவதாயிரம் - "இயற்பா" என சிறப்பு பெற்றது.  வைணவ திருத்தலங்களில், தென்னாசார்ய ஸம்ப்ரதாய முறை கொண்டாடப்படும் கோவில்களில்,  இயற்பாவுக்கு மங்களமாக  'இயற் சாற்று" சேவிக்கப்பெறுகிறது. 

 


இது நமக்கு ஆசார்யன் பொய்யிலா மணவாள மாமுனிகள் தொகுத்து அளித்தது. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் சித்திரை ப்ரஹ்மோத்சவத்திலே சப்தாவரணம் அன்று (2.5.2024) இரவு வெட்டிவேர் சப்பர புறப்பாடு முடியும் அவயம் சேவிக்கப்பெற்ற  இயல் சாத்து  காணொளி இங்கே :   https://youtu.be/UYgF9z9m1vg?si=8CH03KytHnSYNE38

 

 

(பிள்ளை உறங்காவில்லி தாசர் அருளிச்செய்தது)

 

நன்றும்  திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்

ஒன்றும் குறையில்லை  ஓதினோம்,-குன்றம்

எடுத்தான்  அடி சேர்  இராமாநுசன்  தாள்

பிடித்தார் பிடித்தாரைப் பற்றி.

 

(வகுளாபரண பட்டர் அருளிச்செய்தது)

 

வாழி திருக்குருகூர் வாழி திருமழிசை,

வாழி  திருமல்லி வளநாடு, - வாழி

சுழிபொறித்த நீர்ப்பொன்னித் தென்னரங்கன் தன்னை,

வழி பறித்தவாளன் வலி.

 

 

 

(ஸ்ரீபராங்குச தாசர் அருளிச்செய்தது)

திருநாடு வாழி திருப்பொருநல்  வாழி,

திருநாட்டுத் தென்குருகூர்  வாழி,-திருநாட்டுச்

சிட்டத் தமர்வாழி வாழி சடகோபன்,

இட்டத் தமிழ்ப்பா விசை.

 

(பரகால தாசர் அருளிச்செய்தது)

மங்கைநகர் வாழி வண்குறையலூர் வாழி,

செங்கையருள் மாரி சீர்வாழி,-பொங்கு புனல்

மண்ணித் துறை வாழி,  வாழி பரகாலன்,

எண்ணில் தமிழ்ப்பாவிசை.

 

(பிள்ளை இராமாநுசதாசர் அருளிச்செய்தது)

வாழியரோ தென்குருகை வாழியரோ தென்புதுவை,

வாழியரோ தென்குறையல், மாநகரம் - வாழியரோ,

தக்கோர் பரவும் தடஞ்சூழ் பெரும்பூதூர்,

முக்கோல் பிடித்த  முனி,

 

(திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்தது)

மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்

குழியைக் கடக்கும் நம்  கூரத்தாழ்வான் சரண் கூடியபின்,

பழியைக் கடத்தும்  இராமாநுசன் புகழ் பாடியல்லா

வழியைக் கடத்தல், எனக்கினியாதும் வருத்தமன்றே.

 

(பிள்ளை அழகிய மணவாள தாசர் அருளிச்செய்தது)

நெஞ்சத்திருந்து நிரந்தரமாக, நிரயத்துய்க்கும்

வஞ்சக் குறும்பின் வகையறுத்தேன்,மாய வாதியர்தாம்

அஞ்சப்பிறந்தவன் சீமாதவனடிக்கன்பு செய்யும்

தஞ்சத்தொருவன், சரணாம் புயமென் தலைக்கணிந்தே.

 

(பின்பழகராம் பெருமாள் ஜீயர் அருளிச்செய்தது)

ஊழிதொறும்  ஊமூழிதொறும்  உலக முய்ய

உம்பர்களும் கேட்டுய்ய, அன்பினாலே

வாழியெனும் பூதம் பேய் பொய்கை மாறன்

மழிசையர்கோன் பட்டர்பிரான் மங்கை வேந்தன்,

கோழியர்கோன் தொண்டர்துகள் பாணன் கோதை

குலமுனிவன் கூறியநூ லோதி – வீதி

வாழியென வரும்திரளை வாழ்த்துவார்தம்

மலரடி  என் சென்னிக்கு மலர்ந்த பூவே.

 

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
2.5.2024


No comments:

Post a Comment