To search this blog

Tuesday, June 8, 2021

Praying Emperuman Sriman Narayana ~ வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து.

தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அகத்திணையியலில்  ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.  இங்கே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் குறிப்பிடப்பட்டுள்ளனர். சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் இச்சொல்லுக்கு   பூட்டனின் பாட்டன்; ஐந்தாம் தலைமுறை மூத்த ஆண் போன்ற அர்த்தங்களும் உண்டு. . “மாயோன் மேய காடுறை உலகமும்; சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்; வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் - சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 

இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள்.  மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரியோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடைமொழி. முல்லை நிலத்திற்குரிய கருடனையும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள்.  

நிற்க !  -  இது தமிழ் இலக்கண பாடமல்ல ..   ஆழ்வார்கள் பாசுரங்களில் அமுதத்தமிழ் பொழிகிறது.  தமிழ் தலைவனாம் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரங்களில் எளிமையான வார்த்தைகளில் அற்புத அர்த்தங்களை அனுபவிக்கலாம்.   கண்ணபிரானையே 'வானோர்க்கும் சேயோன்' என வாழ்த்தி உரைக்கின்றார் நம் பேயாழ்வார்.  

இவ்வுலகமே கொரோனா கோவிட்  19 எனும் தீநுண்மியை எதிர்த்து போராடி வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.  கோடிக்கணக்கானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் கோரத் தாண்டவம் கடந்த 2020 முதல்  உலகில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் வூஹான் வைராலஜி மையத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டே தங்களின் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. மனிதக்குல வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உருவாக்கப்பட்டது.  

இந்திய பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள்,  கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் (7.6.2021) தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக உரையாற்றினார்.  இந்தியாவில் ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று இந்திய பிரதமர்  தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 23 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன.   

தடுப்பு மருந்து என்பது, நோயை உருவாக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். நோய் எதிர்ப்பு மண்டலம், வைரஸின் கட்டமைப்பு கூறுகளை அடையாளம் கண்டு நோயை உருவாக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு எதிர்வினையாற்றும். தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை மூன்று விதமாக எதிர்வினையாற்றும். அவை ஒவ்வாமை, உடலுக்கு கேடு விளைவித்தல், அல்லது நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்னையை உருவாக்குவது. ஒவ்வாமை என்பது ஒரு சில நாட்களில் வந்துவிடும். இரு வாரங்களுக்கு பிறகு அது குறைய தொடங்கும்.  ஒரு மாதத்திற்கு பிறகு தடுப்பு மருந்தால் எந்த கெடுதலான எதிர்வினையும் ஏற்படாது.  மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, சுயகட்டுப்பாட்டுடன் நோயை எதிர்த்து போராட வேண்டும்.  

இதிஹாச காலங்களில் இருந்து இன்று வரை பூமியில், எதிரியற்ற ஒரு வளமான நாடோ, பிரச்னைகளே இல்லாத மனித குலமோ இருந்ததில்லை.  அனைத்து வளங்களும் சிறந்து இருந்தாலும் கூட, மனிதர்களின் பேராசையும் துர்குணங்களும் அழித்தலில் முடிவடைந்துள்ளன.  புலன்,  நுகர் பொருட்களை நினைப்பதால், அவற்றில் ஒருவனுக்குப் பற்று ஏற்படுகிறது.  பற்றுதலில் இருந்து ஆசை,  கோபம், மயக்கம்,   நினைவு இழப்பு, அறிவு இழப்பு என மனிதர்கள்  முற்றிலுமாகவும் அழிகிறார்கள்.  நம் வைஷ்ணவ சம்ப்ரதாயம் உணவு, எண்ணம், செயல் என ஒவ்வொன்றிலும் சாத்விக குணங்களை பரப்பி எம்பெருமானிடத்தில் அனுபவித்து அவனிடம் சென்று சேர ஆசார்யர்கள் மூலம் நல்வழிப்படுத்துகிறது.   

பெரிய மழைநாளிலே கடுஞ்சிறையில் பிறந்த கண்ணன், அன்றிரவே யமுனை ஆற்று வெள்ளத்தை கடந்து கோகுலத்தில் வசுதேவர் இல்லத்தில் தினமும் போராட்டமாக  - பூதனை,  அரிஷ்டன், தேனுகன், பிலம்பன், கேசி, சகடன்,  என பல வடிவில் வந்த அரக்கர்களை கொன்று, இடையில் தவழ்ந்து, விளையாடி, காளியன்  மீது நடமாடி, குரவை கோத்து, கோவர்தனத்தை தூக்கி, ஆநிரை காத்து, குவலயாபீடம் தந்தத்தை  முறித்து  வளர்ந்து பின்னாளில் பாண்டவர்க்கும் நமக்கும் கீதை எனும் பாடம்  உரைத்தான்.  அந்த கண்ணபிரானையே 'வானோர்க்கும் சேயோன்' என வாழ்த்தி உரைக்கின்றார் நம் பேயாழ்வார்.:  

தொழுதால் பழுதுண்டே   தூநீருலகம்,

முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட

வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்

சேயானை நெஞ்சே சிறந்து.

 
நிர்மலமான நீரையுடைய கடலோடு கூடின உலகங்களை முழுவதும் விழுங்கி,  தனது திருவயிற்றிலே வைத்தவனாயும், அழகிய கூந்தலையுடையளான யசோதையினுடைய வெண்ணெயை அமுதுசெய்த வாயையுடையவனாயும்,  கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்  பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானை  சிறப்புற வணங்கினால், அது பழுது ஆகாமல் எல்லா நன்மையையும் பயக்கும் என தனது நெஞ்சத்திற்கு உரைக்கிறார் நம் தமிழ்த்தலைவன் பேயாழ்வார். 

Here are some photos of –“'வானோர்க்கும் சேயோன்'  Sri Parthasarathi Emperuman on 23.10.2015 – the day was Aippaisi Sadayam – and in the morning Sri Parthasarathi had purappadu adoring a single beautiful rose garland to Sri Peyalwar sannathi for thirumanjanam on sarrumurai avasaram of Sri Peyazhwar. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasa dhasan
8.6.2021 No comments:

Post a Comment