Muthangi Samarpanai for Sri Varadharajar @ thakkankulam, Sholinghur
புகழ்பெற்ற திவ்யதேசங்களிலே சோழசிம்ஹபுரம்
[எனும் ஷோலிங்கர்] ஒரு அற்புத திவ்யதேசம். இது மலைகளில் அமைந்துள்ளது. கடிகாச்சலம் என பெயர் பெற்ற இந்த திவ்யதேசத்தில்
ஒரு நாழிகை வாழ்ந்தாலே எல்லா நன்மையையும் பயக்கும். பெரிய மலையில் (சுமார் 1300 படிகள் மேல்
ஏறிச்சென்று சேவிக்க வேண்டும்) எம்பெருமான் - சங்கு சக்ரதாரியாக யோக பீடத்தில் யோக
ந்ருஸிம்ஹனாக சேவை சாதிக்கின்றார். சிறிய மலையில்
யோக நிஷ்டையில் சிறிய திருவடியும் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உத்சவர் அக்காரக்கனி எம்பெருமான் (ஸ்ரீ தக்கான்)
கொண்டபாளையம் ஊரில் அமர்ந்துள்ளார்.
திருக்கச்சி ப்ரஹ்மோத்சவ வைபவத்தில்
மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு
எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் - ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை
என்று சிறப்புற வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில்
காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.
இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும்,
மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில்
மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக்
காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும்
இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். எம்பெருமானின் வாகனமான பெரிய திருவடி கருடாழ்வார்
'ஸ்ரீமன் நாரணனே' பரம்பொருள் என விளக்கும் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும்
கிடைக்கும்
மூலவராக இருக்கின்ற கருடன் உடலில் எட்டு
நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம்,
காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில்
ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச்
சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில்
அமைந்துள்ளது.
இந்த திருக்கோவில் நம் தொட்டையாச்சார்
பரம்பரையினரால் சிறப்புற கைங்கர்யங்களுடன் மிளிர்கிறது. சில ஆண்டுகள் முன்னர் நம் ஆச்சார்யரால் இந்த திருக்கோவிலில் புனருத்தாரணம் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம்
சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீ உ.வே. கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டையாச்சார் சுவாமி வம்சத்தினரே
இத்திருக்கோவிலின் பரம்பரை ஆதீன அறங்காவலர்கள்.
இந்த திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும்
உற்சவருக்கு அழகான வேலைப்பாடுகள் கொண்ட முத்தங்கி,
இன்று (25.7.2026) திரு கோபி குடும்பத்தினரால் நமது ஆச்சார்யர்
மூலமாக சமர்ப்பணம் செய்யப்பட்டு, சகஸ்ர தீப அலங்கார சேவை மிக சிறப்புற நடைபெற்றது. இந்த வைபவத்தின் சில படங்கள் இங்கே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!
adieyn Srinivasa
dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





No comments:
Post a Comment