அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
திருவல்லிக்கேணியில் வாழ்ந்த மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் அற்புத வரிகள். இதோ இங்கே திருவல்லிக்கேணியில் சொக்கப்பனை - மரம் எறிவது போல வல்வினைகள், கெடுதல்கள் எல்லாம் எரிந்து சாம்பலாக, நல்லவை நடக்க ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை பிரார்த்திக்கின்றேன்.
பெரிய பனைஓலைகளான சொக்கப்பனை - சிறு நெருப்பு பொறி. பாரதியார் பாடிய காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டதுபோல மரமும் எரிகிறது ! வீழ்கிறது !! நெருப்பு சுடும் ! எரிக்கும் ! சாம்பலாக்கும் என்பது பாரதியாரின் மனக்கருத்தை பிரதிபலிக்காது !! சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என பழந்தமிழ் இலக்கியங்கள் யாவற்றுக்குமே ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை; பின்வந்த பலர் தங்கள் கருத்துகளையும் அவர்கள் அந்த பாடலையும் ஆசிரியரையும் புரிதலின் மொழிந்தனவே உரைகள். நமக்கு தெரிந்த சிறப்பான உரை "கோனார் தமிழ் உரை!". அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றும் கூறுவார்.
பிற நாட்டினரின் ஆதிக்கத்தால்,
நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில்
ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் விடுதலை எனும்
தீப்பொறியை ஏற்றி, அதன் தாக்கத்தால் அனைவரது
மனங்களிலும் படர்ந்திருந்த அடிமைத்தனம் நீக்கி சுதந்திர உணர்வை தூண்டியது இந்த பாடல். விடுதலை வேட்கைதான் பொறி !
அடிமைத்தளைதான் எரிந்து வீழ்ந்தது !!
திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோபுர வாசலை தாண்டி புறப்பாடு கண்டருளி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டு - பக்த கோடிகள் எம்பெருமானை கோவிந்தா ! கோவிந்தா என கோஷமிட்டு சேவித்து குளிர்ந்தனர்.
அடியேன் தாசன் - திருவல்லிக்கேணி வாழ் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
19.11.2021
Very nice
ReplyDelete