To search this blog

Friday, June 25, 2010

Sri Azhagiya Singar Brahmotsavam - Nachiyar Thirukolam - ஸ்ரீ அழகிய சிங்கர் ப்ரம்மோத்சவத்தில் நாச்சியார் திருக்கோலம்

25/06/2010


இன்று காலை அழகிய சிங்கர் திவ்யநாயகியாய்,  நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்து அருளினார். ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாளை பல விதங்களில் அனுபவிப்பர். எம்பெருமானது கல்யாண குணங்களில் முக்கியமானது சௌலப்யம் - எளிதில் அனைவருக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு வேண்டிய பலன்களை அளிப்பது.

'அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' எனும்படி ஆத்மாவுக்கு ஆத்மாவாய் நம் உடலுக்குள்ளேயே அந்தர்யாமியாய் எழுந்தருளி  இருக்கும் பரமாத்மாவின் நிலையை அனுபவிப்பது அனைவருக்கும் சாத்தியம் ஆஹாது. அடியார்களுக்கு எளியவனாய் மூர்த்திவடிவாய் எல்லா திவ்யதேசங்களிலும் எம்பெருமான் எழுந்து அருளியிருப்பது அர்ச்சாவதாரம். இந்த ரூபத்தில் பெருமாளை கண்ணாரக்கண்டு கொண்டு, கையாரத்தொழுது, வாயாரப்பாடி குளிரலாம். இந்த எம்பெருமான் மேலும் அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக வீதிப்புறப்பாடு கண்டு அருள்கிறான். எம்பெருமானை மனதார உணர்ந்த ஆழ்வார்கள் கூட பல திவ்ய தேசங்கள் சென்று பெருமாளைச் சேவித்து, மங்களாசாசனம் செய்து அருளினர்.


இந்த வருடம் பிரம்மோத்சவம் முதல் நாள் காலை புறப்பாடு முடிந்த பின்னர் கொடி ஏறியது.  மூன்றாம்  நாள் காலை கருட  வாகனம்.  மாலை அம்ச வாகனத்தில் புறப்பாடு.  
ஐந்தாம் நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலம்சாற்றி புறப்பாடு கண்டு அருளினார்.  புறப்பாட்டின்போது எடுக்கப்பட்ட  படங்கள் இங்கே : 



சில வருடங்கள் முன்புவரை இந்த புறப்பாட்டில் பெருமாளுக்கு நிறைய   மண்டகப்படிகள் உண்டு. காலப்போக்கில் சில நின்று போய்விட்டன. முதலில் அழகியசிங்கர் வாசலில் இருந்து புறப்பாடு துவங்கும். பேயாழ்வார் கோயில் தெருவில் உள்ள கோமுட்டி பங்களா உள்ளே எழுந்து அருளி, நம்பிள்ளை சன்னதியில் முதல் மண்டகப்படி ; பின்பு தவன உத்சவ பங்களாவில்; அடுத்தது கோவிலுக்கு சொந்தமான நடராஜா ஸ்டோர்ஸ் ; தொடர்ந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் இளைப்பாறல். இங்கேயும் படி அமுது செய்வித்து குதிரை வாகன மண்டபம்; அடுத்து சுங்குவார் தெருவில் கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மண்டபம். வசந்த பங்களா; கிழக்கு குளக்கரை அனுமார் கோவில், யதுகிரி யதிராஜ மடம்; கண்ணாடி பல்லக்கு வைத்து இருந்த மண்டபம்; நம்மாழ்வார் சன்னதி, கோவில் உள்ளே ஆண்டாள் சன்னதி, தெற்கு மாட வீதி ஏளி சன்னதி முன்பே திருவந்திகாப்பு கண்டு அருள்வார்.

சில காரணங்களால் சில மண்டகப்படிகள் நின்று விட்டன.  பெருமாள் வீதி புறப்பாடு காணும்  போது சேவார்த்திகள் மிக அதிக அளவில் வந்து சேவித்து, ஆரத்தி தட்டு சமர்ப்பிப்பதால் புறப்பாடு மிக நிதானமாக நடக்கிறது.  அல்லிக்கேணி அழகியசிங்கரும், அழகான சாற்றுப்படிகளும், அருளிச்செயல்,  வேதபாராயண கோஷ்டியும், ஸ்ரீ பாதம்தாங்கிகளும், பக்தர்களும்  என சிறப்பாக மிளிர்கிறது.  புறப்பாடு கண்டு அருளும் மாட வீதிகளில் வசிப்போரும் பெருமானது க்ருபா கடாக்ஷத்துக்கு பாத்திரம் ஆவோரும் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணியவர்களே ! 


அடியேன் -  ஸ்ரீனிவாச தாசன்   [ஸ்ரீ. சம்பத்குமார்]
.

No comments:

Post a Comment