To search this blog

Thursday, October 5, 2023

Thiruvallikkeni - Vimana darsanam - Sri Paramapada Nathar

திருவல்லிக்கேணி கண்டேனே ! கோபுர தர்சனம் !  - ஸ்ரீபரமபத நாதன்

 


ஸ்ரீய:பதியான எம்பெருமான் அர்ச்சா ரூபியாய் உகந்து எழுந்தருளியிருக்கும்  திவ்யக்ஷேத்திரங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் நம் திருவல்லிக்கேணி. தேசங்களுள் மிகவும் புராதனமாய்,   நாரதாதிகளால்  பாராட்டப்பெற்று, பரமரிஷிகள் தங்களது தவத்திற்கு ஏற்றதான ஸ்தலம் என்று பெரிதும் விரும்பப்பெற்று,  துளஸிவனம் என்று எங்கும்  ப்ரஸித்திபெற்ற திருவல்லிக்கேணி  திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி செடிக்கள் நிறைந்த ஆரண்யம் (காடு) ஆக இருந்தது.  இத்தலத்திற்கு 'கைரவிணி, பிருந்தாவனம், ப்ருந்தாரண்யம், துளசீவனம்' - என பல பெயர்கள் உண்டு.  

Sri Paramapadha Nadhan is the form in which Emperuman Sriman Narayana is seated at Paramapadham beyond Universe to which we humans cannot go !  Here are couple of photos of Sri Parthasarathi Emperuman Paramapadanadhan thirukkolam and Sesha vahanam at Thiruvallikkeni divaydesam. 
நமது சம்ப்ரதாயத்திலே - எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீ பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். 

திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஒன்று - நாம் இந்த சரீரத்துடன் செல்ல இயலாத இடம்.  வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுந்தம் என்று பெயர். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும்.  மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றெண்ணும்  அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.  பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான்.  அப்படி அங்கே செல்லும் பெரும்பேறு பெற்ற  ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள்  -  எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. 

இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும்  அத்தகைய இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார்  தமது பாசுரங்களில் உரைக்கின்றார். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம்.  

அத்தகைய அற்புத இடத்திலே -  திருவனந்தாழ்வானின் மேல் - தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய், கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம், முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவனம் படைத்தவனாய்,   ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும் முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.  

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் :   

வைகுந்த நாதன்  என்  வல்வினை மாய்ந்தறச்,

செய்குந்தன்றன்னை  என்னாக்கியென்னால் தன்னை,

வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி,

செய்குந்தன் தன்னை  எந்நாள் சிந்தித்தார்வனோ. 

 பரமபதநாதனாக  வீற்று இருக்கும் எம்பெருமான் என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய், பரிசுத்தி பெற்றவனாய்  என்னோடு ஒரு நீராகக் கலந்து என்னைக்கொண்டு தன்னை வைகுண்டபதியாகப் புகமும்படி  மதுரமான   பாசுரங்களை செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய அவ்வெம்பெருமானை சிந்தித்து கை தொழுது அனுசந்திப்பது எந்நாளோ !  அத்தகைய சந்தோசம் என்று அமையுமோ !! 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சன்னதியின் விமானம் -  ஆனந்த விமானம்.  எம்பெருமான் தம் விமானங்கள் மிக புண்ணியம் தருபவை.  திருவரங்கம் - பிரணவாகார விமானம்; திருப்பதி - ஆனந்த நிலைய விமானம்;  திருக்கச்சி  - புண்யகோடி விமானம்; திருக்கண்ணபுரம் - உத்பலாவதாக விமானம்  - என இங்கே :  ஆனந்த விமானம்.  இந்த ஆனந்த விமானத்தின் இடது புறத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபரமபத நாதனின் சேவை இங்கே.  திருக்கோவிலின் உள்ளே ஆண்டாள் சன்னதி அருகில் இருந்து இவரை நன்கு சேவிக்கலாம்.

 


adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.10.2023  

No comments:

Post a Comment