To search this blog

Saturday, June 18, 2022

learnings from Ithihasa puranas - Thai Rohihi 2022 - நட்பு, வாழ்க்கை நெறி

நட்பு, தோழமை , சினேகம் என்பது மனிதர்களிடையே ஏற்படும் ஓர் உறவாகும். மனித உணர்வுகளில் நட்பு மிகவும் அழகானது.  சிலருக்கு குடும்ப உறவுகளை விட நட்பே முக்கியமானதாக இருக்கும்.   உண்மையான நட்பு எதிர்பார்ப்பு அற்றது. நட்பில் ஒப்பனையும் இருக்கக்கூடாது. ஒளிவு மறைவும் கூடாது.    மன ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கையின் மேன்மைக்கும் நட்பின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.  நட்பு பல இடங்களில், பல காரணங்களால் துளிர்க்கலாம்.  ஒரே பேருந்து, ஒரே ரயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள், ஒரே மாதிரி நினைப்பவர்கள், உணர்வு உடையவர்கள் - என்பதை எல்லாம் தாண்டி, காணாமலே - பேனா நண்பர்கள்; முகநூல் நண்பர்கள் என பற்பல.  



1990ல் பிரபலமான படம் தளபதி.  சிறுவயதிலேயே தாயாரால் அனாதையாக விடப்பட்ட  சூர்யா (ரஜினிகாந்த்) அடிதடி அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் (மம்முட்டி). உடன் சந்தர்ப்ப சூழ்நிலையில் முதலில் மோதி, பின் கொள்ளும் நட்பே கதைக்கரு.  இன்று இப்படம் பலருக்கு அபத்தமாக படலாம்.  அன்று படம் வருமுன்னரே ஒரே ஹேஷ்யங்கள்.  மகாபாரதக் கதையைச் சமகாலக் கதையாக மாற்றியுள்ளார் மணிரத்னம் என்ற செய்தி முன்பே வெளியானது. ரஜினி கர்ணன் என்றும், மம்மூட்டி துரியோதனன் என்றும், அரவிந்தசுவாமி அர்ஜுனன் என்றும் அபத்த வாதங்கள் பரப்பப்பட்டன.   ரஜினி முதல்முதலாக இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார் என்றும் தகவல்கள் வெளியாயின. 

மஹாபாரத மகா காவ்யத்தின் நாயகன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களிடமும், அனைத்து ஜீவராசிகளிடமும் கொண்ட அன்போ, ஏன் கர்ணன் - துர்யோதநாதிகளின் நட்போ - இம்மாதிரி படங்களோடு ஒப்பீட்டு செய்து சிறுமைப்படுத்தாதீர்கள். !!  

இதிஹாச காலம் முதல் மனிதன் பிறரிடம் நட்பும் பகைமையும் கட்டியுள்ளான்.  மனித சமுதாயத்தின் நாகரீகங்கள் வளர வளர, மனித குலத்திற்குத் தேவைகளும் அதிகரித்துக்கொண்டே வந்தன.   அவற்றைச் சமுதாய மக்கள் அனைவருமே ஆங்காங்கே உற்பத்தி செய்து, பலரும் பல நாட்டவரும் பங்கிட்டுக் கொண்டுதான் வாழ வேண்டிய நிலை.  நல்ல சமுதாயங்களில், மனிதர்கள் நட்பு பாராட்டி, பகை நீக்கி  , வெறுப்பு, பிணக்கு இவை எழாமல் இன்புற வாழ்ந்தனர்.  எனினும் மனித குலத்தின் வரலாறு பல பெரும் போர்களை கண்டுள்ளது.  போன நூற்றாண்டில் கூட நன்கு படித்த மனிதர்கள் - இரண்டு உலகப்போர்கள் செய்து, தம் குலத்தையே அழித்து ஆனந்தித்தினர்.  காலங்கள் செல்லச்செல்ல, நண்பன் பகைவன்  ஆகலாம் பகைவனும்   நண்பன் ஆகலாம். இதோ நட்பு பற்றிய திருவள்ளுவர் வாக்கில் ஒரு திருக்குறள் :  

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.  

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். நண்பர்கள், ஒப்பீடு செய்யாமல், வித்தியாசம் பாராட்டாமல், ஒருவருக்கொருவர் எப்போதும் உதவிகள் செய்யவேண்டாம்.  அதே சமயம் பகைவரிடம் நட்பு கொள்ளலாகுமா ? என கேள்வி எழும். இதோ இங்கே கூடாநட்பு பற்றி வள்ளுவர் வாய்மொழி. 

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான். 

வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது. 




 

அரசன் எவ்வாறு ஆட்செய்ய வேண்டும் ! - நாட்டை சுற்றி பகைவர்கள் இருந்தால், நிச்சயம் ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரையும் எதிர்ப்பது நல்லதல்ல ! - அவர்களிடம் உறவு கொள்ளலாமா ? - இது பற்றி ஒரு மஹாபாரத கதை இங்கே :  ஸ்ரீமஹாபாரத வினா விடை - மயிலாப்பூர் பி எஸ் உயர்நிலை பள்ளி உதவி போதகராக இருந்த ஆர் சி கஸ்தூரி அய்யங்கார் என்பவர் 1933ல்  எழுதி வெளியிட்ட நூலில் இருந்து, ஒரு கதை இங்கே :  

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.  அதன் கிளையில் பல பறவைகளும், விலங்கினங்களும் வசித்து வந்தன - ஒரு பூனையும், மரத்தடி பொந்தில் ஒரு எலியும் கூட.  ஓர்நாள், வேடன் ஒருவன் - மரத்தடியில் வலையை விரித்து, சில மாமிச துண்டுகளை தூவினான்.  அவற்றுக்கு ஆசைப்பட்ட பல பறவைகள், கீழே இறங்கி அந்த வலையில் சிக்கின.  இது சில நாள் தொடர்ந்தது.  முட்டாள் பறவைகள் தினமும், ஆசையில் தம் உயிரை மாய்த்துக்கொண்டன !   

ஒரு நாள் பூனை பசியில், அந்த மாம்ச துண்டுகளை சாப்பிட ஆசைப்பட்டு, வலையில் சிக்கிக்கொண்டது.  வலையில் பிடிபட்ட பூனையின் மீது, எலி ஏறி குதித்து விளையாடியது.  எலிக்கான நேரம் .. . .. அதிக நாழிகை செல்லவில்லை - மரத்தில் இருந்து ஒரு ஆந்தையும், கீரிப்பிள்ளையும் - எலியை புசிக்க வந்தன.  எலிக்கு இப்போது பயம், நிலைமை உணர்ந்தது.  பூனை வாயிலா, கீரியின் வாயிலா அல்லது ஆந்தைக்கு உணவாகவா ! - உயிர் போய்விடும் பட்சத்தில், ஏதாயின் என் ?  

பரம வைரியான பூனையிடம் தன்னை காக்குமாறு கெஞ்சியது.  நான் இந்த கால்களிடையே ஒளிந்து கொள்கிறேன், என்னைக் காப்பாற்று ! - பின்னர், வலையை கடித்து, உன்னை காப்பாற்றுகிறேன் என ஒப்பந்தம் பேசியது.  தப்பிக்கும் ஆசையில் பூனை இதற்கு இசைந்தது.  எலி பூனையின் கால்களிடையே ஒளிந்து கொள்ள, சற்று நேரத்தில் கீரியும் ஆந்தையும் விலகின.  வெளியே வந்த எலி - இரண்டொரு கயிற்றை மட்டும் கடித்து, வாளாவிருந்தது.  பூனை, மற்றைய கயிற்றையும் கடித்து தன்னை விடுவிக்க வேண்டியது.   

புத்திகூர்மை உள்ள எலி உரைத்தது :  நீ எம் குலத்திற்கு பரம விரோதி.  விடுவித்த உடனே, என்னை கொன்று விடுவாய் !  - நான் என் வாக்கையும் காப்பாற்றப்போகிறேன்.  வேடன் அருகாமையில் கண்ணில் தெரியும்போது, உன்னை விடிவுக்கறேன்.  அவ்வமயம், நீ தப்பிக்க முயற்சிப்பாயே தவிர, என்ன கொல்லமாட்டாய் என்றது.  மறுநாள் வேடன் அருகில் வர, தன் வாக்கின் படி, எலி, வலையில் இருந்து பூனையை விடுவித்தது.  ஆபத்தை உணர்ந்த பூனை, மரத்தின் கிளை மீது தாவி மறைந்தது - எலியும் தனது வளைக்குள் சென்றது.   

பின்னர் பூனையை எலியிடம் - நாம் ஒருவரை ஒருவர் காப்பாற்றினோம் - இனி நண்பர்களாகவே இருப்போம் என பகர்ந்தது.  அறிவுக்கூர்மை கொண்ட எலி மறுபடி, நம் இனங்கள் விரோதிகள் - ஆபத்தில் ஏதோ ஒன்றாக செயல்பட்டாலும், நாம் கூடி இருத்தல் சாத்தியமல்ல, எனக்கு பாதகமே !! -  நான் என்னை காப்பாற்றிக்கொள்ள இனி உன்னிடம் அணுக மாட்டேன் என ஓடி மறைந்தது.  இது போல அநேக விரோதிகளுக்கு இடையே இருக்கும் அரசன், அபாயத்தில் இருக்கும் ஒரு பலவானான விரோதியிடம் சேர்ந்து கொண்டு, பரஸ்பர உபகாரத்துடன் மற்ற எதிரிகளை எதிர் கொள்ளலாம் - எனினும் தன் இராஜ்ஜியத்தை சீர் கொண்ட பின்னர், அந்த உதவிய எதிரியினிடம் இருந்தும் விலகிட வேண்டும்.  அதுவே சரியான வாழ்க்கை நெறி.   

வேதங்களே நமக்கு பிரமாணங்கள்  ..இதிஹாசங்கள் பல அற்புத உண்மைகளையும், சீரிய வாழ்க்கை முறைகளையும் நமக்கு அளித்தன.  நமது கலாச்சாரத்தையும் சனாதன தர்மத்தையும் போற்றி பாதுகாப்போம். 

நாற்பால வேதத்தான் விண்ணோர் முடி தோயும்  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பாதம் பணிவோம்.  

Falling at the feet of  Bhagwan Krishna who taught us the ideals of life and showed us the way to live and also gave us Srimad Bhagwat Geetha – here are some photos of Sri Parthasarathi emperuman taken during Thai Rohini purappadu at Thiruvallikkeni divaydesam on 10.2.2022. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.6.2022 











No comments:

Post a Comment