To search this blog

Sunday, July 17, 2022

Kavadi.. .. kavadi Sinthu !! : பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடி

நேற்று ஸ்ரீ அழகிய சிங்கர் உத்சவத்தில் சப்தாவரணம் - பெருமழை பொழிந்ததனால் பெருமாள் திருத்தேரில் புறப்பாடு கண்டருளவில்லை - அற்புத அலங்காரப்பூதனாக தோளுக்கினியானில் புறப்பாடு கண்டருளி, இராமானுச நூற்றந்தாதி வாசல் மண்டபத்திலே சேவிக்கப்பெற்றது  -அவ்வமயம் திரளான மக்கள் அங்கே குழுமி இருந்தனர்.  இந்த மயில் இறகுகள் பதித்த பொருளை கண்டு இருப்பீர்கள் .. .. அவை பற்றிய பதிவே இது !!  

1992ல் - ராஜீவ்,  ரேகா நடிக்க டி. ராஜேந்தர் இயக்கி தயாரித்த எங்க வீட்டு வேலன் வெளிவந்து  100 நாளைக் கடந்து ஓடியது.  அதற்கென்ன !?!?  

நமது தமிழ் கலாச்சாரமே இசையோடு சேர்ந்தே இருப்பது.   ஆடிப்பாடி வேலைசெய்தால் அலுப்பிருக்காது என வேலை செய்யும்போதும் - உழும்போதும், வண்டி ஓட்டும்போதும், குழந்தைகளை தூங்க பண்ணும் போதும்  பாடினார்கள். செல்போன் இல்லாக் காலம் எனவே மக்களை கவனிக்க, நேரம் இருந்தது.   ஏற்றமிறைக்க ஏற்றப்பாட்டும் வண்டியோட்ட வண்டி  பாட்டும் பாடினர்,  ஆலோலம் பாடி தினைப்புனம் காத்தார்கள்.   கோலாட்டம் கும்மிப் பாட்டுகளும் பாடி, மகிழ்ந்தனர்.  

பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே !!

பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்

பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்

முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே ...

தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே

தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்

பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம் !!

 

சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்

சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம் 

என்ற - பங்களூர்  ரமணியம்மாள் பாடிய பாடல்  மிக மிக பிரபலம்.   இதில் குறிப்பிடப்படும் காவடியைத்தான் படத்தில் காண்கிறீர்கள். காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடையது.    ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு.  தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது.  இதனுடன் சம்பந்தப்பட்ட பண்  -  காவடிச் சிந்து  




காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று.  சிந்து என்பது   ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. சிந்து - எடுப்பு (பல்லவி) - 1;  தொடுப்பு (அநுபல்லவி) - 1;  உறுப்பு (சரணம்) – 3- என்று 5 உறுப்புகளைக் கொண்டது ‘.  சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த - காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். அண்ணாமலை ரெட்டியார்  எழுதிய காவடிச் சிந்து பிரசித்தி பெற்ற நூல்.  அதில் இருந்து சில வரிகள் :

 

காலவடி, வேல், நெடிய, வாள், கொடிய நாகம் உமிழ்

காரி, பிணை, வாரி, கணை, பானலே - அன்ன

கூர்நயன வேடமின்னார் ஏனலே - காக்கும்

காலைமேலெறி போதுவார்கவணோடு மாமணி தேசுவீசவே

கதிரவன் தனதுமுகம் சுழிக்குமே;- அவன்

குதிரையும் கண்ணைச் சுருக்கி விழிக்குமே.

சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார், திருநெல்வேலி சங்கர நயினார் கோவிலை அடுத்த சென்னிகுளம் என்னும் ஊரில் 1865 ஆம் ஆண்டு பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார். இவர் நோய் காரணமாக 1891ல், தம் 26ஆம் வயதில் காலமானார். காவடிச் சிந்தை பிரபலப்படுத்தினார். 




2வது பத்தியில் குறிப்பிடப்பட்ட 'எங்க வீட்டு வேளாண்' படத்தில் வேலனாக நடித்தது குழந்தை நடிகர் சிலம்பரசன் (சிம்பு) -  KS  சித்ராவின் குரலில் ஒலித்த 'பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி'  பெரிய அளவில் பேசப்பட்டது.  

முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட அந்த பக்தர்கள் - சேலம், திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்து, இங்கிருந்து, காவடி எடுத்து, நடை பயணமாக, திருத்தணி சென்று முருகனை தரிசிக்க வந்து இருந்தவர்கள். 




பக்திக்கும் பக்தி இலக்கணக்கத்துக்கும் தலை வணங்குகிறேன் !!

 
-திருவல்லிக்கேணி வாழ் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
17.7.2022 

1 comment:

  1. பக்திக்கும் பக்தி இலக்கணக்கத்துக்கும் தலை வணங்குவோம்!!!

    ReplyDelete