To search this blog

Tuesday, September 27, 2022

Thiruvallikkeni Aani Thiruvonam purappadu 2022 - ஆழி - எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி

ஆழி -  எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். இதற்கு :  கடல்; கடற்கரை; அரசனின் ஆணைச் சக்கரம் ;   மோதிரம்; சக்கரம்; வட்டம்; கட்டளை என பல அர்த்தங்கள் உண்டு.  ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது முதன்மை  பொருள்.  இதனாலேயே   கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது.  திருவாரூரில் உள்ள திருத்தேர்  அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்கதுவாகும்.    பண்டைக்காலத்தில் திருவாரூர் தியாகேசப் பெருமான் தேருக்கு எழுந்தருளும்போது பொன்பூ, வெள்ளிப்பூக்களை வாரி இறைப்பதாகக் கூறுவர். பொன்பரப்பிய திருவீதி என்று ஒரு வீதிக்கு உள்ள பெயரை வைத்து இதனை உணரலாம். அடிக்கோராயிரம் பொன் சின்னங்கள் கூற அளிப்பார் என்று திருவாரூர்க் கோவையும், உய்யும்படி பசும்பொன் ஓராயிரம் உகந்து பெய்யும் தியாகப்பெருமானே என்று திருவாரூர் உலாவும் இதன் சிறப்பைக் கூறுகின்றன.  பெரிய தேரை இழுக்க 12,000 தேவைப்பட்டனர் என குறிப்புகள் உள்ளன. 




இச்சொல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பொருளானது விந்தையே !  .. .. சில வருடங்கள் முன்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, இரண்டு விடைகளில் ஏதாவது ஒன்றை அளித்திருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   'கடலை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு' என்ற கேள்விக்கு, 'ஆழி' என, பதில் அளிக்கப்பட்டிருந்தது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான,   தேர்வில், வேலூர் மாவட்டம், வீராரெட்டிபாளையத்தைச் சேர்ந்த, ஈஸ்வரி என்பவரும் பங்கேற்றார்; 81 மதிப்பெண் பெற்றார். கேள்விகளுக்கான, 'கீ' விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில், இதற்கு, ஈஸ்வரி தரப்பில், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.அவர் அந்த கேள்விக்கு  'சமுத்திரம்' தான் சரியான பதில் என, தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியிட்ட, 'கீ' விடைத்தாள் அடிப்படையில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட கேள்விக்கு, சரியான விடை அளித்தும், மதிப்பெண் அளிக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி, மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார்.  

நிபுணர்களின் கருத்தை பெற, முதுகலை பட்டம் பெற்ற மூன்று தமிழ் ஆசிரியர்களை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர்களிடம் கருத்து பெறப்பட்டது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ''கடலை மட்டும் குறிக்காத சொல் என்பதற்கு, சமுத்திரம் என்பதும், சரியான பதில் தான். சமுத்திரம் என்பதற்கு, 'கடல், ஓர் எண், மிகுதி என்ற அர்த்தங்கள் உள்ளன,'' என்றார். இதற்கு ஆதாரமாக, சென்னைப் பல்கலை கழகம் வெளியிட்ட, அகராதி, தமிழ் அகரமுதலி, சாரதா பதிப்பகம் வெளியிட்ட தமிழ் அகராதியை, தாக்கல் செய்தார். அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர்  'ஆழி என்பதுதான், சரியான விடை. ஆழி என்பதற்கு, 'கடல், மோதிரம், சக்கரம்' என, பொருள் உள்ளது. நிபுணர்களும், இது தான் சரி என, கூறியுள்ளனர்,'' என்றார்.  

மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து :: நீதிமன்றத்துக்கு வந்த நிபுணர்கள், 'ஆழி' தான், சரியான விடை; சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல; எனவே, சமுத்திரம், சரியான விடை அல்ல' என, கூறியுள்ளனர். 'சமுத்திரம்' என்பது தமிழ் வார்த்தை அல்ல என கூறுவதை, நான் ஏற்கவில்லை. அது, தமிழ் வார்த்தை அல்ல என்றால், தமிழ் அகராதிகளில், சமுத்திரம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்காது. ஆனால், 'சமுத்திரம்' என்பதற்கு, மூன்று விதமான அர்த்தங்கள் இருப்பது, தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள, 'கீ' விடைத் தாள், முழுமையாக சரியில்லாததால், மனுதாரருக்கு அளிக்கும் பயன், மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும். அனைவருக்கும், நீதி கிடைக்க வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, 'கடலினை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு' என்ற கேள்விக்கு, 'ஆழி' என்றோ, 'சமுத்திரம்' என்றோ, விடை அளித்திருந்தால், அவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். அனைத்து விடைத்தாள்களையும், மறு மதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட முடிவை வெளியிட வேண்டும். ஒரு வாரத்துக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்  

நமது வாழ்க்கை எளிமையானது .. பரம்பொருளான ஸ்ரீமன் நாரணனை மட்டுமே சுற்றி வருவது.  எம்பெருமானே ஆழிப்பிரான்  -  எம்பெருமான்  திருவவதரிக்கும்போதே கையுந்திருவாழியுமாய்த் திருவவதரித்து, பிறகு பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரிதபக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினவன்.  இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரத்திலே ரசமான ஒன்று :  





ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,

தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம்மான்  தன்னை

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,

நாளும் பிறப்பிடை தோறு எம்மையாளுடை நாதரே.  

ஆள்கின்ற பரம புருஷனாகவும் ஸ்ரீகிருஷ்ணனாகவும்  திருவாழியாழ்வானையுடைய  உபகாரகனாயும்,  ஒப்பற்ற நான்கு புஜங்களையுடையவனாயும்  பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தை  உடையவனாயுமிருக்கின்ற எம்பெருமானை, தாளும் தடக்கையும் கூப்பி  வணங்குகின்றவர்கள்  - எல்லா ஜென்மங்களிலும்,  தினந்தோறும் எங்களை ஆட்கொள்ளும் அடிகளாவர் என திருமாலடியார் தம் சிறப்பை உரைக்கின்றார் நம்மாழ்வார்.  

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே பார்த்தனுக்கு சாரதியாக பணி புரிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் - ஸ்ரீபார்த்தசாரதியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.  இதோ இங்கே நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளின் அற்புத திருக்கோலம் - ஆனி திருவோணம் புறப்பாடு 18.6.2022  அன்று  எடுக்கப்பட்ட சில படங்கள்

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
27.9.2022.  













1 comment: