To search this blog

Friday, August 25, 2023

Thiruvallikkeni sirappu - Ashta Prabandham - திருவல்லிக்கேணியான் சீர்

திருவல்லிக்கேணி வங்கக்கடல் ஓரத்தில் அமைந்து இருக்கும் ஓர் அற்புத திவ்யக்ஷேத்திரம் - ஆழ்வார் பாடல்களை பலமுறை கேட்டு அனுசந்தித்து ஆனந்தித்துள்ளோம்.  இன்று  வேறு ஒரு பாசுரம்.



 

திரிந்துழலுஞ் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்

புரிந்து புகன்மின் புகன்றான் - மருந்தாங்

கருவல்லிக்கேணி யாமாக்கதிக்குக்  கண்ணன்

திருவல்லிக்கேணியான்  சீர். 

ஐம்புலன்களில் கட்டுக்கடங்காமல்,  சென்று அலைகின்ற மனத்தை, அவ்வாறு செல்லவொண்ணாமல்   நேராக நிறுத்தி,   திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்திழுந்தருளி இருக்கிற  கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது,  அருமை பெருமைகளை   விரும்பிக் கூறுங்கள்.  அவ்வாறு புகழ்ந்துகூறினால், அது கருப்பமாகிய கொடிக்கு,  நசிக்கச்செய்யும்  ஒளஷதமாம்;  சிறந்த முத்தியுலகத்துக்கு (மாகதிக்கு) , ஏணி ஆகுமாம். மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணி எம்பெருமானின்  கீர்த்தியை பாடுவதே முக்திக்கு எளியஉபாயமாகும்.  இது,  தொண்டைமான்சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத் தனது குடும்பத்தோடு சேவைசாதித்த தலம்; இத்தலத்துப்புஷ்கரிணி - அல்லிப்பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணியென்று வடமொழியிலும், திருவல்லிக்கேணியென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.  

இந்த அற்புத பாசுரத்தை நமக்கு தந்தவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர் அழகிய மணவாளதாசர் எனவும்  தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர். இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதி  அஷ்டபிரபந்தம்.   “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்“ என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வைப் புலப்படுத்தும். இவரது பாடல்கள் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன. கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.  

இவர் இருமொழி புலமைப் பெற்றவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் திவ்விய பிரந்தசாரம் எனக் கூறுவர்.  அஷ்ட பிரபந்தங்களாவன : 

·        திருவரங்கக் கலம்பகம்

·        திருவரங்கத்து மாலை

·        திருவரங்கத்து திருவந்தாதி

·        சீரங்கநாயகர் ஊசல்

·        திருவேங்கட மாலை

·        திருவேங்கடத்தந்தாதி

·        அழகர் அந்தாதி

·        நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி. 

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி  சொல்நோக்கு பொருள்நோக்கு தொடைநோக்கு நடைநோக்கு முதலிய இனிய நோக்கங்கள்யாவும் அமைய ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும் நால்வகையிலும் திவ்வியகவிகளைப் பாடவல்ல புலவர்பெருமானாதலால், இவர்க்கு 'ஏற்றம்' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. ஏற்ற மணவாளர் என்பது எம்பெருமானது விஷயமான கவிகளைச் சொல்வதற்கு தகுதியுடைய மணவாளர் என்று உரைத்தலும் பொருந்தும்;  மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் மங்களாசாசனஞ்செய்த நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளைப் பற்றிப் பாடிய அந்தாதித்தொடையாலமைந்த நூல் என்பது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின்  பொருள். 






Enjoying the pasuram of Pillai Perumal Iyengar on Thiruvallikkeni divyadesam,  here are some photos ot Sri Parthasarathi Emperuman taken during thiruther thirumanjanam and theerthavari purappadu during Chithirai brahmothsavam 2023.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.8.2023 

No comments:

Post a Comment