To search this blog

Friday, August 11, 2023

Praying Emperuman Sree Rama - தமிழகத்தில் ஸ்ரீ ராமர் வழிபாடு ! - படர்க்கைப் பரவல்

Praying Emperuman Sree Rama - தமிழகத்தில் ஸ்ரீ ராமர் வழிபாடு ! 



அதி அத்புதமான ஸ்ரீராமபிரானின் காதை இராமாயணம். இறுதியில் இராமர் இராவணனைக் வதம் செய்து  போரை முடித்து, , வீடணனுக்கு இலங்கையின் மன்னராக முடி சூட்டி - இராமர், சீதை, இலக்குமணன் முதலானோர், வீடணன் மற்றும் அனுமான் உள்ளிட்ட வானரக் கூட்டத்துடன் புஷ்பக  விமானத்தில் ஏறி அயோத்தி வந்தடைந்தனர். அயோத்தியில் இராமருக்கு வசிட்டர் பட்டாபிஷேகம் செய்து வைக்க, இராமராச்சியம் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இராமர் நன்னெறிகளுடன் அயோத்தியை ஆண்டார்.  

புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சராயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள்  சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி, இக்ஷ்வாகு மன்னன்,  சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், நகுஷன், ரகு, அஜன் ஆகிய மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய பட்டணம் தலைமை நகரமாக இருந்தது.  தசம் என்றால் 10 என பொருள்படுகிறது. ரதம் என்பது தேரை குறிக்கிறது. தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருள்படுகிறது. தசரத சக்கரவரத்திக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள்  

ஆழ்வார்கள் தம் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் ஸ்ரீராம பிரான் பாசுரங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.  அயோத்யா பத்ராசலம் என ஆரம்பித்து தமிழ்நாட்டில்  - திருவல்லிக்கேணி இராமர், வடுவூர் இராமர், மதுராந்தகம் ஏரி காத்த இராமர், திருப்புள்ளம்பூதங்குடி   வல்வில் ராமன், திருவெள்ளியங்குடி கோலவில்லி  இராமர், குடந்தை இராமஸ்வாமி, இராமேஸ்வரம் - என நூற்றுக்கணக்கான ஊர்களில், ஆயிரக்கணக்கான சன்னதிகளில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அருள் பாலிக்கிறார்.  




இராமபிரான்  இச்வாகு குலத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர்.  12,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தவர் - காவிய நாயகன். தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில், பாரதத்தின் ஆன்மா ராமன் என்று பதிந்துள்ளது.  அற்புத காவியங்களான மகாபாரதம், ராமாயணம் இந்தியா முழுக்க, அதன் நாடி நரம்புகளில் பரவியிருக்கிறது. 

கொஞ்சம் தமிழ் இலக்கணம் பார்ப்போம் !  -  படர்க்கைப் பரவல்  என்றால் என்ன தெரியுமா ?  

இராமர் காதை  கம்பராமாயணம் -  புற நானூறில்  கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை  வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் என வருகிறது.   

சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும்.  சிலப்பதிகாரம்= சிலம்பு + அதிகாரம். இக்கதை கண்ணகியின் சிலம்பை மையமாக கொண்டு எழுந்ததால் இந்நூலிற்கு சிலப்பதிகாரம் என பெயரிடப்பட்டது.  இக்காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் என்று சொல்லக்கூடிய மூன்று பொருள்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கோவலன் மற்றும் கண்ணகி வசிக்கக்கூடிய வீடு பற்றி இந்நூலில் எடுத்துரைத்தாலும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியரின் நோக்கம் அறம் என்பதால் மக்களிடம் அறத்தின் பண்பையே கூறுகிறார்.  

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதியரால் போற்றப்பட்ட நூல் சிலப்பதிகாரம். இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையான நூலாக தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியமாக திகழ்கிறது.   சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோ அடிகள் - சேர குலத்தை சேர்ந்தவர். தந்தையின் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சரலாதன். தாயின் பெயர் நற்சோணை. சகோதரரின் பெயர் சேரன் செங்குட்டுவன்.   காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த கோவலன் நாட்டின் பாரம்பரியப்படி கண்ணகியை திருமணம் செய்து இல்லறம் நடத்தி வந்த கோவலன் மற்றும் கண்ணகியின் வாழ்க்கை சிறப்பை எடுத்து கூறும் நூல். இந்நூல் மூன்று காண்டம் மற்றும் முப்பது காதைகளை உடையது.  

நாம் உரையாடும்போது பேசுகின்ற நாமும் கேட்கின்றவர்களும் பேசப்படும் பொருளும் என்று மூன்று நிலைகள் உள்ளன. இதையே இடம் என்று குறிப்பிடுவர். இடம் மூன்று வகைப்படும்.  :  1) தன்மை  2) முன்னிலை  3) படர்க்கை.  பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை; முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை;  பேசும் பொழுது, எதிரே கேட்பவர் அல்லாமல்  மூன்றாமவர் பற்றியது படர்க்கை.  படர்க்கையானது அடுத்தவரை சுட்டுவதாக காணப்படுகின்றது.    

படர்க்கை இடத்தின் முக்கியத்துவம் -  மூன்றாம் நபருடைய பார்வை நடுநிலைத் தன்மையுடன் கூடிய தொனியை உருவாக்க கூடியதாக காணப்படல். சொல்பவருக்கும் கதை நிகழ்வுக்கும் இடையேயுள்ள தூர உணர்வை வழங்குகின்றது. படர்க்கை இடமானது மூன்று காலங்களிலும் இடம்பெறுவதால் முக்காலங்கள் பற்றிய சரியான விளக்கத்தினை பெற்றுக்கொள்ள கூடியதாக காணப்படுகின்றது.   




சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஒரு ரசமான கேள்வி பதில் :  "இராமா, நீ ஏன் காட்டிலும் மேட்டிலும் கல்லும் முள்ளும் குத்த கானகம் போனாய் ? - இது  படர்க்கைப் பரவல்-தாம் பரவும் பொருளைப் படர்க்கையிடத்து வைத்துப் பராவுதல்.  

மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்

தாவிய  சேவடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;  

முன்னொருநாள்  மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டு,  ஓரடியால் பூவுலகும், மற்றோரடியால் மேலுலகும் அளந்து பின் மூன்றாவது அடி அவன் தலை மேலேயே வைத்து, உன்னை நம்பி நீயே அளந்து எடுத்துக்கொள் என்றவனை அடிமைப்படுத்தினது பாவமெனில், அந்த பாவம் இன்று நீ, இந்த மண் எல்லாம் கால் நோவ நடக்கிறாய்" என்று இளங்கோ அடிகள் பாடுகிறார்.  

பாடலின் இலக்கணச் சுவையை மட்டும் அனுபவியுங்கள் .. எம்பெருமானுக்கு எந்த தோஷமும் கிடையாது.  எந்த குறைவும், எந்த களங்கங்களும்  இல்லாத சிறப்பு வாய்ந்தவன் ஸ்ரீமன் நாராயணன்.  ஒரு வில் ஒரு சொல் ஒரு இல்லாள் என அற்புத வாழ்வு வாழ்ந்து காட்டியவன்  ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.  



Here are some photos of the most beautiful Sree Ramapiran at Thiruvallikkeni divyadesam taken during Sri Rama Navami celebrations this year – Mar 2023

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivsan Sampathkumar
11th Aug 2023.

  

No comments:

Post a Comment