திருவல்லிக்கேணி திருத்தேர்
சிறப்பு 2026
அற்புத இதிஹாச காவியமான மஹா பாரதம் - தூது சென்றவன் ஏற்றத்தை இயம்புவது. கிருட்டிணனின் 'தூத க்ருத்யம்' (தூது சென்ற செயல்). எம்பெருமான் தூது மட்டுமா சென்றான் - பாரத போரில் சாரத்யமும் செய்தருளினான் - அப்போர் தனின் அம்புப்பட்ட காயங்களுடன் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.
பாரேறு பெரும்பாரம் தீரப் பண்டு
பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை...
திருமங்கை மன்னனின் பெரிய திருமொழி (2-10-8) பாசுரத்தின் ஒரு வரி. இது, மகாபாரதப் போரில் அர்ஜுனனின் (பார்த்தன்) மணித்தேரில் கிருஷ்ணன் சாரதியாய் அமர்ந்து, பூமியின் பாரத்தை நீக்கிக், கஞ்சன் உள்ளிட்டோரை அழித்த வரலாற்றைக் கூறும் நல்வார்த்தைகள்.
மகாபாரதத்தில்
தேர் என்பது வெறும் போர் வாகனம் மட்டுமல்ல, அது ஒரு போரின் வெற்றி, வீரம் மற்றும் வாழ்க்கைத்
தத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அர்ஜுனன் என்ற தலை சிறந்த வில்வீரனின் தேர் மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு செடிகொடிகள் அதன் மணிகளாகின. செயல், உண்மை, தவநோன்புகள்,
பொருள் ஆகியன தேரின் கயிறுகளாக்கப்பட்டன. மனமானது அந்தத் தேர் நிற்கும் தரையானது, வாக்கே
{பேச்சே} அது செல்லும் தடமானது. பல்வேறு வண்ணங்களிலான
கொடிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. உயரே
பறக்க சிறப்பாக அமைந்து இருந்தது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனின் தேர் மீது கிருஷ்ணர்
தேரோட்டியாகவும், அனுமன் கொடியில் காப்பவனாகவும் இருந்தனர்.
திருவல்லிக்கேணி
சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் ஸ்ரீபார்த்தசாரதி விண்ணை முட்டும் அழகான சிறப்பு திருத்தேரில்,
நூற்றுக்கணக்கானோர் வடம் பிடிக்க, பல்லாயிரம் பக்தர்கள் தொழுது வணங்க திருவீதி வலம் வந்தார்.
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
7.5.2026
.jpg)
No comments:
Post a Comment