To search this blog

Sunday, May 2, 2010

நம்பிள்ளை சன்னதி புனர் உத்தாரணம் - திருவல்லிக்கேணியில் சிறப்பு விழா

திராவிட வேத சாகரமாய் பெருமை பெற்றது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. இதற்கு உரைகள் உள்ளன. எம்பெருமானார் காலம் வரை வாய்மொழி ஆக மட்டுமே இருந்து வந்த இவ் உரைகளை உடையவர் ஏடு படுத்தினார். திருக்குருகை பிள்ளானது உரை "ஆறாயிரப்படி". நஞ்ஜீயரது உரை ஒன்பதினாயிரப்படி. நஞ்ஜீயரது சீடர் வரதாச்சர்யர். இவரது திறமைகளை மெச்சி நஞ்ஜீயர் இவரை நம்பிள்ளை என சிலாகித்தார். இவர் உலகாரியன் எனவும் பெயர் பெற்றார். நம்பிள்ளையின் முக்கிய சீடர்கள் பெரியவாச்சான்பிள்ளை மற்றும் வடக்குதிருவீதிபிள்ளை; நம்பிள்ளையின் வார்த்தைகளை கொண்டு இருபத்து நாலாயிரப்படி மற்றும் முப்பத்து ஆறாயிரப்படி என ஏட்டில் இட்டனர். நம்பிள்ளையின் வார்த்தைகளை கொண்ட வடக்குதிருவீதிபிள்ளை உரையான முப்பத்து ஆறாயிரப்படி, திருவாய்மொழிக்கு ஈடாக உள்ளதால் ஈடு என சிறப்பு பெற்றது.

மாமுனிகள் தமது உபதேச இரத்தின மாலையில் "தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்கு திருவீதிபிள்ளை இந்த நாடறிய மாறன் மறைப்பொருளை நன்கு உரைத்தது ஈடு முப்பத்து ஆறாயிரம்" என பாராட்டுகிறார்.

இவ்வளவு சீரியரான நம்பிள்ளைக்கு திருவல்லிக்கேணி பேயாழ்வார் தெருவில் ஒரு சன்னதி உள்ளது. கோமுட்டி பங்களா என அழைக்கப்படும் இடம் வாசலில் இந்த சன்னதி அமைந்து உள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் யோகி பார்த்தசாரதி ஐயங்கார் சுவாமி மற்றும் அவரது தேவியார் யோகி சிங்கம்மா பற்பல வித்வான்களை எல்லாம் சேர்த்து கிரந்த  காலக்ஷேபங்கள் நடத்தியோடல்லாமல் ஸ்ரீ பாஷ்யம், பகவத் விஷயம் முதலிய கிரந்தங்களை அச்சிட்டு ரக்ஷித்தார்.  

இவர்கள்  "சரஸ்வதி பண்டாரம்" எனும் கிரந்த சாலையை அமைத்து பல பண்டிதர்களை கொண்டு கிரந்தங்களை வெளியிட்டாராம். "சரஸ்வதி பண்டாரம்"  என்பதற்கு நூல்களின் பொக்கிஷம் என்று பொருள்.  இவரால் அமைக்கப்பட்டது தான் இந்த "சரஸ்வதி பண்டார கமிட்டி". இதற்கு தகுந்த ஆச்சர்யாரான நம்பிள்ளைக்கு ஒரு சன்னதி அமைத்தாராம்.  வருடந்தோறும் நம்பிள்ளைக்கு உத்சவங்கள் சிறப்ப நடை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்துவித்தார். 

இது தவிர ஸ்ரீமதி சிங்கம்மா ஸ்ரீ ராமர் அவதரித்த அயோத்தியிலே தமிழ்நாட்டு கோவில் பாணியில் திருகோவிலை கட்டி பெரிய அளவில் ஏற்படுத்தினார்.   இன்றும் அததிருக்கோவில்  அம்மாஜி மந்திர் என பிரசித்தியாக உள்ளது. 

இந்த நம்பிள்ளை சன்னதியை அழகாக சீர்படுத்தி சமீபத்தில் சம்ப்ரோக்ஷன வைபவம் நடைபெற்றது.    சன்னதியில் நம்பிள்ளையும் நம்பெருமாளும் எழுந்து அருளியிருக்கும் விசேஷம் இதோ 

மிக அழகான நம்பெருமாள்

ஆச்சர்யர் நம்பிள்ளை 

திவ்ய பிரபந்த கோஷ்டி 


இவ் வைபவத்தை சிறப்பாக நடத்திய எங்கள் ஆசான் 
ஸ்ரீமான்  எம்  எ  வேங்கட கிருஷ்ணன் சுவாமிகள்


அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 

1 comment:

  1. சம்ப்ரோக்ஷன வைபவம் நடந்தது எப்எபோது / எந்த வருடம் ?

    ReplyDelete