To search this blog

Sunday, July 17, 2011

Jaggi Vasudev on the adminisration of Hindu Temples - Today's Dinamalar

மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:


அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?
ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா? நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.
அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.
என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.
பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்? அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.


எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம். கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா? அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!


Dinamalar : 17th July 2011 :  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276611

No comments:

Post a Comment