To search this blog

Monday, June 10, 2024

Enjoying the beauty of Sree Rama Piran without battling eye-lid !!

 

கண் இமைப்பது என்பது இயல்பாக நிகழக் கூடிய ஒன்று. நாம் ஒன்றும் அதற்காக  வலிந்து வேலை  செய்ய வேண்டாம். அப்படி தானே நிகழும் ஒன்று கூட , இராமனின் அழகைப் பார்த்தவுடன் இமைப்பது மறந்து போனதாம்.

 


இன்று 9.6.2024 வைகாசி புனர்வசு.  திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீராமபிரான் திருவீதி புறப்பாடு  - உள்ளே குலசேகரர், முதலியாண்டான், எம்பார் எழுந்து அருளி இருக்க பெருமாள் திருமொழி சேவிக்கப்பெற்றது. 

“தானம், தருமம், ஒழுக்கம், ஞானம், நல்ல வரைப் போற்றும் நயம், தீயவரை ஒறுக்கும் தூய்மை, பகைவரை அழிக்கும் தகைமை இவை எல்லாம் நிறைந்தவன் ஸ்ரீராமன்."  ஊர்ப் பொதுக்கிணறு பலருக்கும் பயன்படும்;  பயனுள்ள மரம் பழுத்தால் நயம் உள்ளதாகப் பலருக்குப் பழங்கள் தரும்;  வானத்து மழை பயிர்களைப் பசுமையாக்கும்;  கழனிகளில் நதிப்புனல் பெருகிப் பாய்ந்து நாட்டை வளப்படுத்தும்;  இவற்றை எல்லாம் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது !!   அயோத்தியாபுரி  மக்கள் இராமனை எல்லா வகையிலும் நேசித்தனர். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும்  அவர்களிடம் அன்பும், பரிவும் காட்டினார். 

இதோ இங்கே கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வார்த்தைகளில் - இராமபிரானது அழகின் மேம்பாடு: 

 


அமைவு அருமேனியான் அழகின் ஆயதோ?

கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?

சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக-

இமையவர் ஆயினார் இங்கு உளாருமே! 

கண்ணிமைகளை  அசைத்து அசைத்து நாம் காட்சிகளை காண்கிறோம்.  மிக சிறந்தது ஆயின் கண் இமைகளும் இமைக்க மறுக்குமோ !  அப்படி அன்று    காண்பார்   அனைவரும்  இராமன்  அழகைப் பருகினர்  என்பது  கருத்து.  மிக   அழகியவையும்.   ஊன்றி  நோக்க உரியவையும்  கண்  இமைத்தலை மறக்கச்  செய்துவிடல்  இயல்பு.  நம் நினைவின்றியே     இயங்கவல்ல   கண்    இமைகளும்    இமைக்கும் நினைவின்றி  மறந்தன  என இராமனின்  பேரழகை  வியந்தவாறு.   தேவர்கட்கு இமையவர் எனும் பெயர் இமைத்தலில்  விசேடத்  தன்மை  வாய்ந்தவர் என்பதனால்   வந்தது.   அந்தச்   சிறப்புத்  தன்மையை   மண்ணுலக மக்களும்   இராமனை சேவித்தபோது  பெற்று   விட்டதனால்.  இவர்களும்   தேவர்கள் ஆகிவிட்டனர் என்பதாம்.   

இதோ இங்கே நாமும் அந்த சிறப்பு வாய்ந்த இராமபிரானை சேவித்து அனுபவிப்போமாக !!

 
 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
9.6.2024

1 comment:

  1. Very nice photo and Kamba Ramayanam Quote.
    B Venkatakrishnan, ThiruvallikkeNi

    ReplyDelete