To search this blog

Sunday, January 15, 2023

Sing only in praise of Emperuman !! - மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்

இன்று 15.1.2023  பொங்கல் நன்னாள் - இது போன்ற பண்டிகை விடுமுறை தினங்களில் தொலைக்காட்சிகளில் பட்டி மன்றம் / கவிதை மன்றம் நடக்கும்.  பலர் வார்த்தை தோரணங்களாலும் தலைவர்களை வரம்பின்றி புகழ்வதன் மூலமும் - கை தட்டலும் பரிசும் பெற முயலுவர் !!  கவிபாடினார்க்கு ஸகல சிறப்புகளையும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் எனும்படியான சாதாரண மனிதர்களை புகழ்வதில் என்ன பயன் என்று யோசிப்பார் உண்டோ !!

 


சங்க காலத்தில் மற்றும் பண்டைய களங்களில் ஏதோ புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து படி, முத்தும், குதிரைகளையும், பரிசுகளையும் பெற்றதை போல ஒரு எண்ணம் சில பத்திரிகைகளும் சினிமாக்களும் செய்து விட்டன !!  உண்மை அப்படி இல்லை !! மரபுக்கவிதை சிறப்பானது - இலக்கண பிழையில்லாமல் கவிதை எழுதுதல் கடினம்.  புதுக்கவிதை மரபு சார்ந்தது அல்ல.  சமயங்களில் - ஒரு வரியை இரண்டு தடவை வேறு தொனியில் படித்தால் கை தட்டல் விழும் !!  . வரிவடிவம், ஒலிவடிவம் என்னும் இருவகைகளிலும் இவை வேறுபடும்.  சங்க காலத் தமிழ் மன்னர்கள் வெறும் புகழ்ச்சிக்கு மயங்கி கிடந்தவர்கள் அல்லர்.  . அரசர்கள் அறம் என்னும் நேர்வழியில் இருந்து தவறிவிடாமல் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. புலவர்கள் இனிய கவிதை நயம் பொருந்திய சொற்களால் கருத்துகளை உணர்த்தியுள்ளனர்.  

சங்க நூல்களில் ஒன்றான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பதிற்றுப்பத்து.  இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. தற்போது உள்ள எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. இவற்றை வரலாற்று நூல்களாகவும் கொள்ளலாம். சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.  

தமிழ் இலக்கணம் தொல்காப்பியத்தில் சிறப்பாக குறைக்கப்பட்டுள்ளது :  ‘எழுத்து’ ‘சொல்’ ‘பொருள்’ என்று மூன்று நிலையில் இலக்கணத்தை விவரிக்கின்றார் தொல்காப்பியர்.  உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் இப்படி; இவற்றின் தன்மை, கால அளவு, உச்சரிப்பு, எது எது எந்தெந்த கூட்டணியில் வரும், எப்படிப் புணரும் இதைப் பற்றியெல்லாம் அலசுவது ‘எழுத்திலக்கணம்’. எழுத்துக்கள் சேர்ந்து ‘சொல்’ ஆகும். சொற்களின் வகை (பெயர், வினை, இடை, உரி – நான்கு!) அவற்றின் உருவாக்கம், பண்பு, பயன்பாடு கூறுவது ’சொல்லிலக்கணம்’.  சொற்கள் சேர்ந்து பாடலாகவோ, வாக்கியமாகவோ ‘பொருள்’ தரும். - இது ‘பொருளிலக்கணம்’.  

கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார்.  இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் :  

1.       இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது

2.       திரிசொல் - படித்தவர்க்கே புரிவது

3.       திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்

4.       வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்

 




பக்தி இலக்கியம் மிக சிறப்பானது - அதிலும் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்த பாசுரங்கள் பக்தியை சிறந்த இலக்கணத்தில் ஆழ்த்தி வழங்கப்பட்டன.  கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியானவர்களை கவிபாடுவதில் என்ன பயனுண்டு என கேட்கும் ஸ்வாமி  நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் இங்கே :  

என்னாவது  எத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்? ,

மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,

தன்னாகவே  கொண்டு சன்மம்  செய்யாமையும் கொள்ளுமே.  

நல்ல வார்த்தைகளை கோர்வையாக அமைத்து கவிதைகள் இயற்றும்  பண்டிதர்களே! - சொற்ப காலமே நிலையற்று இந்த புவியில்  வாழும்  மனிதர்களை புகழ்ந்து  கவிபாடி - அவ்வார்த்தைகளால் நீங்கள் அடைகின்ற  செல்வம் எவ்வளவு நாட்கள் தங்கும் ?   அது உங்களுக்கு போதுமானது அல்ல !!  மணிமகுடத்தை உடையவனான  விண்ணவர் வணங்கும் தேவாதி தேவன் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை  கவி படி வணங்கினால், அவ்வெம்பெருமான்  உங்களை  தனக்கு அடிமையாகவே கொண்டு இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன்!  அதை விட சிறந்த செல்வம் நினைப்பதற்கும் உள்ளதோ !!  

Happy Pongal Festival  2023 wishes to all  - and some photos from Swami Nammazhwar sarrumurai at Thiruvallikkeni – Azhwar Sri Parthasarathi Perumal purappadu on 12.6.2022.  

~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.1.2023 














1 comment:

  1. Very nice 🙏🙏🙏🙏🙏🙏. தமிழ் இலக்கண விவரம் மிகவும் சிறப்பு

    ReplyDelete