To search this blog

Thursday, June 1, 2023

Sri VAradhar purappadu @ twilight - Yali vahanam 2023

சாயங்காலம் (அந்தி நேரத்தில்) ஸ்ரீ வரதராஜர் உத்சவ  புறப்பாடு


 

கோசல நாட்டில் வணிகம் பெருகி செல்வமும் கணக்கின்றி குவிந்து கிடந்தன. அந்த நாட்டிலுள்ள நிலத்தடி சுரங்கங்களெல்லாம் பற்பல தாதுக்களையும், மணிகளையும் வாரி வாரி கொடுத்துக் கொண்டிருந்தன. விளை நிலங்களோ உற்பத்தியைக் கணக்கின்றி கொடுத்தன தானியங்கள் மலை மலையாய் குவிந்து இருந்தன. கோசல நாட்டு மக்கள் ஒருவர் போல அனைவரும் நல்லொழுக்கமும் நல்ல பண்பாடும் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள்.  அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு திருமகனாக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருவவதாரம் செய்தார். 

இன்று சாயங்காலம் (அந்தி நேரத்தில்) ஸ்ரீ வரதராஜர் உத்சவ 2ம் நாள்  புறப்பாடு நடைபெற்றது.  தேவாதிராஜர் யாளி வாகனத்தில் எழுந்து அருளினார்.  அந்தி என்ற பெயர் சொல்லுக்கு :  மாலை, சந்தியா காலம், செவ்வானம், சந்தியாவந்தனம், முச்சந்தி, பாலை யாழ்த் திறவகை என பல பொருட்கள் உண்டு.  

In English it would mean :  dusk, twilight, nightfall, dawn day with night. 

அந்தி’ எனும் சொல் இங்கு மாலை நேரத்தை மட்டும் குறித்தாலும் - பொதுவாக நேரத்தினைக் குறித்து நிற்பதாகவும் சில கூற்றுக்கள் உள்ளன.   எனினும் நாம் இதை சூரியன் மறையும் காலமாகவே கொள்கிறோம்.  அந்திமந்தாரை (Mirabilis Jalapa)  எனும் பூ  சாயந்திர வேளையில்  மலர்வதால்,  அந்திமந்தாரை அல்லது அந்திமல்லி என்று அழைக்கப்படுகின்றது.  இதுவே பெருவின் அதிசயம் ((Marvel of Peru) என்றும், நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant), நாலு மணிப்பூ அல்லது அஞ்சு மணிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. 

அதிசிறப்பு வாய்ந்த அயோத்தி இளவல்  ஸ்ரீராமபிரான்  தன் அவதார நோக்கத்தால் அடர்ந்த காடுகளில் பல ஆண்டுகள் கழிக்க நேர்ந்தது.  அனைத்து  பெருமைகளையெல்லாம் தனக்கே உரிமையாக்கிக் கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தி ஒருநாள் தன் அரண்மனையில் கொலு மண்டபத்தில் அமைச்சர் பரிவாரங்கள் புடைசூழ அமர்ந்திருந்த போது சினத்திற்குப் பெயர் போன விஸ்வாமித்திர மகரிஷி அந்த அரசவைக்கு வந்து சேர்ந்தார். 

"தசரதா!  அடர்ந்த வனத்துக்குள் நான் ஒரு தவ வேள்வியை நடத்துகிறேன். அதை அரக்கர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்;  அவர்கள் அப்படி இடையூறு செய்யாவண்ணம் அவர்களை தடுத்து நிறுத்த நின் மக்கள் நால்வரில் கரிய செம்மலாகிய ராமனை என்னோடு அனுப்பி வை" என்று அவர் கேட்டதும், தசரத சக்கரவர்த்தி உடல் நடுங்க, குரல் தழுதழுக்க, கைகூப்பி முனிவரிடம் கூறுகிறான்: "முனிவர் பெருமானே! அரக்கர்களால் தங்கள் யாகம் தடையின்றி நடைபெற வேண்டும் அவ்வளவுதானே? என் மகன் ராமன் வயதில் இளையவன்.  அவன் வேண்டாம். உமது வேள்விக்கு இடையூறாக யார் வந்தாலும்,   நான்   அவர்களை முறியடித்து உங்கள் யாகத்தை முடித்து வைப்பேன்" என்றான். 

இந்த வாக்கை கேட்ட  விஸ்வாமித்திர முனிக்கு பெரும் கோபம் ஏற்பட்டது.   தசரத மன்னனின் குல குருவான வசிஷ்ட முனிவர்  "மன்னா! கோசிக முனிவரது நோக்கத்தைப் புரிந்து கொள்!" என்று சொல்லி இராமனையும் இலக்குவனையும் அனுப்பி வைத்தார்.  முனிவர் முன்னே செல்ல, அடுத்து இராமனும், அவன் பின்னே இலக்குவனுமாகச்  நடந்து சென்று சரயு நதியை அடைந்தனர்.  இரவுப் பொழுதை அங்கே ஒரு சோலையில் கழித்தனர். 

முனிவரின் தவத்தை காத்த பின் ஓர் நாள் - சித்தாஸ்ரமத்திலிருந்து புறப்பட்ட அம்மூவரும் சோனை நதிக்கரையை அடைந்தனர். இந்த நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் ஆறு. அங்கு சென்றடையும் போது மாலை நேரம் வந்தது. சோனை நதிக்கரையிலிருந்த ஒரு சோலையில் மூவரும் அன்றிரவைக் கழித்தனர். மறுநாள் மூவரும் நடந்து சென்று கங்கைக் கரையை அடைந்தனர். 

இராமபிரான் மண முடிந்து - கைகேயி வார்த்தைகளால் குலக்குமரா காடுறையப்போ என ஏகி இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. கம்ப இராமாயணத்தில் - அயோமுகி என்ற அரக்கியின் செயல்களை விளக்குவது, அயோமுகிப் படலம் ஆகும்.   அயோமுகி என்ற சொல் இரும்பினால் ஆகியது போன்ற முகம் உடையவள் என்று பொருள் தரும். இலக்குவன்பால் காதல் கொண்ட அயோமுகியின் செயல்கள் இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன. இராமன் மேல் காதல் கொண்டு இலக்குவனால் உறுப்பிழந்த சூர்ப்பணகையின்  கதைக்கு ஒத்த இணைக் கதையாக இது விளங்குகிறது. அயோமுகி ஒரு நிகழ்ச்சிப் பாத்திரமாவாள். கதையில் இராமனும் இலக்குவனும் பிரியும் சிறு பிரிவுக்கு இவள் வழி வகுக்கிறாள். அப்பிரிவின் அவல உணர்வும், பாசப் பிணைப்பும் இப்பகுதியில் கம்பரால் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளமை அறியற்பாலது. 

அந்தி வந்து அணுகும்வேலை,      அவ் வழி, அவரும் நீங்கி,

சிந்துரச் செந் தீக் காட்டு ஓர்   மை வரைச் சேக்கை கொண்டார்; 

அந்தி மாலைப் பொழுது வந்து சேரும் வேளையில்;   இராமலக்குவர்கள்;  அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு;  சிவந்த தீயினைப் போல சிந்துரப் பொடிகள் காட்சியளிக்கின்ற   ஒரு பெரிய மலையைத்  தங்குமிடமாகக் கொண்டார்கள்.   

இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீவரதராஜர் உத்சவத்தில் இரண்டாம் நாள்.  தேவாதிராஜர் யாளி வாகனத்தில் புறப்பாடு கண்டருளினார்.  பெருமாள் சிங்கராச்சாரி தெருவில் எழுந்து அருளும் போது அந்திப் பொழுதில் சூரியன் மறைய செக்கச்சிவந்த வானம் தங்க தூரிகையால் வரைந்தது போல சிறப்பாக இருந்தது.  சில நிமிடங்கள் கழித்து, திருவந்திக்காப்பு சமயத்தில் நீல வானத்தில் அம்புலி உயர காட்சியளித்தது.  ஒரு படத்தில் எம்பெருமான் ஒளி, கும்ப ஆரத்தி / கற்பூர ஹாரத்தி, நிலவொளி சேர காணலாம்.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.6.2023 2 comments:

  1. Wow. What a narration... Outstanding write up Swami. Pictures are "CLASS" Of your own. Pranams.
    B Venkatakrishnan
    ThiruvallikkeNi

    ReplyDelete
  2. excellent picturisation with explanation for andimam

    ReplyDelete