இந்த அற்புத பாரத தேசத்தின் வரலாற்றில், இலக்கியத்தில்,
பண்பாட்டில், கலாசாரத்தில் - முக்கியமானவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். சிறந்த இதிகாச
புராணமான மஹாபாரதம் - கண்ணனின், பிறப்பு, வளர்ந்தது, தூது சென்றது, நீதியை நிலை
நாட்டியது என விவரிக்கும் உன்னத காவியம்.
பரம்பொருள் எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணன் சிறுவயது ஜனித்தது
முதல் இடர்ப்பாடுகள்தானே ! .. ஜனித்தது சிறையில், உடனேயே கொட்டும் மழையில் ஆற்றை
தாண்டியது, வளரும் பருவத்தில் - தேனுகன், பிலம்பன், சுமாலி, கேசி,
தேனுகன், பூதனை, காளியன், சகாடாசுரன் என அரக்கர்களுடன் போராட்டம், என .. .. கடினமான
சூழ்நிலைகள் - பாரதப்போரில் போராடாவிடினும் பீஷ்மர் போன்றோரின், ஏனைய மஹாரதர்களின்
அம்புகளை தன உடலிலும் திருமுகத்திலும் தாங்கியவன் .. ..
கண்ணன் எவ்வாறு நம் மனதில் நிற்கிறான் ? - பிறந்தவுடன்
வசுதேவர் யமுனை ஆற்றை கடக்கும்போது அவர் தலையில் கொண்ட மூங்கில் கூடையில்; வளரும் போது
வெண்ணை விழுங்கிய வாயனாய்; காளிங்க நர்த்தனம் பண்ணினவனாய்; கோவிந்தனாக ஆநிரை மேய்த்தவனாய்;
வேய்ங்குழல் ஊதி அனைவரையும் மகிழ்வித்தவனாக; கோவர்தனகிரி தாங்கி காப்பாற்றிவனாக; தூது சென்றவனாக; பாரதப்போரில் நீதி பக்கம் நின்று அநீதி அழித்தவனாக;
அர்ஜுனனுக்கு தேரோட்டியாக; நாம் படிப்பதற்க்கு
கீதை எனும் புனித நூல் அளித்தவனாக; விஸ்வரூபங்கள் எடுத்தவனாக - என பல்லாயிரம்
நிகழ்வுகள் .. ..
மனித மனதை ஆற்றுப்படுத்தும் கலைகளில் முக்கியமானது,
இசை. இயன்ற போதெல்லாம் வரம்பின்றி கேட்டு ரசிக்கலாம். இசைக்கு இன்றியமையாதவை கருவிகள்.
மயங்க வைக்கும் காற்றிசைக் கருவிகளில் ஒன்று புல்லாங்குழல். காற்று இசைக்கருவி
வகையைச் சேர்ந்தது புல்லாங்குழல். துளை வழியே காற்றை ஊதி இசையை உருவாக்குவதால், துளைக்கருவி
எனவும் அழைப்பர். ஸ்வரங்களை அடிப்படையாக கொண்ட துளைகளை மூடித் திறக்கும் திறனுக்கு
ஏற்ப, ஒலிக்கோர்வையை வித்தியாசமாக உருவாக்கலாம். இந்தியாவில், இரண்டு வகை புல்லாங்குழல்கள்
உள்ளன. பன்சூரி என்ற வகையில், காற்று ஊதும் முத்திரை துளை ஒன்றும், ஸ்வரங்களுக்காக
விரல் துளைகள் ஆறும் இருக்கும். இது, இந்துஸ்தானி இசையில் அதிகம் பயன்படுகிறது. மற்றொருவகை
வேணு இவை தென்னிந்திய கர்நாடக இசையில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு
விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.
கிருஷ்ண பகவான் எப்போதும் புல்லாங்குழலை இசைப்பதில் இச்சையுள்ளவன்.
அதிலிருந்து பிறக்கும் இசையில் பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், புல் முதல் மரம்
போன்ற தாவரங்களும், ஆறுகளும், மலைகளும், கோபியரும்,
. அகில உலகங்களும் கட்டுண்டு கிடந்ததை, பல இடங்களில் உணர்கிறோம். மதுசூதனன் வாயில் புல்லாங்குழலில் "ஸ்வரங்கள்' பிறக்க - அவன் வாசித்த அழகை "சிறு விரல்கள் தடவிப்
பரிமாற" என்கிறார் பெரியாழ்வார். இதோ
இங்கே பெரியாழ்வாரின் - "பெரியாழ்வார் திருமொழி'யில் இருந்து ஒரு பாசுரம் :
இடவணரை இடத்தோளொடு சாய்த்து
இருகைகூடப் புருவம் நெரித்து ஏற*
குடவயிறுபட வாய்கடைகூடக் கோவிந்தன் குழல்கொடூதினபோது*
மடமயில்களோடு மான்பிணைபோலே மங்கைமார்கள் மலர்க்கூந்தலவிழ*
உடைநெகிழவோர் கையால் துகில்பற்றி ஒல்கியோட
அரிக்கணோடநின்றனரே .
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வேய்ங்குழலை எவ்வாறு ஊதினான்? - இடது மோவாயை இடது தோளோடு சாய்த்து, இருகைகளாலும்
புல்லாங்குழலைப் பற்றிக்கொண்டு ! குழலூதும்போது
மோவாய்க்கட்டையின் இடப்பக்கம் இடத்தோள் பக்கமாகத் திரும்புதலும், இரண்டு கையும் குழலோடு
கூடுதலும், புருவம் நெரித்தலும், வயிற்றிலே காற்றை நிறைத்து நிறுத்தி, அதனைத் திருப்பவளத்தாலே
கிரமமாக விட்டு ஊதவேண்டுகையாலே வயிறு குடம்போலே எடுப்பாகத் தோன்றுதலும், குழலின் துளைகளின்
அளவுக்கு ஏற்ப வாய் குவிந்து குமிழ்த்துப் போதலும் என அத்துணை விவரங்களையும் அனுபவித்து
சிறப்பாக விவரிக்கிறார் ஆழ்வார்.
இவ்வாறு மாயக்கண்ணன் வேய்ங்குழலை ஊதின போது - அழகிய மயில்களையும் மான்பேடைகளையும் போன்றுள்ள
யுவதிகள், இரண்டு கைகளும் கூட, புருவங்களானவை
நெறித்து மேலே கிளறவும் - தங்களுடைய மலரணிந்த கூந்தல் முடியானது அவிழ்ந்து அலையவும்,
அரைப்புடவையானது நெகிழ்ந்து போக, நெகிழ்ந்த
அத்துகிலை ஒரு கையாலே பிடித்துக்கொண்டு, துவண்டு
தங்கள் கண்களிலே செவ்வரி, கருவரிகள், கண்ணபிரான் பக்கலிலே ஓடப்பெற்றனர் !!
அத்துணை சிறப்பு மிக்க எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணன்
- பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரதியாக - பீஷ்மர் போன்ற அதிரதிகளின் அம்புகளை தான்
தாங்கி, அறத்தையும் அர்ஜுனனையும் காப்பாற்றி, ஸ்ரீபார்த்தசாரதி ஆக நமக்கு திருவல்லிக்கேணி
திவ்யதேசத்திலே அற்புத சேவை சாதிக்கின்றான்.
திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கனோ - எம்பெருமான் நரசிம்ஹ
அவதாரத்தின் சாந்த அழகிய மூர்த்தி. இந்த அழகிய
சிங்கனும் - சில நாட்களிலே வேய்ங்குழல் ஊதும் மாயோனாக சேவை சாதிக்கின்றார். தவன உத்சவம் தவிர - ஆணி ப்ரம்ஹோத்சவத்திலே முதல்
நாள் இரவு பின்னை கிளை வாஹனத்திலே ! 31.3.2013 அன்று அருள்மிகு
தெள்ளியசிங்கர் திருக்கையிலே வேய்ங்குழலுடன் தவன
உத்சவ புறப்பாடு கண்டருளிய அற்புத சன்னிவேச படங்கள் சில இங்கே:.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
19th Oct 2021.
No comments:
Post a Comment