To search this blog

Monday, February 8, 2021

Sri Parthasarathi Perumal Churnabishekam - Thiruchandavirutham 2021

Churnabishekam – Tiruchandavirutham – 2021 


பல்லாயிரக்கணக்கான வருட சரித்திரத்தில் - மனித இனம் கொள்ளை நோய்கள், பெரும் போர்கள், இயற்கை சீற்றங்கள், விலங்குகளின் தாக்குதல், கடல் கொள்ளுதல், வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற பற்பல பேரழிவுகளை பார்த்துள்ளது.  மற்றும் சாதாரண அசாதாரண மரணங்களும் சம்பவிக்கின்றன !   எனினும் தீநுண்மி,  இந்த சொல் உலகத்தை ஆட்டிப்படைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக தினமும் நாம் கேட்பது இதை பற்றியது தான்.  இன்று உலகமே பயந்து போய் வாழ்க்கை முறையும் மாறி இருப்பதும் இதனால்தான்.  “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”  என்றபடி நமது வாழ்நாள் இன்னபோது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில் எம்பெருமானை வணங்கி வாழ்த்தவேணுமென்று  உபதேசிக்கிறார்  ஸ்வாமி நம்மாழ்வார்.

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற ஸ்ரீமன் நாரணன் மட்டுமே உபாதாந காரணம்;  திருப்பாற்கடலில் சயனித்து இருக்கும்  பரமபுருஷன் மட்டுமே நம்மை காக்கவல்லன்.




ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்.  பைந்தமிழால் எம்பெருமானை பாடியவர்கள்.  ஸ்ரீவைணவர்களாகிய நாமும் அருளிச்செயல் எனும் அற்புத தமிழ் பாடல்களினால் அனுதினமும் ஸ்ரீமன் நாரணனை வணங்கி தொழுகிறோம்.  

கொஞ்சம் தமிழ் இலக்கணம் இங்கே !  -  திருச்சந்தவிருத்தம்  ஓர் செய்யுள் வகை.  செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது.   செய்யுள்கள் ஒரு இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமைய வேண்டும். யாப்பு’ என்னும் சொல்லுக்குச் செய்யுள் என்பது பொருள். நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் யாக்கப்பட்ட (கட்டப்பட்ட) உடலை யாக்கை என்று வழங்குகிறோம். இதேபோல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றைக் கொண்டு கட்டப்படுவது யாப்பு என்று அழைக்கப்படுகிறது.  

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளன; தவிர மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை.  தாழிசை குறைந்த ஓசையுடையது. இது ஆறு வகைப்படும்.  துறை என்னும் பாவினம் நான்கு வகைப்படும்;  விருத்தம் ‘மண்டிலம்’ எனவும் வழங்கப்படும். இது நால்வகைப்படும் : - 1) வெளி விருத்தம்; 2) ஆசிரிய விருத்தம் ; 3) கலி விருத்தம் மற்றும் 4) வஞ்சி விருத்தம்.  

ஆசிரிய விருத்தம் என்பது தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த  அடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டு அமையும். மோனை சிறப்பாக வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும். எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது.  திருச்சந்தவிருத்தம்  எண்ணடுக்கி  செய்யுள் வகை.  

திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் . ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம்.    அன்று காலை அருள்மிகு ஸ்ரீபார்த்தசாரதி அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார்.  

ஸ்ரீரங்கத்து உலக்கை என்றொரு வழக்காடு உண்டு. ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெருமாளுக்கு அமுது செய்விக்க  மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார்.  வேடிக்கையாக,  யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள், இதோ வருகிறேன் என்று உலக்கையைக் கை மாற்றுவார்கள்  - . மாற்று ஆள் வந்து உலக்கை பிடிக்கும் வரை, சூரிய அஸ்தமன நேரம் வந்தாலும் இடை விடாமல் மாவு இடித்தாக வேண்டுமாம் !   

உரல்  என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு  இரும்பு பூண் கொண்ட மர  உரலில் உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.  பொடிக்கு சூர்ணம் என்றொரு பெயருண்டு.  

சூர்ணாபிஷேகம் சிறப்பு.:     சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து  அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.  திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டுபெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம்அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப்  புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120  பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின்  *திருச்சந்தவிருத்தத்தின்* முதல் பாடல்.

 

பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்  நின்ற நான்குமாய்*

தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்*

மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்*

நீநிலாய வண்ணநின்னை யார்  நினைக்க வல்லரே.*

 

பூமியில் தங்கியிருக்கிற (சப்தம் முதலிய) ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; நீரிலே உள்ள நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; தேஜஸ்ஸிலே உள்ள மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய், [பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்;  புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.; தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.;  காற்றில் - சப்தம், ஸ்பர்சம்]  - பாட்டுக்கு அர்த்தம் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி  உரை  -  [thanks to  : www.dravidaveda.org 

 On 6th day of Brahmothsavam at Thiruvallikkeni  Divyadesam for Sri Thelliya Singar – it would commence with  ‘Choornabishekam’, and then  Sri Parthasarathi perumal purappadu in ‘Ananda nilaya Vimanam [Punniya Kodi vimanam]’. In the purappadu,   ‘Thiruchanda Virutham’ given to us by Sri Thirumazhisai Azhwaar would be rendered.   These 120 songs fall under the type ‘viruthapaa’ – they are replete with numbers and fall under a specialized category of tamil grammar called ‘ennadukkicheyyul’.  

Here are some  photos taken during the morning  purappadu of day 6 of Special brahmothsavam on 8.2.2021  


adiyen Srinivasadhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)
08.02.2021 



















1 comment: