To search this blog

Tuesday, May 10, 2022

the holy conch ! ~ சங்கம் முழங்கவே ! சாரதியாய் வந்து !!

சங்கம் முழங்கவே ! சாரதியாய் வந்து - எங்களை காப்பாயே !! 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருக்கரத்தில் பாஞ்சஜன்யம் எனும் சங்கும் திருவாழி எனும் சக்கரமும் நிலை கொண்டு இருக்கும்.  தனது அடியார்களை காப்பாற்ற சக்கரத்தையும், பாரத போரில் சங்கத்தையும் ஏந்தியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.  அவனே ஸ்ரீபார்த்தசாரதியாக திருவல்லிக்கேணி புண்ணிய பூமியிலே சேவை சாதித்து அருள்கிறான்.

சிலப்பதிகாரத்தில் கோவலன்  திருமணமான புதிதில்  கண்ணகியை  தீராக்காதலின் திருமுகம் நோக்கி - "மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே " - என புகழ்ந்தானாம்.  வலம்புரிச் சங்கு (Dakshinavarti Shankh) என்பது சங்குகளில் ஒரு  வகை.  வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை.  இவை மிகவும் புனிதமானவை,  வளத்தையும், நலத்தையும் தர வல்லன.   இச்சங்கு திருவிதாங்கூர் கொடி, கேரள அரசு சின்னம், சிக்கிம் அரசு சின்னம் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளது.  பொய்கையார் ~  ஸ்ரீமன் நாராயணனிடத்தில் பக்தி குறைந்தவர்களை  ஏழைகாள் என விளித்து கூறுகிறார்  இந்த ஜெயத்ரதன் பிரபாவத்தையே பொய்கை ஆழ்வாரும் : 

மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்து

இயங்கும் எறிகதிரோன்  தன்னை, - முயங்கமருள்

தேராழியால்  மறைத்தது என் ?   நீ திருமாலே,

போராழிக் கையால் பொருது?

 என வினவுகிறார் ?  

 

மஹாபாரத போரை  துவங்குவது சங்கநாதம்  தான்.  சங்கு (Conch)  எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை. எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருக்கரத்தில் பாஞ்சஜன்யம் எனும் சங்கும் திருவாழி எனும் சக்கரமும் நிலை கொண்டு இருக்கும். 

சங்கு பற்றி சில விஷயங்கள் இங்கே :  

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார

அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை

நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்

உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.

-  திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்        (முதல் திருமுறை)  

பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாத தத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.  

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத்

நபஷ் ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யனுநாதயன்  

ஸ்ரீமத் பகவத் கீதை  - அத்தியாயம்: 1 ... ஆகாயத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த பேரொலி கௌரவர் கூட்டத்தின் இதயங்களை பிளந்தது.  

பல்வேறு சங்கொலிகளின் முழக்கம் பெரும் சத்தமாக பூமியும் வானமும் நடுங்கும் அளவுக்கு எதிரொலிக்க கௌரவர்களின் இதயம் சிதறிப் போனது. பிதாமகர் பீஷ்மரும், கௌரவர்களும் தத்தமது சங்குகளை முழங்கிய போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோடு ஒரு பக்கத்தில் இருந்த பாண்டவர்களுக்கு அச்சமோ கலக்கமோ எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பகவானுக்கு எதிர் அணியில் இருப்பவர்களுக்கு மிகவும் கலக்கமும் இதயச் சிதறலும் ஏற்படுகின்றது. எத்தகைய நாசத்திற்கும் இடையில் பகவானின் மேல் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், அவனைச் சரணடைந்தவர்களுக்கும் பயம் தேவை இல்லை, பயம் ஏற்படுதலும் இல்லை.  


சங்க நாதம் என்று ஒரு தமிழ் படம்  1984 ஆம் ஆண்டு வெளிவந்ததாம்.  ஜி. ராம நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்து இருந்தனர் - சரியாக ஓடியதாக தெரியவில்லை. 

சில சிந்தனை துளிகள்  

அன்புடன் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
10.5.2022
Pics taken by me at 3 different places (Gangaikondan mantap; Thiruvetteeswarar thirukovil & Thirumazhisai) 

1 comment:

  1. Very nice.. சங்கு பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை. Very interesting....

    ReplyDelete