To search this blog

Saturday, February 3, 2018

Thirumazhisai Alwar Sarrumurai at Thiruvallikkeni 2018

Thirumazhisai Alwar Sarrumurai at Thiruvallikkeni 2018

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.

நம் காதுகளுக்கு இனிமையாக ஒலிக்க வல்லது எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணின் திருநாமங்கள் மட்டுமே !   அந்த இனிய திருநாமமே  இப்பூவுலகில்  வசிப்பவரெல்லாம் கவலையற்று  ஒதுங்குவதற்கு  இடமாகவும் அமையும்.  மகா புருஷனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மட்டுமே பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருப்பவன் .  அவனையே தெய்வாதீனமாக அடையப்பெற்றேன், ஆராய்ந்து பார்த்தால் வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.


எம்பெருமானைத் தவிர்த்து மற்றையோரைச் கவிபாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருடித் திருடிக் கவிபாட வேண்டும். அங்ஙனன்றிக்கே எம்பெருமான் கவிக்கு நிறைந்த பொருளாயிருப்பன்,  என்று அறுதியிட்டு உரைத்தவர் 'உறையிலிடாதவர்' என பிரசித்தி பெற்ற  நம் திருமழிசைப்பிரான்


சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை". - உலகு மழிசையும் உள்ளுணர்ந்து,உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மாநீர் மழிசை வலிது என பிரசித்தி பெற்ற இத்தலத்தில்   துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தைமாசம்  கிருஷ்ணபக்ஷம் பிரதமை திதி கூடிய மகம் நட்சத்திரத்தில்பார்க்கவமுனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக  திருமழிசைப்பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம். 




திருமழிசை ஆழ்வார்   இவ்வுலகத்தில்   இருந்தது 4700 ஆண்டுகள்.  அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக  வாழ்ந்திருக்கிறார் என்று வைணவ ஆசாரியர்கள் அருளிச்செய்த "பன்னீராயிரப்படி" வியாக்யானம் தெரிவிக்கிறது.   தனது காலத்திலே, ஆழ்வார்  சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று, அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார். 

"சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்" என்று உரைத்தார்.

சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல், பின்னர் பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 -  நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார். 

A great day today  ~ Friday 2nd Feb 2018 happens to be Magam in the month of Thai marking the birth anniversary of Sri Thirumazhisai Azhwar.  Thirumazhisaippiran’s  works are : Naanmukhan Thiruvanthathi (96) and Thiruchanda Virutham (120).  He was born in the Magam nakshathiram of Thai month.   Here are some photos taken during the Sarrumurai purappadu at Thiruvallikkeni divyadesam  of Thirumashisai Alwar with Sri Varadha Rajar.


இன்று இவரது சாற்று முறை மஹோத்சவத்தில் - திருவல்லிக்கேணியிலே - ஆழ்வார்  ஸ்ரீ தேவப்பெருமாளுடன் புறப்பாடு கண்டு அருளினார்.  வீதியில் இராமானுச நூற்றந்தாதி சேவிக்கப்பெற்றது.  முன்னதாக காலை அவர் இயற்றிய நான்முகன் திருவந்தாதியும் திருச்சந்த விருத்தமும் திருக்கோவிலினுள்ளே சேவிக்கப்பெற்றன.  திருவீதி புறப்பாடு  கண்டு அருளிய பின்பே, கோவிலினுள் - திருவாய்மொழி பத்தாம் பத்து சாற்றுமுறை; ஸ்ரீ வரதராஜப் பெருமாள் அமுது செய்த பிரசாதம்,  திருமழிசைப்பிரானின்  ஆச்சார்யனான  பேயாழ்வார் சந்நிதிக்கு குடை, திருச்சின்ன மரியாதையுடன் ஏளப்பண்ணப்  பெற்று, பேயாழ்வார் சுவீகரித்த பின்பு திருமழிசைப்பிரானுக்கும், அவரது பக்தர்களுக்கும் வழங்க பெற்றது.

~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (மாமண்டூர் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)









PS :  திரையுலக ஆரம்பத்தில் பல புராண கதைகள் படங்களாக வெளிவந்தன. 1948ல்  சி. கண்ணன் பிள்ளை தயாரிப்பில் எம். எம். தண்டபாணி, பி. வி. ரங்காச்சாரி மற்றும் பலரும் நடிக்க, திரு எஸ். வி. வெங்கட்ராமன் மற்றும் திரு டி ஆர் ராமநாதன் இசையமைப்பில்  திரு தண்டபாணி தேசிகர் இனிதே கர்நாடக சங்கீதம் இசைக்க வெளிவந்த படம் ~ ஆழ்வாரின் கதையான 'திருமழிசை ஆழ்வார்'.  

No comments:

Post a Comment