எம்பெருமானார் சாற்றுமுறை - சித்திரையில் செய்ய திருவாதிரை
மண்ணுலகில் உள்ளவர்களுக்கு, ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் வாழ்வான நாளாம் சித்திரையில் செய்ய திருவாதிரையின் சிறப்பை பற்றி அடியேனின் சிறு குறிப்பு. பெரிய மகான்கள் எல்லாம் கொண்டாடி சீராட்டிய எம்பெருமானின் வைபவத்தை பற்றி அடியேன் எழுதியுள்ளதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
பதினோராவது நூற்றாண்டில் பிங்கள வருஷத்தில் (1017 கி.பி.) சோமாஜியாருக்கும் காந்திமதியாருக்கும் புத்திரராகச் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் நம் இராமானுஜர் அவதரித்தார். உலகோர்களெல்லாம்) 'அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே, நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே' என இவரது பிறப்பு அமைந்தது.
இராமனுஜருக்கு பல திருநாமங்கள் : இராமாநுஜர், இளையாழ்வார், எதிராசர், உடையவர், எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யகாரர், அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான், நங்கோயிலண்ணர் - என பக்தர்கள் அழைக்கின்றனர்.
லக்ஷ்மி நாத சமாரம்பாம் என குருபரம்பரையின் முதல் ஆசாரியனான திருமால், அதற்கு பின் திருமகள், சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள் என்று நமது ஆசாரிய பரம்பரை உள்ளது. ஆச்சர்யர்களில் எம்மி இராமானுஜனுக்கு உயர்ந்த இடமுண்டு.
உடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்க கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் அவர். பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று "ஸ்ரீமன் நாராயணனின் பரத்வததை" நிலை நாட்டினவர். ஸ்ரீ வைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர்.
ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம், நித்யம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார். ஸ்ரீ பாஷ்யம் அவரது தலை சிறந்த படைப்பு. பகவத் கீதைக்கு விஷிச்டாத்வைத பிரமாணமாய் கீதா பாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண் புகுதலை பற்றி சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீ ரங்கா கத்யம், மஹா விஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்ட கத்யம் என்பன இவரது பிற நூல்கள்.
லோகோபகாரியாகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர் வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்த நாள் அதி விசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே ( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சேவா காலம் முடியும் போது "ராமானுஜார்யா திவ்யாக்யா வர்ததாம் அபிவர்ததாம்" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர்.
செவ்வாயன்று 20 04 2010 - உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடை பெற்றது. காலை புறப்பாட்டில் உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார்.
காலை புறப்பாட்டில் ஸ்தோத்ர பாடல் கோஷ்டி ஆனது. எம்பெருமானார் பிறந்த நாளை அத்யபக சுவாமிகள் மேல் உதரீவத்தை விண்ணை நோக்கி விசிறி ஆர்பரித்து கொண்டாடினர்.
மாலை உடையவர் பெரிய பிரபையில் எழுந்து அருளினார்.
பெரிய கடலை போன்ற கருணை கொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள் பணிவோர்க்கு எல்லா நலமும் பெருகும். அவரை பற்றி சிந்திபோர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும்,
அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.
No comments:
Post a Comment