To search this blog

Sunday, March 7, 2021

Sri Azhagiya Singar Churnabisheka purappadu 2021 : கருமுகைப் பூச்சூட்ட வாராய்.

இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅழகியசிங்கர் சிறப்பு ப்ரஹ்மோத்சவத்திலே ஆறாம் நாள் - காலை சூர்ணாபிஷேகம் முடிந்து, பெருமாள் மிக அழகான மணம் மிக்க மாலைகளுடன் தங்க சப்பரத்திலே புறப்பட்டு கண்டருளினார்.  எம்பெருமான் அத்தாணியுள்  அமர்பவன்.   அத்தாணி என்பது -  சிறப்பான ஆசனம்; அரியணை, அரியாசனம். முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன்றுண்டு.

திருக்குறள் : 1274 - கற்பியல் 

திரு மு.வரதராசனார் உரை :  அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற ஸ்ரீமன் நாரணன் மட்டுமே உபாதாந காரணம்;  திருப்பாற்கடலில் சயனித்து இருக்கும்  பரமபுருஷன் மட்டுமே நம்மை காக்கவல்லன்.  திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் . ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம்.    இன்று காலை (7.3.2021)  அருள்மிகு ஸ்ரீ அழகிய சிங்கர் அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார். இன்று தெள்ளியசிங்கபெருமாள் மிக அழகிய மாலைகளோடு சேவை சாதித்தார்.  இதோ இங்கே எம்பெருமானின் மிக அழகிய  பின்சேவை .  மற்றைய மலர்களுடன் – கருமுகைப்பூ  [மஞ்சள் வர்ணத்தில் உள்ள புஷ்பம்], மனோரஞ்சிதம், விருட்சி என மலர்கள் மம் வீசி பொலிவுற்றன.


பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு பலர் நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -  செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  

முகை என்ற பெயர்ச்சொல்லுக்கு : மொட்டு, அரும்பு என பொருள்.  மலர்களின் பருவநிலையை பைந்தமிழில் : அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை

முகை - நனை முத்தாகும் நிலை

மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)

முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்

போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

மலர் - மலரும் பூ

பூ - பூத்த மலர்

வீ - உதிரும் பூ

பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்

செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என விளக்குகின்றனர் [விக்கிப்பீடியாவில் இருந்து]

 

இதோ இங்கே நம் பெரியாழ்வாரின் ஒரு அற்புத பாசுரம் :

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணி  உள்ளங்கிருந்தாய்

தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய் தூமலராள்  மண வாளா

உண்டிட்டு உலகினை யேழும்   ஓராலிலையில் துயில்கொண்டாய்

கண்டு  நான் உன்னையுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.

 

மிக உயர்ந்த பரமபதத்திலே  தேவர்கள் சூழ்ந்திருக்க மிக சிறந்த அரியாசனத்தில் வீற்றிருப்பவனே! உந்தம் அடியார்களுடைய ஹ்ருதயத்தில் அதைவிட சிறப்பாக வசிப்பவனே!; பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாகவுடைய பிராட்டிக்கு கொழுநனே!   ஏழு உலகங்களையும் உண்டுவிட்டு  ஓர் ஆல் இலையில் யோக நித்திரை கொண்டவனே!  நான் நீ பூச்சூடி வரும் அழகை ரசித்து  மகிழும்படி 'கருமுகைப்பூ' சூட்டவாராய் என பலக்கண்ணனை பரிவன்புடன் அழைக்கின்றார் நம் பெரியாழ்வார்.

கருமுகை என்பது அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒருவகை  மல்லிகை. காட்டு சம்பகம் அல்லது கருமுகை  என்பது இந்த வகையான மலரை குறிக்கும். இம்மலரை வைத்துக் கொண்டு எந்த நறுமணத்தை மனதில் நினைத்தாலும் அந்த நறுமணம் வீசும்.  மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல், இலைகளைப் போலவே பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மனோரஞ்சித மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றன. இம்மலர்க்கொடியில் பச்சைப் பாம்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅழகியசிங்கர் சூடியுள்ள பல மலர்களையும் முக்கியமாக மஞ்சள் வண்ணத்தில் திகழும் கருமுகை பூக்களாலான மாலையும் கண்டு களியுங்கோள். 

இன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
ஒரு ஞாயிறு மாலையில் [7.3.2021] 1 comment:

  1. மிகவும் சிறப்பான புகைப்படங்கள்!மலர்கள் பற்றிய விளக்கமும் இலக்கண குறிப்பும் சுவாரசியமாக உள்ளது

    ReplyDelete