To search this blog

Tuesday, June 12, 2012

Cholasingapuram Sreeman U. Ve. Kovil Kandadai Chandamarutham Periyappangar Swami Sathabisheka Mahothsava Malar Release function at Thiruvallikkeni


ஸ்ரீமான் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக விழா  மற்றும் நினைவு மலர் வெளியீடு - திருவல்லிக்கேணி 

10/06/2012 -  சிஷ்யர்களுக்கு உகந்த நாள். திருவல்லிக்கேணி வானமாமலை மடத்துக்கு ஸ்ரீமான் உ.வே.  கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி எழுந்து அருளி, மறைந்த ஸ்ரீமான் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக விழா கோஷ்டியை சிறப்புற நடைபெறச் செய்து மடத்து சிஷ்யர்களுக்கு நல்லாசி வழங்கினார். திருப்பல்லாண்டு, திருப்பாவை, கோவில் திருவாய்மொழி, இராமானுஜ நூற்றந்தாதி, உபதேசரத்தினமாலை சேவிக்கப் பெற்று, ஸ்ரீமான் கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமியின் சதாபிஷேக மகோத்சவமலர் வெளியீடும் சிறப்புற நடந்தது.

சோளசிம்ஹபுரம் என்று பெருமை பெற்ற, 'திருக்கடிகை' என ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 'இன்றைய சோளிங்கரில்' வாசம் செய்யும் நமது ஆச்சார்யர்கள் மிகப் பெருமை பெற்றவர்கள்.  திருக்கடிகையில் பல நூற்றாண்டுகளாக 'கந்தாடையார்' என புகழ் பெற்ற வாதூல குலத்தவர்கள் அக்காரக்கனி எம்பெருமானுக்கு தொண்டு புரிந்து வந்தனர். இவர்கள் நம் ஆசார்யன் மணவாளமாமுநிகளால் நியமிக்கப் பட்டவர்கள்.  முதலியாண்டான் பரம்பரையின் ஒரு வழித் தோன்றல் 'ஸ்ரீ சுவாமி தொட்டாச்சார் '.  நம் தொட்டையாசார்யர் சுவாமி ஒரு சமயம் தேவப்பெருமாளின் கருட உத்சவத்திற்கு சென்று சேவிக்க முடியாத சமயம்,  சோழசிம்ஹபுரத்தில் பிரம்ம தீர்த்தக்கரையினில் நீராடி தேவப்பெருமாளை த்யானித்து ஐந்து ஸ்லோகங்கள் சாதித்தார். பெருமாள் திருக்கச்சியில் இருந்து கருட வாஹனத்தில் சோழசிங்கபுரம் எழுந்து அருளி, தொட்டையாசார்யருக்கு சேவை சாதித்த வைபவம் இன்றும் காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளின் பிரம்மோத்சவத்தில்  கொண்டாடப்பட்டு வருகிறது. 

சண்ட மாருதம் என்றால்  'புயல் காற்றிலும் அணையாத விளக்கு' என்று பொருள்.  இந்த உயர்ந்த பரம்பரையில் தோன்றியவர் நமது ஆச்சார்யன் கோவில் கந்தாடை  சண்டமாருதம் பெரியப்பங்கார் சுவாமி. தமது நியம நிஷ்டைகள், ஆத்ம ஞானம், உபன்யாசங்கள், சௌலப்ய குணநலன்கள் மூலமாக உதாரண புருஷராக திகழ்ந்த நம் ஆச்சார்ய சுவாமிகள், 25.08.2007 அன்று திருநாடு எழுந்து அருளினார்.  நம் சுவாமியின் சதாபிஷேக விழா  மற்றும் நினைவு மலர் வெளியீடு - திருவல்லிக்கேணி  வானமாமலை மடத்தில் 10.06.2012 அன்று சிறப்புற நடைபெற்றது. 

 ஸ்ரீமான் உ வே  கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி மற்றும் கோவில் கந்தாடை முதலியாண்டான் சுவாமி முன்னிலையில் - வழக்குரைர் திரு T.S.  ராமஸ்வாமி ஐயங்கார் வெளியிட,  தொண்ணுறு வயதை தாண்டிய மூதறிஞர் முனைவர் வி.வி. ராமானுஜம் சுவாமி மலரின் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டு உரை ஆற்றினார்.  வர்த்தமான சுவாமி - ஸ்ரீமான் உ வே  கோவில் கந்தாடை சண்டமாருதம் சிங்காரச்சார் சுவாமி, சிஷ்யர்கள் அனைவருக்கும் அருள் பாலித்தார்.

ஸ்ரீமந் ந்ருசிம்ஹ வரதேசிக பெளத்ர ரத்னம்*
ஸ்ரீனிவாச சூரிபத பங்கஜ ராஜஹம்சம்*
ஸ்ரீமத் வாதூல குலவாரிதி பூர்ண சந்த்ரம்*
ஸ்ரீமந் ந்ருசிம்ஹ குருவர்யம் அஹம் ப்ரபத்யே *

- ஸ்ரீ ராமானுஜன் திருவடிகளே சரணம் - நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.  [Srinivasan Sampathkumar]




No comments:

Post a Comment