இப்போது மனித சமுதாயத்தின்
வெற்றி கொடிய கொரோனா நோயை அழிப்பதே ! ~ அதற்கு அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். கோவிட்-19
பெருந்தொற்று என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ்
2 (SARS‑ CoV‑ 2) என்ற தீநுண்மி காரணமாக
ஏற்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது
அலை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 28,897 பேருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளை இன்று அதிகாலை
4 மணி முதல் வருகிற 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி பொது
மக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து சனி, ஞாயிறுக்கிழமைகளில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ் நிலையங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய குவிந்தனர். மக்கள் பல அல்லலுக்கு உள்ளாயினர்.
இன்று உலகமே கோவிட் 19 எதிர்த்து போராடுகிறது. மனித குலத்துக்கு வெற்றி கிடைக்கும் நாளே சமுதாயத்தின் நிம்மதியான நன்னாள். 'வெற்றி வாகை'சூடினார் என்று கேள்விப்பட்டதுண்டா ? இதில் வெற்றி என்பது எடுத்த காரியத்தில் வெல்லும் நிலை பெறுதலையும், சூடுதல் என்பது தரித்தலையையும் குறிக்க - வாகை என்பது யாது ? - வாகை என்பது ஒரு வகை மரம். இதன் பூ வாகைப்பூ ! நமது பண்பாட்டின் அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. பக்தி இலக்கியம், கடவுளுக்கு சமர்ப்பித்தல், பெண்கள் அணிதல் என மலர்கள் சிறப்பிடம் பெறுகின்றன. மலர்கள் அணிந்தோரை அழகு படுத்தவல்லன !
தமிழகத்தை ஆண்ட அரசர்களில் - சேர சோழ
பாண்டிய மன்னர்கள் - மூவேந்தர்கள் என போற்றப்பட்டனர். மூவேந்தர்களின் அடையாளப் பூக்களான போந்தை (பனம்
பூ), வேம்பு (வேப்பம்பூ), ஆர் (ஆத்திப்பூ) ஆகியன பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில்
காணப்படுகின்றன. இவற்றைச் சூடியிருத்தல் அரசமரபு. போருக்குச் செல்லுங்கால் தத்தம் அரச
மரபு அடையாளப் பூவோடு, மேற்கொள்கிற வெட்சி முதலான போர் வினைகளுக்குரிய பூவினையும் மாலையாகச்
சூடிப் போருக்குச் செல்வர். வெற்றியைக் கொண்டாடும்
நிகழ்வு எனினும் வாகை மாலை சூடுதல் மரபில் உண்டு.
ஸ்ரீவைஷ்ணவனாகிய நாம் எதை சூட வேண்டும் ?
நாம் எதை சூடுவது உகந்தது
என்பதற்கு பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதி
பாசுரம் இங்கே :
நாடிலும் நின்னடியே
நாடுவன், நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன், சூடிலும்
பொன்னாழி யேந்தினான்
பொன்னடியே சூடுவேற்கு,
என்னாகில் என்னே எனக்கு?
எம்பெருமானிடத்திலே அபரிமிதமான பக்தி கொண்ட பொய்கைப்பிரான் அருள்கிறார் - என்மனத்தால் தேடும் போது ஸ்ரீமன் நாராயணன் உனது திருவடிகளையே தேடுவேன்; எப்போது வாய்விட்டு ஏதாவது சொல்லும்போது, உனது புகழ்களையே உந்தன் சிறப்புகளையே பாடுவேன்; ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும் - அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய அழகிய திருவடிகளையே எனது சிரத்தின் மேல் அழகு சேர்ப்பதாக கொள்பவனான எனக்கு வேறு யாது நிகழ்வுகளும் எப்படியானாலென்ன? இது எம்பெருமானிடம் பக்தி பூண்டு, அவனையே நினைத்து, அவன் சிறப்புகளையே பாடிடும் பக்தன் தனது மனப்போக்கு.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனது திருவடி தாமரைகளைப்பற்றி அவனிடத்திலே சரண் புகுந்து, எல்லாவிடர்களும் கெடுமாறு அருளாயே என பிரார்த்திப்போம். மக்கள் அனைவரும் நலமுற, கொடிய நோய்கள் முற்றிலும் அகல வேண்டுவோம்.
Here are some photos of Sri Parthasarathi perumal thirumanjanam at Thavana Uthsava bungalow on day 1 of Thavana Uthsavam on 21.3.2021.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.05.2021.
No comments:
Post a Comment