To search this blog

Friday, May 6, 2011

Thiruvellaraiyum Acharyar Uyyakkondarum : Thiruvellarai Divyadesam


திருவெள்ளறை திவ்யதேசமும்  ஓராண்  வழி ஆச்சார்யர் உய்யக்கொண்டாரும்


Dear Friends

Here is something on temple – divyadesam of Thiruvellarai.  For the uninformed, those temples which have been sung by Alwars (known as mangalasasanam) are called Sree Vaishnava Divyadesams.  Thiruvellarai is situated around 25 kms away from Srirangam.  On the way to Thuraiyur from Trichy / Srirangam tollgate via mannachanallur.

This is a huge temple – much like a fortress.  A tall imposing unfinished gopuram is in the vanguard.  As you go inside there is another Gopuram and prakaram.

The Thayar here is Sengamalavalli thayar and there are sannadhies for Nammalwar, Chakkarathalwar, Hanumar.  Once you enter the precincts, there are two gates coinciding with the movement of Sun known as ‘Utharanayanam’ and ‘Dakshinayanam’. 

The Lord here is Pundarikakshar in standing posture, also known as Senthamaraikkannan.   His consort is Pankajavalli.  Legend has it that this temple was constructed by Sibi Chakravarthi of Raghu vamsam, predating even Lord Rama. 

Two acharyas – Uyyakkondar and Engalazhwaan were born here.  Here are some photos of the temple and something about Acharyar Uyyakondar.

Regards – S. Sampathkumar

PS :   As I circulate these, a good friend of mine quipped that he is not able to understand anything as he could not read tamil..  that is the primary reason why you find a small English version in my tamil articles.
*****************************************************

சமீபத்தில் மறுபடி திருவெள்ளறை திவ்யதேசம் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது.  இத்தலம் திருச்சியில்  (ஸ்ரீரங்கம்) இருந்து துறையூர் செல்லும் பாதையில் மண்ணச்ச நல்லூர்  அருகே உள்ளது.  திருவெள்ளறை திரு புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.  இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை  வாய்ந்ததாகக்  கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது.  இது வராஹ அவதார க்ஷேத்ரம். சிபிச் சக்ரவர்த்தி பிரதிஷ்டை செய்த பெருமாள்.




கோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல மற்றொரு கோபுரம், திருக்குளம், பலிபீடம் த்வஜஸ்தம்பம் ஆகியன உள்ளன.  இந்த பலி பீடத்திற்கு கூட விசேஷ திருமஞ்சனம் நடைபெறுமாம். நாம் சன்னதியை நோக்கும் போது இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக  உள்ளது.   தாயார் செங்கமல வல்லி என்ற  திருநாமத்துடன்   தனிக்கோவில்  நாச்சியார் - அழகாக சேவை சாதிக்கிறார். மூலவர் சதுர்புஜங்களுடனும் உத்சவர் இரண்டு திருக்கரங்களுடனும் சேவை சாதிக்கின்றனர்.  த்வஜஸ்தம்பத்தை  சேவித்து  உள்ளே  சென்றால்  பெருமாளின்  அழகான வரைபடம் உள்ளது.





மறுபடி பிரதட்சிணமாக சென்றால் 'தட்சிணாயனம் உத்திராயணம்' என இரண்டு வாசல்கள்.  சித்திரை மாதம் ஆதலால் உத்திராயண படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால்   அழகான  நின்ற  திருக்கோலத்தில்  சேவை சாதிக்கும்  புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன் பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.   . நின்ற திருக்கோலத்தில் நெடிய   பெருமாள்  மார்கண்டேய மகரிஷிக்கும் பூமா தேவிக்கும் சேவை அருளும் பெருமாள்.  பெருமாளுக்கு அருகில் கருட ஆழ்வாரும் ஆதி சேஷனும் நின்ற  திருக்கோலத்திலும் மார்கண்டேய மகரிஷியும் பூமாதேவியும் மண்டியிட்டு அமர்ந்தும்  பெருமாளை வணங்கிக்கொண்டு உள்ளனர்.    புண்டரீகாக்ஷ பெருமாள் உத்சவருடன்  பங்கஜவல்லி தாயார் உள்ளார்.  பெருமாள் சன்னதி அருகே வலது புறம் எல்லா ஆழ்வார்களும் மறு புறத்தில் ஆச்சார்யர்களும் எழுந்துஅருளி உள்ளனர். சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் ஆகியோருக்கு   தனிச்சன்னிதிகள் உள்ளன.

நான் சென்ற அன்று (29/4/11) ஏகாதசி ஆனதால் செந்தாமரை கண்ணன் உத்சவருக்கும் பங்கஜவல்லி தாயாருக்கும் திருமஞ்சனம்;  நன்கு சேவிக்கும்  பாக்கியம் கிடைத்தது.

பெரியாழ்வார்  கண்ணனுக்கு திருஷ்டி தோஷம் வராதபடி திருவந்திக் காப்பிட அழைக்கும்  பத்து பாடல்களும் திருவெள்ளறை மங்களா சாசனம். "இந்திரனோடு பிரமன் ......சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளரை நின்றாய்"  என்பது  பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி. ; திருமங்கை மன்னன் திருமொழி ஐந்தாம் பத்து மூன்றாம் திருமொழியில் 'தென்றல் மாமணம் கமழ தர வரு'  'தாமரை மலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல்'  திருவெள்ளறை நின்றானே ' எனவும் மங்களா சாசனம் செய்துள்ளனர்.


ஆதி அரங்கம் என போற்றப்படும் திருவெள்ளறை - இரண்டு ஆச்சார்யர்களின் அவதார ஸ்தலம்.  உய்யக்கொண்டார் மற்றும் எங்களாழ்வான் இங்கே அவதரித்தனர். புண்டரிகாக்ஷர்  சன்னதி முன்பு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் எழுந்து அருளப்பண்ணி உள்ளனர்.  உய்யக் கொண்டாருக்கும்  எங்களாழ்வானுக்கும்  விக்ரகங்கள் உள்ளன.  ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.



உய்யக் கொண்டாரின் வருஷ திருநக்ஷத்திரம் "சித்திரை மாதத்தில் கார்த்திகை".  இவரது திருநாமம் - புண்டரீகாக்ஷர்.  இவர் நாதமுனிகளின் சீடர். இவரது பல சிஷ்யர்களில் ஒருவருக்கு திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர் என பெயருண்டு.  உய்யக்கொண்டாரின் முக்கிய சீடர் மணக்கால் நம்பிகள்.  ஸ்ரீமந்நாதமுனிகள் இவரை   'சுயநலம்  கருதாது உலக நன்மையே கருதிய நீரே இவ்வுலகை உய்விக்க தோன்றியவர் என  வாழ்த்தியதால்  இவருக்கு  உய்யக்கொண்டார் என திருநாமம்.  நம் வைணவ  ஆசார்யர்களில்  முக்கியமான இவர் திருப்பாவை தனியனை சாதித்து அருளியவர்.   அத்தனியன் :

**அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு **

அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள். அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி நல்ல பாமாலையாக (பாட்டுக்களால் ஆன மாலையாக), பாடிக் கொடுத்தவளும், பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து கொடுத்தவளுமான ஆண்டாளின் புகழைச் சொல்லு!

ஆழ்வார்  எம்பெருமானார் திருவடிகளே சரணம்.  வையம் உய்யக்கொண்டவர் தாள் வையத்தில் வாழியே !

அடியேன்  ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment