To search this blog

Monday, March 27, 2023

Sree Ramar Yanai vahanam 2023 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

Sree Ramar Yanai vahanam 2023 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

 


கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வான்  ஒரு பெருங்கவிஞன். அவனுடைய படைப்பில் புவியியல், தொன்மம், வரலாறு, வர்ணனைகள், அரசியல், நிதி, நீதி, சமூகவியல் என பலதுறைகள் விவரிக்கப்படுகின்றன.  கம்ப ராமாயணம் ஸ்ரீராமன் காதையா !  கிருஷ்ணன் பற்றி பாசுரங்கள் உண்டா !! என கேட்டால் என் சொல்வீர் ??

ஜகம் புகழும் புண்ணிய கதை  இராமனின் கதையே !   அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு யாகத்தின் பலனாய் ஸ்ரீராமபிரான் அவதரித்தார்.  அவர் தம் காதை  "ஸ்ரீ இராமாயணம்".  தந்தை சொல் காக்க இராஜ்ஜிய பரிபாலனம் துறந்து, மரவுரி தரித்து,   கொடிய வனம் புகுந்து, கானகம் எல்லாம் திரிந்து, தர்மம் காத்தவன்   ஸ்ரீராமபிரான்.  அந்த யுக புருஷருக்கு  அவர்தம் பிறந்த புண்ணிய மண்ணிலே அற்புத ஆலயம் எழ உள்ளது மிக்க ஆனந்தத்தை தருகிறது.
தொன்மங்கள் என்பது 'பழைமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழைமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது தொன்மங்கள் ஆகும். பழமை என்பதை வடமொழியில் 'புராணம்' என்று   அழைக்கப்படுகிறது.   தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் சான்றுகளாக உள்ளன.  எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. ~ கம்பராமாயணம் ஒரு அற்புத இலக்கிய விருந்து.  வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு  தமிழின் சுவை கூட்டி  கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்டதாகும். 

கவிச்சக்கரவர்த்தியின்   அற்புத படைப்பில் பால காண்டத்தில் உள்ள பல படலங்களில் ஒன்று -  சந்திரசயிலப் படலம்.  தசரத     மன்னனுடன் சென்ற சேனைகள் சந்திரசயிலம் எனும் மலையைக்  கண்டதுபற்றிக்  கூறும்  பகுதியாக இருப்பதால் இப்பெயர் பெற்றது.   இதில் ஒரு பாடலில்,  தேர்களின்  செயல்கள்   கூறப்பெறுகின்றன.  மகளிர் இளைப்பாறித்   துயில்   கொண்டார்கள்.   மைந்தரும்  மங்கையரும் திரிந்தார்கள்.    பட   மாடங்களில்   வதிந்தார்கள்.   யானைகளும் குதிரைகளும்  வருகின்றன;  ஊற்றுநீர் சுரந்தது; வீரர்கள் மாடத்தினுள் நுழைந்தார்கள்;   யானைகள்   நீரைக்  கலக்கின;  அட்டிலில்  புகை எழுந்தது. சேனைகள் பொலிவுபெற்று விளங்கின.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தனது  பால்ய பருவத்திலேயே பல லீலைகள் செய்தான் - கம்சன் ஏவிவிட்ட அசுரர்களை அநாயசமாக  அழித்தான்.   ஒரு நாள் யசோதை, தாமரைக் கண்ணனை ஒரு கயிற்றை அவனது இடுப்பைச் சுற்றிப்பூட்டி, அதை ஓர் உரலில் கட்டி விட்டு  தன் பணியில் ஈடுபட்டாள்.  தன்னை விட பெரிதாக காட்சி அளிக்கும் உரலுடன் முற்றத்தை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன், யமலம் மற்றும் அர்ஜுனம் என்ற பெரும் மரங்கள் இருந்த காட்டுக்குச் சென்றான். உரலை அந்த மரங்கள் இரண்டிற்கும் இடையில் வைத்து அவன்  இழுக்கும்போது அர்ஜுனம் மற்றும் யமலம் என்ற அந்த மருத மரங்கள் இரண்டும் தங்கள் கிளைகள் மற்றும் வேர்களுடன் முறிந்து விழுந்தன.

அவ்வாறாக - தன்னைக் கட்டியிருந்த கட்டுத்தறியை இழுத்துக் கொண்டு விரைந்து செல்லுகையில்    அக்   கட்டுத்   தறியால்   இரண்டு    மாமரங்கள் முறிந்துவிழச்   செய்தது   ஒரு   யானை.   இதற்குத்   தன்  தாயால் கட்டப்பட்ட   உரலை    இழுத்துச்  செல்லுகையில்  இரட்டை  மருத மரங்களை முறித்த கண்ணனை உவமையாக்கினார்  கம்பர் தமது - சந்திர சயிலப் படலத்தில்.   

திரண்ட தாள் நெடுஞ் செறி பணை     மருது இடை ஒடியப்

புரண்டு பின் வரும் உரலொடு     போனவன் போல,

உருண்டு கால் தொடர் பிறகிடு     தறியொடும் ஒருங்கே

இரண்டு மாமரம் இடை இற     நடந்தது ஓர் யானை.


இராமபிரானுக்கு அனுமந்த வாஹனம் அமைவு - ஏனைய வாகனங்களிலும் சிறப்பு.  திருவல்லிக்கேணியில் இன்று ஸ்ரீராமபிரானுக்கு வெள்ளி யானை வாகன புறப்பாடு.

At Thiruvallikkeni divyadesam, today was day 6 of ongoing Sree Ramanavami Uthsavam and Sri Ramapiran was on white silver elephant.  It was Thiruvasiriyam and Periya thiruvanthathi in the goshti;  here are some photos taken during today’s purappadu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.03.2023  No comments:

Post a Comment