இன்று 28.01.2022 - தை
வெள்ளிக்கிழமை - கேட்டை நக்ஷத்திரம், ஏகாதசி !
தை பிறந்தால் வழி
பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் சிறப்பு வாய்ந்தது தை மாதம்.
தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும்.
இது தைசிய என்றும் பௌஷ என்றும் வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. சூரியன் மகர இராசியுட்
புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே
இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப்
பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.
தை மாதத்தின் வெள்ளிக்கிழமை
அம்பாளுக்கு/ தாயாருக்கு விசேஷமாகும். இந்த
தை வெள்ளியில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப்
பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு
செய்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள். இந்த நாளில்,
அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள்
நடைபெறும். செல்வத்தை அள்ளித் தரும் சுக்ரனுக்குரிய
வெள்ளிக்கிழமை நாளில், உத்தராயண காலமாகிய தைமாதத்தில் தவறாமல் விரதம் கடைப்பிடிக்க
வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
தையொரு திங்களும் தரை
விளக்கி என்பது கோதை பிராட்டி வாய்மொழி !
மார்கழி முழுதும் திருப்பாவை நோன்பு
இருந்தும், கண்ணன் அவளை வந்து சேரவில்லையே
என ஆதங்கப்பட்டு ஆண்டாள், தான் ஒருவேளை காமனைத் தொழுதால் வந்து சேருவாரோன்னு மன்மதனை தொழ முடிவெடுத்துப் பாடல் பாடுகிறாள். இப்பாசுரத்திலே 'அனங்க தேவா' என விளிக்கிறாள். அனங்க தேவா என்றால் உடல் அற்றவன் என்று பொருளாம்..ஒருமுறை
சிவனால் எரிக்கப்பட்ட காமன் உடம்பு அற்றுப் போனதாக புராணம் ! அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் பரிஷ்கரித்து
அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து மேடையிட்டு
அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம், இது.:
தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்தனங்கதேவா
உய்யவுமாங்கொலோவென்று சொல்லி உன்னையும் உம்பியையும்
தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே.
கரும்புவில் கையில் கொண்ட காமதேவனே, தை மாதம் முழுதும் நீ வருகின்ற இடத்தை அலங்காரம் செய்து, குளிச்சியான அழகுடைய மண்டலம் போன்றதான கோலத்தினை இட்டும்,மாசி மாதத்தில் முதல் நாளில் அழகியதான சிறு மணல் துகள்களினால் நீ வரும் வீதியை அழகுடையதாக அலங்கரித்தும், நான் உஜ்ஜீவனம் பெற , அனங்கதேவனே உன்னையும் உன்னுடைய தம்பியான சாமனையும் வணங்கினேன், வெம்மையான நெருப்பினை பொழியும் திருச்சக்கரத்தினை தனது திருக்கரத்தினில் ஏந்தியவனும் திருவேங்கட மலையில் உறைபவனுமான எம்பெருமானுக்கு என்னை அந்தரங்கமாக தொண்டு செய்யும்படியாக நீ செய்யவேண்டும் என்று கோதை பிராட்டி அருளிச் செய்கிறார். அவருக்கு எம்பெருமானிடத்திலே சேர்த்தல் மட்டுமே முழு நினைப்பு.
திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் - தை வெள்ளியன்று சிறப்பு சாற்றுப்படியுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருக்கோவில் உள்புறப்பாடு, ஊஞ்சல் கண்டருளினார். திருமயிலை ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் புகைப்படங்கள் சில இங்கே ! கூடவே- “கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா “ .. திருக்கோவில் நாதஸ்வர வித்துவான் திரு ராஜேஷ் அவர்களின் இனிய வாசிப்பையும் காணலாம் / கேட்கலாம். https://youtu.be/m1gpFB0BKVQ
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.1.2022
🙏🙏🙏🙏
ReplyDelete