ஆறாம் நாள் காலை ஸ்ரீ அழகிய சிங்கர் புண்ணிய கோடி விமான சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார். திருவல்லிகேணியில் காஞ்சிபுரத்தை போல ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம் நடை பெறுகிறது. பிரம்மோத்சவம் ஆகம முறைப்படி நடக்கிறது.
சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்துஅருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.
திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றபடுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. . திருவீதி புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம் அனுசந்திக்க படுகிறது. விருத்தப் பா எனும் பா வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. சூர்ணபிஷேக புறப்பாட்டு புகை படங்கள் இங்கே :
ஏழாம் நாள் காலை திருத்தேர். ஞாயிறு ஆனதால் தேர் வடம் பிடிக்க ஏரளமானோர் வந்திருந்தனர்.
திருமங்கை மன்னனின் அவதார மகிமையாக விளங்கும் நிகழ்ச்சியில் பெருமாளும் பெரிய பிராட்டியாரும் திருமேனி முழுவதும் நகைகளுடன் வரும் போது ஆடல்மாவில் வேகமாக வந்த ஆலி நாடன் வாள் கொண்டு அவர்களை மிரட்டி நகைளை பறிக்க முயற்சித்து, . பெருமாள் கால் விரலில் உள்ள மெட்டி மட்டும் கழட்ட இயலாது தவிக்கும் போது ஆலி நாடரை கலியனாக பெருமாள் ஆட்கொள்கிறார். கலியன் "ஓம் நமோ நாராயணா" என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்க பெற்று தனது "திருமொழி" பாசுரங்களை "வாடினேன் வாடி வருந்தினேன்" என தொடங்குகிறார்.
ஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடை பெறுகிறது. எப்போதும் போல நேற்று பெருமாள் பரிவட்டத்துடன் ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார். அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர். இந்த புராணத்தில், எம்பெருமான், பிராட்டியார் மற்றும் அவருடன் வந்த கொத்து பரிசனங்களும் மங்கை மன்னனிடம் தங்கள் தங்க நகைகளை இழந்தனர். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்பட்டது. அந்த ஊரின் தலையாரி தலைவன், பெருமாளை வணங்கி, குற்றம் புரிந்த ஆலி நாடனை துரத்தி சென்று பிடித்து, தண்டனை வழங்குவதாக தல புராணத்தில் உள்ளது.
மறு நாள் (ஒன்பதாம் உத்சவ காலை) பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, அதே இடத்தில நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்" என கொண்டாடப்படுகிறது. போர்வையுடன் ஏளிய அழகிய சிங்கரின் படங்கள் இங்கே : -
அடியேன் - சம்பத் குமார்