To search this blog

Saturday, April 22, 2023

Udayavar Pallakku mugappu 2023

இது என்னவென்று தெரியுமா !!   ரொம்ப யோசிக்க வேண்டாம் - பல்லக்கின் முகப்பில் இருக்கும் தங்க முலாம்  பூசிய பூண் எனும் அமைப்பு.  இது ஒரு முகப்பு -  முகப்பு என்றால், தலைப்பு ; முற்பகுதி ; முன்னிலை ; வீட்டுமுன் கூரைக் கட்டடம் ; அணிகலப் பொருத்து வாய் ; மகளிரின் சீலை முன்றானை என பல பொருள் உண்டு.  பூண் - அரசன், போர் வீரர்கள்,  மார்பில் கவசம்போல் அணியும் அணிகலன். உலக்கைப் பூண் என்பது உலக்கை மரத்துக்கு இரும்பால் போடப்பட்டுள்ள கவசம்.  



மார்பில் அணியும் கவசம் பூண் என்பதை “கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம் தேவர்கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார்பினவே”  இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்   பாடல்.  மலை ஆரம் என்பது மலையில் விளைந்த பொருள்களையும்; கடல் ஆரம் என்பது கடலில் விளைந்த பொருள்களையும் குறிக்கும். மலைவிளை பொருள்களான மான், மயில், தேன், தினை, வள்ளிக்கிழங்கு, மா, பலா முதலிய பல; இவை அனைத்தையும் பெயர் சூட்டாமல் மலை ஆரம் என்பது தன்னுள் அடக்கியிருக்கிறது. அதுபோலவே, கடல்விளை பொருள்களான முத்து, சிப்பி, பாசி, சங்கு முதலியவற்றையும் பெயர் சூட்டாமல் கடல் ஆரம் தன்னுள் அடக்கியிருக்கிறது.  இவை இரண்டுக்கும் அடைமொழிகளாக "கோவா' என்ற சொல்லும், "கோத்த' என்ற சொல்லும் பெற்றிருக்கின்றன. மலை ஆரம் அனைத்தும் கோக்க முடியாதவை எனவும், கடல் ஆரம் அனைத்தும் கோக்கக்கூடியவை எனவும் பொருள்படும் வண்ணம் இளங்கோவடிகள் ஆய்ந்து கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்.  மேலும் பசும்பூண், பொலம்பூண், நறும்பூண் பெரும்பூண் போன்ற தொடர்கள் மன்னனுக்கு அடைமொழியாய் அமைந்து குறிப்பிட்ட மன்னனை உணர்த்துகின்றன. இந்த மன்னர்களோடு தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகள் எந்த மன்னனைச் சாரும் என்பதைக் கண்டறிய இந்தத் தொடர்கள் உதவுகின்றன.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டவுடன், அயோத்தி நகரத்து மாந்தர் அனைவரும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் பெற்று உண்டவர்கள்போல் பெருமகிழ்ச்சி கொண்டனர்.   எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அமர்ந்திருந்த அழகை கம்பநாட்டாழ்வார் இவ்வாறு விவரிக்கின்றார் :

மாணிக்கப் பலகை தைத்து,  வயிரத்தின்  கால்கள் சேர்த்தி,

ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,

ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின்மீது

பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ.

அரசர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியான  ஸ்ரீராமபிரானுக்கு :  - மாணிக்கத்தால்  செய்த பலகை பொருத்தப் பெற்று அதிலே வைரத்தால்  வலிய  கால்கள்  செய்தமைத்து;  உயர்ந்த பொன்னால் சுற்றும் பூர்த்தி செய்யப் பட்டு எழிலாக உருவாக்கிய பீடத்தை   பெருமை சான்ற பளிங்கு மாடத்தில் அமைத்தனர்;    மிக அழகாக அமைந்த அப்பீடத்தின்  மேல்  அற்புதமான    அணிகலன்கள்  அணிந்த  திரண்ட  தோள்களை  உடைய வீரனாகிய  இராமபிரான்   சீதாப்பிராட்டியோடும் அழகுற வீற்றிருந்தான்.   


இங்கே உள்ள புகைப்படங்கள் - திருவல்லிக்கேணி  திவ்யதேசத்தில்  ஸ்ரீ ராமானுஜர் உத்சவத்தில், உடையவர் பல்லக்கு புறப்பாடு - முதலில் கண்டது பல்லக்கின் பின்புற வளைந்த தடியில் உள்ள சிங்க உரு முகப்பு பூண்.

 
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.4.2o23 

No comments:

Post a Comment