மனத்தாலும் வாயாலும் சிந்தையாலும் சொல்ல சொல்ல நன்மை பயக்கும் நாமம் 'இராம நாமம்' - மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம் - மாதா பிதா குருவை மதித்த மன்னவன் நாமம். கம்ப ராமாயணம் இப்படி துவங்குகின்றது.
உலகம்
யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை
பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகிலா
விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"
உடையவர் எம்பெருமானாரைப் 108 பாடல்களால் பாடிய திருவரங்கத்தமுதனார் - தமது இராமானுச நூற்றந்தாதியில் - ‘படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் - குடிகொண்ட கோயில் இராமானுசன்’ என்று பாடினார். உலகம் முழுவதையும் தன் புகழால் அகப்படுத்திக் கொண்டது எனவும் பக்தி வெள்ளம் எனவும் இராமாயணத்தை திருவரங்கத்தமுதனார் சிறப்பிக்கிறார். இந்தப் புகழின்உலக மகா காப்பியங்களுள் தலை சிறந்து விளங்கும் கம்பநாடனுடைய இராமகாதை ஆறு காண்டங்களாக வகுக்கப் பெற்றுள்ளது. இராமாயணம் என்பது முதல்நூலால் வந்த காரணப் பெயர். இராமன் என்ற சொல்லுக்கு எல்லார்க்கும் மனக்களிப்பு அளிப்பவன் என்பது பொருள். இராம சரிதத்துக்கு இடமாயுள்ள நூல் - இராமாயணம். “ராமனை அடைவதற்கு அல்லது அறிதற்குக் கருவியாயுள்ள நூல்”; ‘ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது” என்னும் ஸ்ரீவசநபூஷண வாக்ய பலத்தால். பிராட்டியின் வைபவத்தை உணர்த்தும் நூல் என்றும் கூறலாம்.
உலகங்கள்
யாவையும் உருவாக்கி, காத்து, அழித்தலுமான விளையாட்டைச் செய்கின்ற தலைவன் ஒருவனே. இவை அனைத்தும் அவன் ஒருவன் செயல்களே என்று
தெளிவாகக் குறிப்பிடுகிறான் கம்பன். இவற்றை
மிகவும் எளிதாகச் செய்வதைச் சொல்லும்படியாக அவை அந்தத் தலைவனுக்கு இது வெறும் விளையாட்டே
என்றும் சொல்கிறான். தொடர்ந்து செய்யப்படுவதால் இதை முடிவே இல்லாத அளவிட முடியாத அலகிலா
விளையாட்டு என்றும் சொல்கிறான். அதி முக்கியமாக
- அந்த தலைவனுக்கு வணங்குகிறோம், வாழ்த்துகிறோம் என்றெல்லாம் சொல்லாமல், சரண் அடைகிறேன் என்று அடிபணிகின்றான் கம்பன்
- ராமாயணத்தில் தொடர்ந்து சொல்லப்படும் சிறப்பு தத்துவம் - சரணாகதித் தத்துவம். மங்கலச்
சொல்லொடு தொடங்கவேண்டும் என்பது
மரபு; அம்மரபின்படி ‘உலகம்’ என்ற மங்கலச்
சொல் கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில் முதலாக
எழுகிறது.
இராமாயண நாயகனின் திருவவதார மஹோத்சவம் ஸ்ரீராமநவமி. திருவல்லிக்கேணியில் ஐந்தாம் உத்சவத்தில் [2.4.2025] - ஸ்ரீராமபிரான் நாச்சியார் திருக்கோலத்தில், காருண்யம் மிகுந்த சீதா பிராட்டியாக சேவை சாதித்தார். அவர் கீழ் அண்ட ப்ரம்மாண்டங்களும், திருக்கோவில் கோபுரங்களும் அனைத்தும் அடக்கம். தாய் சீதையின் சிறப்பு கம்ப நாட்டாழ்வாரின் வரிகளில் :
மொய்
வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த. முந்நாள்
மெய்
வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல். அனையது
ஏய்ப்ப.
வையக
மடந்தைமார்க்கும். நாகர் கோதையர்க்கும்.
வானத்
தெய்வ மங்கையர்க்கும். எல்லாம் திலகத்தைத் திலகம் செய்தார்.
தாமரையில் குவளை பூத்தது போன்றன.
பிராட்டியின் முகத்தே விளங்கும் கண்கள்;
தாமரையின் உதித்த மூன்றாம் பிறை போன்றது
அவள் முகத்தே தோன்றும்
நெற்றி. மூன்றாம் நாள் திங்களிடையே உதித்த விண்மீன் ஒன்று போன்றது அவள் நெற்றியில் இட்ட திலகம்.
திலம் போலச் சிறந்து விளங்கும் பிராட்டியின்
(நெற்றியில் தோழிமார்) திலகமிட்டு அழகு செய்தனர்.
எம்பெருமான் ஸ்ரீராமனின் தாள் பணிந்து
அவனிடம் சரண் அடைந்து உய்வோமாக !!
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
3.4.2025