To search this blog

Thursday, May 19, 2022

Sri Varadharajar Thiruther 2022 - some wandering thoughts !!

உத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது.  அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர்.   கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கும் மக்கள்  வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவர்.  தேர் (திருக்கோவில் உத்சவங்களில் திருத்தேர்) - பண்டைய காலத்தில் இருந்தே மக்களை கவர்ந்து வந்துள்ளது.  






இன்று [19.5.2022] திருக்கச்சி தேவாதிராஜரின் திருத்தேர் வைபவம்.  காஞ்சி மாநகரத்திலே முன்பெல்லாம் திருத்தேர் திரும்புகைக்கு நாட்கள் கூட ஆகுமாம்.  இப்போது இயந்திரங்கள், மனிதர்கள் உதவியுடன் பெருமாள் தேர் புறப்பாடு சில மணி நேரங்களில் முடிந்து விடுகிறது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் காண வருகை தருகின்றனர்.  காஞ்சியில் தேரன்று பொது விடுமுறை அளிக்கப்படுகின்றது.   

நம் பார்த்தசாரதி மாயப்போர் தேர்ப்பாகனார்.  குருக்ஷேத்ரத்திலே கௌரவர்கள் கதிகலங்க அர்ஜுனனின் தேரை யுத்தகளத்தில் முன் நிறுத்தி, சங்கம் முழங்கியவர்.  எம்பெருமான் ஸ்ரீராமபிரானின்  தந்தை பத்துத்திசைகளிலும் தேர்களைச் செலுத்தும் வல்லமை பெற்றிருந்ததனால்,  தசரதர் என்று பிரசித்தி பெற்றவர். வேதத்தில் கயிறுகளால் இழுக்கப்படும் தேர்கள் பற்றியும், இந்திரன், வருணன், அக்கினி, சூரியன் போன்ற கடவுள்களுக்கு தியாகத் தேர்கள் பயன்பட்டமை பற்றியும் குறிப்புகள் உள்ளன.  

சங்க இலக்கியங்களில் போர்ப்பரணிகளிலும் பிற இடங்களிலும் தேர் பற்றிய குறிப்புக்கள் பரவி உள்ளன.  படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த  சிறப்பால் பாரி,  வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப்  பாடியுள்ளார்.  

ஐங்குறுநூறு எனும் நூலில் ஒன்று :  "தேர் வியங்கொண்ட பத்து"  -    போர் முடிந்த பின்னர் தேரில் இல்லம் மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது. 

ஆறுவனப்பு எய்த அலர்தாயினவே ! வேந்துவிட்டனனே மாவிரைந்தனவே

முன்னுறக் கடவுமதி பாக *  நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே. 

ஆறு அழகுடன் திகழும்படி மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. வேந்தன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான். குதிரைகள் விரைந்து பாய்கின்றன. நீ நம் தேரை அவற்றிற்கு முன் செல்லும்படி ஓட்டுக. நல்ல நெற்றி கொண்ட உன் அரிவை மனைவி நலம் பெறவேண்டும் அல்லவா? - என இயம்புவதாக.. .. .. 

தமிழ் எழுத்தாளர்களில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி.  மூதறிஞர் ராஜாஜியின் வலது கரமாகவும் திகழ்ந்தார். சோழர்கள் மற்றும் பல்லவர்களின் பொற்கால ஆட்சியை வாசகர்களின் மனத்தில் நிழலாட வைத்த வரலாற்றுப் புதினங்களான "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்', "பார்த்திபன் கனவு' போன்றவை அவரது சிறந்த பங்களிப்புகளாகும். தலைமுறை கடந்தும் தமிழர்களை இந்த வரலாற்றுப் புதினங்கள் ஈர்த்து வருகின்றன.  சிவகாமியின் சபதம்,  . 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.  முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். 

சிவகாமியின் சபதத்தில் - கச்சி மூதூர் விவரிக்கப்படும் பல இடங்களில் இங்கே ஒன்று :  பரஞ்சோதி,  மாமல்லருடன் சல்லாபம் செய்துகொண்டு வந்தபோதே, மற்றொரு பக்கத்தில் காஞ்சி மாநகரின் விசாலமான இராஜ வீதிகளையும், வீதியின் இருபுறமும் காணப்பட்ட மாட மாளிகைகளையும், ஈ மொய்ப்பதுபோல் ஜனக்கூட்டம் நிறைந்த கடை வீதிகளையும், இடையிடையே தீபாலங்காரங்களுடன் விளங்கிய சிவாலயம் விஷ்ணு ஆலயங்களையும் தெய்வத் தமிழை வளர்த்த சைவ வைஷ்ணவ மடங்களையும், பௌத்தர் சமணர்களின் கோயில்களையும், வேதகோஷம் எழுந்த சமஸ்கிருத கடிகை ஸ்தானங்களையும், சிற்பசித்திர கலா மண்டபங்களையும் பரஞ்சோதி கண்கொட்டா ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு வந்தார்.  

ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத் திவ்விய சந்நிதியின் மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று மாமல்லரை வினவினார். "  கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய ஸ்தானத்தை நன்றாய்ப் பார்க்கிறேன்" என்றார் பரஞ்சோதி.  கோயிலுக்குள்ளே ஒரு தீப வரிசைக்குப்பின் இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற தேரோடும் வீதிகளையும், குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த கடைகளையும், தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய தூண்களின் மேலே அமைந்த நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு, "ஆஹா! புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை!" என்றார்.  

அன்றே காஞ்சி நகரத்து வீதிகளும், திருக்கோவில்களுக்கு, தேர்களும் (மன்னர் தம் தேரும் - திருக்கோவில் திருத்தேர்களும்) சிறப்புற இருந்துள்ளன.   பல்லவர் சிறப்பு -கற்தேர்கள்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே தனிப் பெரும் கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன் சிற்பங்களைச் செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  இங்கே சிறப்பு பஞ்ச பாண்டவர் ரதங்கள்.  

இன்னமும் சற்று விலகி சென்றால்  :  'சிவகாமியின் சபதம் வேறு !  சிவகாமியின் செல்வன் வேறு !!" - சிவகாமியின் செல்வன் 1974ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில்  சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த இந்த படம் - 1969ல் வெளிவந்த 'ஆராதனா' வின் தழுவல்.   ஆராதனா  எல்.பி ரெக்கார்டுகளில் தமிழக அளவில் சாதனை படைத்த முதல் திரைப்படம். ராஜேஷ் கன்னாவும் ஷர்மிளா டாகூரும் இணைந்து நடித்த இந்தப்படம் தமிழகத்தின் பெருநகரங்களில் எல்லாம் 100 நாட்கள் சில்வர் ஜூபிளி என வெற்றிவாகை சூடிய படம்.  டி.வி கிடையாது, டேப் ரெக்கார்டர் கிடையாது. கிராமபோன் இசைத்தட்டுதான் -  ராஜேஷ்கன்னா 'மேரே ஷப்னோம் கி ராணிகப் ஆயே கீத் 'என பாட இளைஞர்களும் யுவதிகளும் எல்லா விழாக்களிலும் அந்தப்பாடலைப் பாடித்தீர்த்தனர். இந்த இந்தித் திரைப்படப்பாடல் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம்  இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் நடந்து முடிந்திருந்த நேரத்தில் ஒலித்தது !!  

அன்றைய கால கட்டம் - தமிழகத்தில் வித்தியாசமானது.  பல்லாண்டுகள் அரசாண்ட நேரு காங்கிரஸ் தமிழகத்தில் அழிய ஆரம்பித்து,  திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த நேரம்... எம்.ஜி.ஆர் அதற்க்கு எதிராக, கணக்கு கேட்டு  அதிமுக   ஆரம்பித்து இருந்தார். பழைய காங்கிரசின் தலைவரான காமராஜர் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரம். சிவாஜி ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் காமராஜர். அதனால், 'ஆராதனா' படத்தைத் தமிழில் எடுத்த போது 'சிவகாமியின் செல்வன்' என்றே படத்துக்குப் பெயரிட்டார் . காமராஜர் அம்மாவின் பெயர் சிவகாமி.  

At Thiruvallikkeni  it was siriya thiruther for Sri Varadharajar – Perumal had kulakkarai purappadu in tholukku iniyan  first and then periya mada veethi on thiruther.  It was Thiruvezhukkorrirukkai and Kovil Thirumozhi in the goshti.  

Here are some photos taken during the purappadu on 19.5.2022.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19.5.2022.













 

  

No comments:

Post a Comment