Today 1st Jan 2022, heralds the birth of a New year. Love it or hate it, many people feel compelled to count in the New Year at midnight, whether celebrating at a party or freezing outside watching fireworks. To Srivaishnavaites, this day is significant for it is ‘Kettai thirunakshathiram’ in the month of Margazhi marking the sarrumurai celebrations of Thondaradipodi Azhwar. This year there is no purappadu at Thiruvallikkeni .. .. had the fortune of darshan of Sri Thondaradippodi Azhwar and sthalapathi Sri Peyalwar – and thirumanjanam of Sri Madhava Perumal at Sri Madhavaperumal thirukovil @ Thirumylai.
1.1.2022 - மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம். சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த தினம்
நாம் போற்றி வணங்கி வழிபடும் எம்பெருமான் எத்தகையவன் ! - மிக சிறந்தவன், அனைவரையும் ரக்ஷிப்பவன். நாம் நினைத்த மாத்திரத்திலே 'சங்கோடும் சக்கரத்தோடும் நாயகனாக நமக்கு காட்சி அளிப்பவன்". ஸ்ரீமன் நாரணனின் திருக்கரங்களிலே பெரியாழ்வார் கண்டது - தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரம் - அதீத பிரகாசமானது எப்பொழுதும் சிவந்ததாகவே காணப்படும். செஞ்சுடராழி என்று இயம்பும்பொழுது அந்த செந்நிறத்தில் தக தக வென கடல் போல் ஜொலிக்கிறாராம் பெருமாள். எம்பெருமானுடைய பல திருநாமங்களிலே ஒன்று : நேமியங்கையன்.
நேமி தூய சங்க இலக்கிய தமிழ்ச்சொல். நேமி என்ற பெயர்ச்சொல்லுக்கு : வட்டம், தேரின் சக்கரம்; தேருருளை; சக்கராயுதம்; பூமி; கடல்; மோதிரம்; சக்கரவாகம் எனும் பறவை என பல சாதாரண அர்த்தங்களும், - சக்கராயுதனாகிய திருமால் என்ற அற்புத அர்த்தமும் உண்டு.
ஆதி சங்கரர் தமது பகவத்கீதை விளக்கவுரை முன்னுரையில், “பிரபஞ்சம் முழுதும் ‘அவ்யக்தம்’ எனும் மூலப்பிரக்ருதியாகிய மாயைக்குள் வசப்பட்டிருக்க, பரமனாகிய நாராயணன் அம்மாயைக்கு அப்பாற்பட்டவன்” என்று முழங்குகிறார். ஆதி கர்த்தாவாகிய ‘நாராயணன்’ என்ற பெயரை உடைய விஷ்ணுவானவன், சனாதன தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க தேவகி அம்மையாருக்கும், வசுதேவருக்கும் ‘கிருஷ்ணன்’ என்ற பெயரை உடைய மகனாக அவதரித்தான். ஞானம், ஐஸ்வர்யம், பலம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகியவற்றை எப்பொழுதும் தன்னிடம் இயல்பாகப் பெற்றுள்ள இறைவன், பிறப்பு-இறப்பு இல்லாதவனாக, உயிர்களை எல்லாம் ஆளும் தன்மை உடையவனாக, நித்ய-சுத்த-புத்த-முக்தனாக எப்பொழுதும் விளங்கியிருப்பினும், தன்னுடைய ஒப்பற்ற ஆற்றலினால் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு, (ஜீவர்களைப் போல) பிறப்பதாக நமக்குக் காட்சியளித்து, உயிர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் புரிகிறான்.
வேதாந்த விழுப்பொருளான பரமனே புவியில் கண்ணனாக அவதரித்தான். கேசவனே, மாயோனே ! புருஷோத்தமனே! துன்பம் நீங்கப் பிறந்த தூயவனே! எல்லா உயிர்களையும் ஒன்றெனக் கருதிக் கருணை காட்டுபவனே! மாயலீலா விநோதனே! கடைக்கண் காட்டி கவலை வினைகளைப் போக்க வேண்டும்!” என்று அவனை பாசுரங்கள் பாடி துதிக்கின்றோம். “கண்களுக்குப் பார்க்கும் ஆற்றல் எதனிடமிருந்து பிறக்கிறதோ, செவிகளுக்குக் கேட்கும் திறமை எதனால் கிடைக்கிறதோ, மூக்கின் முகரும் சக்தி எதை மூலமாகக் கொண்டுள்ளதோ, நாவிற்கு சுவைக்கும் தன்மை எதனால் நிலைபெறுகிறதோ, தோல் எதனால் தொடு உணர்வைத் தெரிந்துக்கொள்ள முடிகிறதோ, அந்த பொருளே பரம்பொருள். அத்தகைய புரிதற்கரிய பரம்பொருளை நீ மேற்கூறிய ஐம்புலன்களாலும் (ஞானேந்திரியங்களாலும்) அறியமுடியாது” என்று உபநிடதங்களில் சுருதி வாக்கியங்களாக அறுதியிட்டனர் முன்னோர்.
எம்பெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்டு, மயர்வற மதிநலம் அருள்பெற்றத்தினால், அவர்மீது பாசுரங்கள் பாடினர் ஆழ்வார்கள். சிறு வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டுத் திளைத்த பொய்கையாழ்வார், இளமையில் கற்க வேண்டிய நூல்களை திருவரங்கப் பெருமானின் கருணையால் குற்றம் நீக்கிக் கற்றுணர்ந்தார். அதன் காரணத்தால், இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது திருமாலின் தொண்டே எனத் தெளிந்தார். இதோ அவரது முதல் திருவந்தாதியில் இருந்து ஓர் அற்புத பாசுரம்.:
கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
ஐய! மலர்மகள் நின் ஆகத்தாள்;
செய்ய
மறையான் நின் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை (28)
திருவேங்கடமுடையானே! மேகம் போல் நிறமும், இயல்பும் வாய்ந்தவனே! வலும்புரி சங்கும், சக்கிரமும் உன் கைகளில் விளங்குகின்றன. மலர் மகளோ நின் மார்பில் இருக்கிறாள். இவை யாவும் உன் ஐஸ்வர்யத்தையும் அழகையும் காட்டுகின்றன. உம்மை அறிவிக்கும் வேதத்தை ஓதும் பிரும்மனோ உன் கொப்பூழில் பிறந்தான். சிவபெருமானோ உன் திருமேனியில் ஒரு மூலையில் இருக்கிறான். பிரும்ம ருத்திரர்கள், பெரிய பிராட்டி- எல்லோருக்கும் உன் திருமேனியில் இடம் கொடுத்தாயே உன் சீலத்தை என்ன என்று சொல்வது! என அகமகிழ்கிறார் நம் பொய்கைப்பிரான்.
திருமயிலை எனும் அற்புத க்ஷேத்திரத்திலே - திரு மாதவப்பெருமாள் திருக்கோவிலிலே - மன்னியசீர் மார்கழி கேட்டையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை வைபவத்தில் - ஸ்தலதிபதியான ஸ்ரீ பேயாழ்வாரும், அன்றைய நாயகன் - விப்ர நாராயணனும் எழுந்து அருளி இருக்க - ஸ்ரீமாதவப்பெருமாள் அலங்காரமாக திருமஞ்சனம் கண்டு அருளினார். அந்த அவசரத்தில், ஸ்ரீ மாதவர் தம் திருமேனி அழகை தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டது. திருமஞ்சன புகைப்படங்கள் சில இங்கே.
***தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
தொண்டரடிப்பொடி என்னும் அடியனை
அளியனென்றருளி உன்னடியார்க்கு ஆட்படுத்தாய்
! பள்ளி எழுந்தரு ளாயே!!
~adiyen Srinivasa dhasan.
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
2.1.2022
🙏🙏🙏🙏. Super photos 🙏🙏
ReplyDelete