திருவீதி வலம் வரும் எம்பெருமானை சேவிப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள் - திவ்யதேசங்களில் வாழ்வதில் முதல் பயன் இது. இது வசந்த காலம். திருவல்லிக்கேணியில் 7 நாட்கள் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் புறப்பாடு உண்டு. பூக்கள் அழகானவை. நறுமணம் தரும் மலர்களை எம்பெருமானுக்கு சாற்றுகிறார்கள். பக்தர்கள் எம்பெருமானை -'பாதாதி கேசம், கேசாதி பாதம்' சேவித்து அனுபவித்து இன்புறுகிறார்கள். அவ்வளவுதானா ? - எம்பெருமானின் திருமுக மண்டலம், அபய ஹஸ்தம், பொன்னான திருவடிகள் அழகு .. .. முன்னழகு மட்டுமல்ல, பின்னழகும் தான் - இன்று பின்னலழகும் கூட !!
நேற்று மஞ்சள் சிகப்பு ராஜாக்களின் கொத்து ஒன்று படம் போட்டு - இது என்ன என்று கேட்டு இருந்தேன் ! - திருவல்லிக்கேணி வாசிகள் முப்பதின்மர் வெகு எளிதில் அதை அடையாளங்கண்டு கொண்டு - அந்த பூக்கள் எம்பெருமானின் ஜடை பின்னலை அலங்கரிப்பன என உடனடி பதில் அளித்தனர்.
திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் நூல் - பரஞ்சோதி முனிவர் எழுதியது. சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக அமைந்தது. இப்போது வரும் உளறல் நாயகர்களின் படங்கள் போலல்லாமல் - சுமார் 50 வருடங்கள் முன்பு பல புராண கதைகளை கொண்ட படங்கள் வெளிவந்தன. திரு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் - திருவிளையாடல். . சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர் வேடத்தில் இயக்குனர் நடித்து இருந்தனர். சிவாஜியும் நாகேஷும் உரையாடுவது இன்றளவும் அனைவரும் கேட்டு கேட்டு ரசிக்கும் பகுதி. திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. அந்நூலின் ஐம்பத்திரண்டாவது படலமாக தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் உள்ளது. இதில் சோமசுந்தரப் பெருமான் வறுமையில் வாடிய வேதியனாகிய தருமி என்பவனுக்கு மன்னனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலை தானே எழுதிக்கொடுத்து பொற்கிழி பெற்றுக் கொடுத்த வரலாறு கூறப்படுகிறது.
மன்னர் அறிவித்த பரிசினை வாங்குவதற்கு தருமி என்கிற ஏழை புலவன், இறைவன் சொக்கநாதரிடம் கவிதையை வாங்கிப்போய் மன்னனிடம் வாசித்துக் காட்டுகிறான். அந்தக் கவிதையில் தன்னுடைய சந்தேகம் நீங்கியதாகக் கருதும் மன்னன், பரிசினை தருமிக்கே அறிவிக்கிறான். அரண்மனைப் புலவர் நக்கீரர் இதை ஆட்சேபிக்கிறார். கவிதையில் கருத்துக் குற்றம் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து இறைவனே அரசவைக்கு வந்து நக்கீரரோடு தன் தமிழில் என்ன பிழையென்று வாதாடுகிறார். வாதம் முற்றி, ஒருகட்டத்தில் தன்னை வெளிப்படுத்தும் இறைவன் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறக்கிறார்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி .. .. .. மயிலியல் செறியெயிற்றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே.“ தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல !!!!
கூந்தல் மணம் உண்டா என்பது இங்கு விவாதமல்ல ! .. பெண்களுக்கு கூந்தல் அழகு ! - அதை பின்னி அழகாக அணிவார்கள். சில வருஷங்கள் முன் பள்ளிகளுக்கு இரட்டை ஜடை போட்டு மாணவிகள் வருவார்கள் ! - ஜப்பானிலும் போனிடெய்ல் போட்டு பள்ளிக்கு வரக்கூடாது என ஒரு விதி உள்ளதாம். திருமணத்திற்கு வரும் பெண்கள் பெரும்பாலும் மணப்பெண் அலங்காரத்தை. அதிலும் குறிப்பாக மணப்பெண் சிகை அலங்காரத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. மணமகள் கூந்தலை எந்தமாதிரியான வடிவில், அவரின் முக அமைப்பிற்கு ஏற்றவாறு அழகுபடுத்துவது, எந்த மாதிரியான ஆபரணங்கள், பூக்களை பயன்படுத்துவது. மணமக்கள் திருமண உடைக்கு இந்த சிகை அலங்காரம் பொருந்துமா என மணப்பெண் கூந்தல் அலங்காரத்திற்கு பெண்கள் ரொம்பவே மெனக்கெடுவார்கள். திருமணத்திற்கு முன்பெல்லாம் இயற்கையில் பூத்த மலர்களைக் கொண்டே ஜடை, வேணி போன்றவற்றை தயாரித்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி, தாமரை மலர்களே மணமகளின் கூந்தலை பெரும்பாலும் அலங்கரிக்கும். ஆனால் இப்போது டிரெண்ட் மாறிவிட்டது. உடைக்கேற்ற வண்ணத்தில், செயற்கை மலர்களால் தயாரான சிகை அலங்காரங்களைப் பெண்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர்.
நிற்க ! இதுகாறும் படித்த அனைத்தையும் புறந் தள்க !! பல வண்ண மலர்களின் இதழ்களை, ஒரு கோர்வையாக சேர்த்து ஜடையை அலங்கரிப்பதும், மலர்களோடு வேறுசில பொருட்களை கொண்டு அலங்கரிப்பதும் நிபுணர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இந்த ஜடை மிக வித்தியாசமானது.
நேற்று வசந்த உத்சவத்தின் இரண்டாம் நாள் புறப்பாட்டில் - எம்பெருமான்
ஸ்ரீபார்த்தசாரதி மிக அழகான கருங்கண் தோகை
மயில்பீலி அணிந்து சந்திர, துரா பதக்கங்கள், தங்க தாழம்பூ, ஆபரணங்கள் அணிந்து, பொன்னாலான
கோல் திருக்கரங்களில் கொண்டு அற்புத சேவை அளித்தார். மயில் இறகு கொண்டையிட்டு, பின்னல்
ஜடை கட்டி, தவழும்திருக்கோலத்தில் எம்பெருமானின் அதி அற்புத படங்கள் இங்கே. பின்னழகில் - பின்னல் ஜடை, மலர்மாலைகள், ஆதிசேஷ
பதக்கம், திருத்தோள்களின் ஆபரணங்கள், முடிவாக - திருக்கூந்தல் முடிச்சில் கொத்தாக ரோஜா
மலர்கள் என எம்பெருமான் பக்தர்களை தம் பக்கல் இருத்தினார். நேற்று இந்த திருக்கோலத்தில் எம்பெருமானை கண்ணுற்று
மயங்கி, சாற்றுப்படி சாற்றிய பெரியமுறை அர்ச்சகர்களை
மனமார பாராட்டி நாமும் ஆனந்தித்தோம். நேற்றைய
புறப்பாட்டின் சில படங்கள் இங்கே
Very very beautiful sathuppadi...!!
ReplyDelete