To search this blog

Sunday, August 11, 2019

Thiruvellarai thirumanjanam 2019


                                  திருவெள்ளறை  ஒரு சிறப்பான  திவ்யதேசம்.   திருப்புண்டரீகாக்ஷ  பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.  இக்கோயில், வெண்பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதிவெள்ளறை என்றும் அறியப்படுகிறது.  கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான மதில்கள் உடைய கோட்டை போன்ற பெரிய கோவில்.  பிரகாரம் சுத்தமாகவும் மணம் கமழும் பூக்களை உடைய நந்தவனத்துடன் மிளிர்கிறது.  கோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை கோபுரம் உள்ளது.  கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல மற்றொரு கோபுரம், திருக்குளம், பலிபீடம் த்வஜஸ்தம்பம் ஆகியன உள்ளன.  இந்த பலி பீடத்திற்கு கூட விசேஷ திருமஞ்சனம் நடைபெறுமாம்.

இந்த திவ்ய தேசத்தில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளனவாம். பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனை காப்பிட அழைக்கும் பாசுரத்தில் "சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,  அந்தியம் போதிதுவாகும்  அழகனே! காப்பிட வாராய்" என  பத்து பாடல்கள்  மங்களாசாசனம்  செய்துள்ளார்.   திருமங்கை ஆழ்வார்  இத்திருத்தலத்தை பற்றி பத்து பாசுரங்கள் சிறப்பித்துள்ளார்.

திருவல்லிக்கேணி திருமஞ்சன குடம் - ஸ்ரீ கோபி சுவாமிதிருமஞ்சனக்குடத்துடன் வீதி உலா - திவ்யதேசங்களிலும் ஏனைய வைணவ திருத்தலங்களிலும் வாசம் செய்வோர்க்கு இது ஒரு தினசரி நிகழ்வு.  முன்பெல்லாம் திருவல்லிக்கேணியில் அதிகாலை திருமஞ்சனகுடம் செல்லும்.  கைரவிணி திருக்குளத்தில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் எம்பெருமானின் திருமஞ்சனத்திற்க்காக எடுத்துச் செல்லப்படும்.  எனது சிறிய வயதில், இக்கூட்டம் ஆழ்வான் யானை மீது எடுத்துச் செல்லப்படுவதை கண்ணுற்று இருக்கிறேன்.  முக்கிய நாட்களில் வேத பராயணத்துடன், திருக்கோவில் மரியாதைகளுடன், திருமஞ்சன குடம் திருவீதி வலம் வரும். 

திருமஞ்சனம் ஸ்ரீவைணவ திருத்தலங்களிலே  எம்பெருமானது திருமேனிக்கு திருநீராட்டு சிறப்பாக நடைபெறும் வைபவம். நம் பெரியாழ்வார் தம் பெரியாழ்வார் திருமொழியிலே -  திருவாய்ப்படியில் வளர்ந்த கண்ணபிரான் தனது பால்யத்தில், செய்யுட் லீலைகள் எல்லாவற்றையும்  புகழ்ந்து, திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற, உத்தமபுருஷனே! - வந்து திருமஞ்சனம் கண்டு அருள வேணும் என விழைகிறார்.
திருக்கச்சி தேவாதிராஜர் திருமஞ்சன வைபவம்

இதோ முகநூலில் நண்பர் புகல் மச்சேந்திரனின் பதிவில் இருந்து சில விஷயமும், படங்களும்.  : திருவெள்ளரை புண்டரிகாட்ச பெருமாள் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வடதிருக் காவேரியிலிருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் கொண்டு செல்லபட்டது. இந்த ஆண்டு திருவெள்ளரை கோவில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைப்பெற்றது..இதில் விசேஷம் -  திருமஞ்சனத்திற்கான நீர் ஸ்ரீரங்கம் வடதிருகாவிரியிலிருந்து எடுத்து செல்லப்பட்டதே !  ~  ஸ்ரீரங்கத்திலிருந்து திருவெள்ளரை கிட்டதட்ட 22 கி.மீ தூரம்.   ஸ்ரீரங்கம் கோவிலிருந்து 16 வெள்ளி குடம் 3 பெரிய தாமிர குடம் என மொத்தம் 26 நபர்கள் கால்நடையாக காவிரி நீரை சுமந்து கொண்டு திருவெள்ளரையை சென்றடைந்தனர். குடம் நாம் நினைப்பது போல பிளாஸ்டிக் குடம் மாதிரி லேசான குடமும் அல்ல..நல்ல அழுத்தமான குடம் அதில் நீருடன் - எடுத்துச்செல்வது மிக கடினமான செயல்.  

புத்தம் புதிய தார் ரோட்டில் 22 கி.மீ சாலை வழியாக காலில் செருப்பில்லாமல் காலை 7 மணியளவில் கொள்ளிடத்தில் புறப்பட்டு 9.20 க்கு திருவெள்ளறையை அடைந்தனர். கைங்கர்யபரர்கள்  எங்கும் ஓய்வு எடுக்காமல் ஒரே நடையாக கோவிலை சென்றடைந்தனர்..
ஆண்டாண்டு காலமாக தொடரந்து நடந்து வரும் மிக பெரிய கைங்கர்யம்  இது.  சலிப்பில்லாமல் உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் மனதில் அரங்கனை சுமந்து கொண்டு தோளில் திருக்குடங்களுடன் இந்த சேவையில் ஈடுபட்டு வரும் கைங்கர்யபரர்களுக்கு எங்களின் பணிவான  நமஸ்காரங்கள்.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
செய்தி/ படங்கள்:  நன்றி புகல்  மச்சேந்திரன்.
11.8.2019

No comments:

Post a Comment