To search this blog

Monday, October 4, 2010

Thirumayilai Peyazhwaar Thiruvallikkeni Parthar Mangalasasanam - பேயாழ்வார் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் மங்களாசாசனம்

பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார். நம் ஆச்சார்யன் மணவாள மாமுனிகள் தம்முடைய "உபதேச ரத்தினமாலை"யில் : மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து * நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * - பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு * நின்றது உலகத்தே நிகழ்ந்து. என சிறப்பித்தார்.



ஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் அதிசயமான செவ்வல்லிப் மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார் இவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. இதில் வரும் திருவல்லிக்கேணி பாசுரம் சிறப்பானது.


வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.

திருவல்லிக்கேணியில் பஞ்ச பர்வ புறப்பாடுகளிலும் மற்றும் பல புறப்பாடுகளிலும் பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதியே சேவிக்கபடுகிறது. இவ்வாறு திருவல்லிக்கேணி எம்பெருமானை பாடிய ஆழ்வார் இந்நாளிலும் பெருமானை கண்டு பாடி மகிழ, மயிலை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள பேயாழ்வார் திருவல்லிக்கேணி எழுந்து அருள்கிறார். திருமயிலையில் இருந்து பல்லக்கில் எழுந்து அருளும் பேயாழ்வார், அல்லிக்கேணி மாட வீதியில் புறப்பாடு கண்டு - திருக்கோவில் உள்ளே கேடயத்தில் எழுந்து அருளி, ஸ்ரீ பார்த்தரையும் மற்றைய எம்பெருமான்களையும் மங்களாசாசனம் செய்து, பார்த்தசாரதி பெருமாளுடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளி, திருமயிலை திரும்புகிறார்.

இந்த மங்களாசாசன வைபவம் அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் கோவில் நிர்வாகிகள் (முக்கியமாக திரு NC ஸ்ரீதர்) மூலமாக ஏற்பாடு பண்ணப்பட்டு வருடா வருடம் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டு இன்று (04/10/2010) இந்த பேயாழ்வார் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளை மங்களாசாசனம் செய்யும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆழ்வாரையும் பெருமாளையும் சேவித்து இன்புற்றனனர்.
மங்களாசாசன புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே : 

ஸ்ரீ பேயாழ்வார் 

திவ்யப்ரபந்த கோஷ்டி - ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் 


ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி 

குதிரைகள் 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment