To search this blog

Friday, October 29, 2010

Navarathri Golu at Sri Parthasarathi Swami Temple : திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் கொலு

புரட்டாசி மாதம்  ஒரு சிறப்பான மாதம்.  புரட்டாசி ஏழுமலையானுக்கு உகந்தது. திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிகிழமை மிக விசேஷம்.  நவராத்திரி அல்லாத சனி நாட்களில் சாயம் ஐந்து மணிக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடுகண்டு அருள்வார்.  
புரட்டாசி மாதம் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 8 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.    நவராத்திரி  ஒன்பது  நாட்களும் ஸ்ரீ  வேதவல்லி தாயாருக்கு உன்னதமான உத்சவம் நடை பெறுகிறது.  எல்லா நாட்களிலும் தாயார் வாகன புறப்பட்டு கண்டு அருள்கிறார்.  
நவராத்திரியின்போது, வீடுகளில் அழகாக பொம்மை கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும்.  இந்த வருடம் ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்  என்ற நிறுவனம் மிக  அழகாக கொலு ஏற்பாடு செய்து இருந்தனர்.  அழகிய சிங்கர் சன்னதி த்வஜஸ்தம்பம் அருகே திருக்குளம் போன்று அமைத்து எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தெரியுமாறு பொம்மைகள் வைக்கபட்டு இருந்தன .   மிகவும் நேர்த்தியாகவும் கலை நயத்துடனும் அழகாகவும் இருந்த பொம்மைகள் பக்தர்கள் அனைவராலும் பாராட்டி பல முறை பார்க்கப்பட்டன. 
சில பொம்மைகள் தங்க முலம் பூச்சுடன் விலை உயர்ந்தன.   கோவில் பொம்மை  கொலுவின் சில புகைப்படங்கள் இங்கே :   Allikkeni Golu
அடியன் சம்பத்குமார். 

Saturday, October 23, 2010

திருவெள்ளறை திவ்ய தேசம் - Sree Vaishnava Divya Desam Thiruvellarai




ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கோவில் என்றாலே மதிள் திருவரங்கம் தான். 

21/10/10 அன்று திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் உள்ள திருவெள்ளறை திவ்யதேசம் சேவிக்கும் பாக்கியம் அமைந்தது. திருப் புண்டரீகாக்ஷ  பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.  இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது.  கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை  கோபுரம் உள்ளது.

கோபுரம் கோவில் உள்ளிருந்து பார்க்கும் போது

கோவில் வாசல் மொட்டை  கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் இன்னொரு அழகான கோபுரம் உள்ளது.




இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல திருக்குளமும்   அதன்  முன்பே  பலிபீடமும்,  த்வஜஸ்தம்பமும் உள்ளன. இத் திருக்கோவிலில் பலி பீடத்துக்குக்கூட விசேஷமாக  திருமஞ்சனம் நடை பெறுமாம்.


நாம் சன்னதியை நோக்கி நின்று சேவிக்கும் போது  இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக  உள்ளது.   தாயார்  பங்கஜவல்லி என்ற திருநாமத்துடன்  தனிக்கோவில் நாச்சியார் அழகாக சேவை சாதிக்கிறார்.    த்வஜஸ்தம்பத்தை சேவித்து உள்ளே  சென்றால் பெருமாளின் அழகான வரைபடம் உள்ளது.   மறுபடி பிரதட்சிணமாக சென்று  'தட்சிணாயனம் உத்திராயணம்' என இரண்டு வாசல்கள் உள்ளதை தர்சிக்கலாம். படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால்,   அழகான நின்ற  திருக்கோலத்தில்   எழுந்து அருளி சேவை சாதிக்கும்  புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன் பெருமாள் சேவை கண் குளிரக்காணலாம்.   

தற்சமயம் தட்சிணாயன காலமானதால்  இந்த வாசல் வழியாக சென்று சேவித்தோம்.  நின்ற திருக்கோலத்தில் நெடிய  பெருமாள் மார்கண்டேய மகரிஷிக்கும் பூமா தேவிக்கும் சேவை அருள,   அருகில் ஆதி சேஷனும்  எழுந்து அருளி உள்ளனர். சுவற்றில் சந்திரனும் சூரியனும் சாமரம் வீசி கைங்கர்யம் செய்கின்றனர்.  பெருமாளுக்கு அருகில் கருட ஆழ்வாரும் ஆதி சேஷனும் நின்ற திருக்கோலத்திலும், மார்கண்டேய மகரிஷியும் பூமாதேவியும் மண்டியிட்டு அமர்ந்தும் பெருமாளை வணங்கிக்கொண்டு உள்ளனர்.   சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி தந்தமையால் பெருமாளுக்கு ச்வேதபுரி நாதன் எனவும் திருநாமம். புண்டரீகாக்ஷ பெருமாள் உத்சவருடன் செங்கமலவல்லி தாயார் உள்ளார்.  பெருமாள் சன்னதி அருகே வலது புறம் எல்லா ஆழ்வார்களும் மறு புறத்தில் ஆச்சார்யர்களும் எழுந்துஅருளி உள்ளனர்.  சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் ஆகியோருக்கு   தனிச்சன்னிதிகள் உள்ளன.

இந்த திவ்ய தேசத்தில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளகாவே அமைந்துள்ளனவாம். பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனை காப்பிட அழைக்கும் பாசுரத்தில் " சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,  அந்தியம் போதிதுவாகும்  அழகனே! காப்பிட வாராய்" என மங்களா சாசனம்  செய்துள்ளார்.    திருமங்கை ஆழ்வார்  இத்திருத்தலத்தை பற்றி பத்து பாசுரங்கள் சிறப்பித்துள்ளார். ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி மாமழுவேந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ ! ..................  தென்றல் மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே !  பத்தாவது  பாடலில்   " மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை அதன் மேய ...............  எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே "  என மங்களாசாசனம் பண்ணி உள்ளார்.
கோவில் மதிள்   
ஸ்ரீ மணவாளமாமுனிகள் சன்னதி 
இத்திருத்தலத்தில், உய்யக்கொண்டார், எங்களாழ்வான் ஆகிய இரண்டு  ஆச்சார்யர்கள் திருஅவதாரம் செய்துள்ளனர். உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர்.  இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886.  இவர்களது பரம்பரையினர் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்து  வருகின்றனர்.  ஆள்  மறைந்தால்தான்   வேதாந்தமே   புரியும்  என உலகுக்கு உரைத்த   பிள்ளை  எங்களாழ்வான் இங்கே அவதரித்தார். ஸ்ரீராமானுஜரின்      மருமகனார்    நடாதூராழ்வான்.  அவருடைய    பேரர்   நடாதூரம்மாள்.    அவர்  பிள்ளை  எங்களாழ்வான்    திருமாளிகையைக்  கண்டறிந்து   விஷய  ஞானம் கற்றார் என பெரியோர் வாக்கு.  எங்களாழ்வான் வம்சாவழி சுவாமி கோவில் அருளப்பாடு கண்டு மாலை மரியாதையுடன் எழுந்து அருளும் காட்சி இங்கே ::.  



அடியேன் ஸ்ரீனிவாச தாசன்


Sunday, October 17, 2010

Significance of Navrathri and Vijayadasami Paarvettai purappadu at Thiruvallikkeni

"பார் எல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி,
அவர் பார்த்தனுக்கு தேர் ஓட்டும் சாரதி,
எங்கள் சாரதி; பார்த்தசாரதி ; எங்கள் சாரதி !! ; பார்த்த சாரதி" ……

என ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளை புகழ்ந்து பாராட்டி, திருவல்லிக்கேணி திருக்கோவிலில் நடக்கும் வருடாந்தர உத்சவங்கள் எல்லாவற்றையும் பற்றிய பாடல் மிக பிரபலமானது. மறைந்த திரு கே வீரமணி அவர்கள் கணீர் குரலில் பாடிய அந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உத்சாகமும் தைரியமும் தரவல்லது.

அதில் புரட்டாசி மாத உத்சவங்கள் பற்றி சில வரிகள் இங்கே :
" வன்னி மர பார்வேட்டை கண்டு அருள வலம் வரவே !
மன்னவனும் எழுந்து அருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்;
அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு
அலங்காரம் ஒன்பது நாள் - நவராத்திரி நன்னாள் ".


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பது நாளும் ஸ்ரீ வேதவல்லிதாயார் இரவு 7 மணி அளவில் புறப்பாடு கண்டு அருள்கிறார். கோவில் த்வஜஸ்தம்பம் சுற்றி வேதவல்லி தாயார் – கமல வாகனம், கிளி வாகனம், சேஷ வாகனம், யாளி வாகனம், வெள்ளி சிம்ஹ வாகனம், குதிரை வாகனம், அம்ச வாகனம், யானை வாகனம் என பல வாகனங்களில் புறப்பாடு கண்டு அருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சரஸ்வதி பூஜை அன்று தாயார் புறப்பாடு முடிந்தவுடன், கோவிலில் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு மங்களகரமாக வழங்கப் படுகிறது. இந்த வருடம் ஸ்ரீ வேதாந்தா சார்யர் சாற்றுமுறை (புரட்டாசி திருவோணம்) 16/10/10 அன்று வந்தமையால் வேதாந்தாசார்யார் ஸ்ரீமன்னாதனுடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.


நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகாநவமி என்று தொழில்களையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று கல்வியை போற்றும் வெற்றித் திருநாளாகவும் தொன்மைக்காலம் தொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜயதசமி அன்று ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பார்வேட்டை புறப்பாடு கண்டு அருள்கிறார். பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்துஅருளி வன்னி மரத்தில் அம்பு எய்யும் வைபவம் நடக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை பெருமாள் வேங்கடரங்கம் தெருவில் உள்ள வசந்த பங்களாவிற்கு புறப்பாடு கண்டு அங்கே பார்வேட்டை நடக்கும். பிறகு பெருமாள் பெசன்ட் ரோடு வழியாக சாத்தானி தெரு எனப்படும் துளசிங்க பெருமாள் கோவில் தெரு பக்கம் வழியாக பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருள்வார். இப்போது இந்த பங்களா இல்லாதபடியால் பார்வேட்டை வைபவம் கோவில் வாசலிலேயே நடக்கிறது. புறப்பாட்டில் தாடி பஞ்சகம் மற்றும் ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னம் சேவிக்கபடுகிறது.


திருவல்லிகேணியில் இன்று 17/10/2010 நடந்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :







மகாபாரதத்தில் விராட பர்வம் முக்கியமானது. இது பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த ஓராண்டு நிகழ்வுகளை கூறும் பர்வம். இந்த கால கட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும்போது, தங்கள் போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கின்றது. வன்னி மரம் புனிதமாக கருதப்படுகிறது. மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்ததாக ஏட்டில் உள்ளது.

மலை நாட்டு திவ்யதேசமான "திருவாறன் விளை" எனும் புண்ணிய தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாக கூறுவர். இங்கு அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக கூறப்படும் வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள் என படித்திருக்கிறேன்.

************************************************************************************
""ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது. ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்."" ( நவராத்திரி பற்றி பாரதியார் உரை)


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

Monday, October 4, 2010

Thirumayilai Peyazhwaar Thiruvallikkeni Parthar Mangalasasanam - பேயாழ்வார் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் மங்களாசாசனம்

பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார். நம் ஆச்சார்யன் மணவாள மாமுனிகள் தம்முடைய "உபதேச ரத்தினமாலை"யில் : மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து * நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * - பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு * நின்றது உலகத்தே நிகழ்ந்து. என சிறப்பித்தார்.



ஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் அதிசயமான செவ்வல்லிப் மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார் இவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. இதில் வரும் திருவல்லிக்கேணி பாசுரம் சிறப்பானது.


வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.

திருவல்லிக்கேணியில் பஞ்ச பர்வ புறப்பாடுகளிலும் மற்றும் பல புறப்பாடுகளிலும் பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதியே சேவிக்கபடுகிறது. இவ்வாறு திருவல்லிக்கேணி எம்பெருமானை பாடிய ஆழ்வார் இந்நாளிலும் பெருமானை கண்டு பாடி மகிழ, மயிலை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள பேயாழ்வார் திருவல்லிக்கேணி எழுந்து அருள்கிறார். திருமயிலையில் இருந்து பல்லக்கில் எழுந்து அருளும் பேயாழ்வார், அல்லிக்கேணி மாட வீதியில் புறப்பாடு கண்டு - திருக்கோவில் உள்ளே கேடயத்தில் எழுந்து அருளி, ஸ்ரீ பார்த்தரையும் மற்றைய எம்பெருமான்களையும் மங்களாசாசனம் செய்து, பார்த்தசாரதி பெருமாளுடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளி, திருமயிலை திரும்புகிறார்.

இந்த மங்களாசாசன வைபவம் அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் கோவில் நிர்வாகிகள் (முக்கியமாக திரு NC ஸ்ரீதர்) மூலமாக ஏற்பாடு பண்ணப்பட்டு வருடா வருடம் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டு இன்று (04/10/2010) இந்த பேயாழ்வார் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளை மங்களாசாசனம் செய்யும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆழ்வாரையும் பெருமாளையும் சேவித்து இன்புற்றனனர்.
மங்களாசாசன புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே : 

ஸ்ரீ பேயாழ்வார் 

திவ்யப்ரபந்த கோஷ்டி - ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் 


ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி 

குதிரைகள் 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்