இன்று தமிழ் புத்தாண்டு. பல வருடங்களாக சித்திரை முதல் நாள் வருட பிறப்பாக கொண்டாடபடுகிறது. இது கதிரவன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கிலநாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.
வருஷ பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு சிறந்த நாள் ஆகும். புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி வாங்கி சந்தோஷத்துடன் இருக்கும் நாள். இன்று வடை திருக்கண்ண்முதுடன் விருந்து உண்பர். வேப்பம் பூ பச்சடி தவறாமல் இடம் பெறும். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கசப்பு, இனிப்பு கலந்துள்ள இந்த வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை வேப்பம் பூ பச்சடி வெளிப்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.
ஆண்டு பிறப்பு : விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில், நவாம்சத்தில், சிம்ம லக்னம், கும்ப ராசியில், புதன் ஹோரையில், வைதி ருதி நாமயோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்சபட்சியில், மயில் துயில் கொள்ளும் நேரத்தில், புதன் தசை, ராகு புத்தியில் பிறந்தது. தமிழ் ஆண்டுகள் அறுபது ஆனதால் விக்ருதி ஆண்டு 1950ஆண்டு வந்தது. இதை பற்றி இன்றைய தினமணி நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன். அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி : தினமணி நாளிதழ்
ஆறுபது ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டுப்போன விக்ருதி இன்று புத்தாண்டுக் கோலமணிந்து மீண்டும் வருகை தருகிறது. இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட நிலையில் அன்றைய விக்ருதியில் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தால் சுவையாகவும் சிறிது வியப்பாகவும் கூட இருக்கலாம்.
1950 ஏப்ரலில் விக்ருதி ஆண்டு வந்தபோது இந்தியக் குடியரசு பிறந்து பதினோரு வாரங்களே ஆகி இருந்தன. குடியரசுடன் நமது தேசப்படமே மாறிவிட்டிருந்தது. மத்தியபாரதம், விந்தியப்பிரதேசம், செüராஷ்டிரம், ராஜஸ்தானம் என்று பல புதிய ராஜ்யங்கள் (அப்போது மாநிலம் என்ற வார்த்தை இல்லை) உதயமாகி இருந்தன.
ஆனால் சென்னை மாகாணத்தில், பெயரைத் தவிர, மாற்றம் ஏதுமில்லை. அதாவது மாகாணம் (பிராவின்ஸ்) இப்போது ராஜ்யம் என்றும் அதன் பிரதமர் (பிரிமியர்) குமாரசாமிராஜா இப்போது முதல்மந்திரி என்றும் அழைக்கப்பட்டதும்தான் மாற்றம்.
சென்னையின் பிரதம காரியதரிசி (முதன்மைச் செயலாளர்) மட்டுமல்லாது ஜில்லா கலெக்டர்கள் (மாவட்டம் வர இன்னும் இருபதாண்டுகள் இருந்தன) கூட ஐ.சி.எஸ். அதிகாரிகள்தான். ஐ.ஏ.எஸ். என்ற குழந்தைக்கு இரண்டு வயதுகூட நிறையாத பருவம். போலீஸ் இலாகாவின் தலைவர் ஐ.பி. (ஐ.பி.எஸ். அல்ல) என்ற ஆங்கிலேயர் கால சர்வீûஸச் சேர்ந்தவர். டி.ஜி.பி. என்று ஓர் உத்தியோகமே அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. ஐ.ஜி. அந்தஸ்தில் கூட ஒரே ஒருவர்தான் இருக்க முடியும்.
மத்திய அரசாங்கத்தில் கூட அன்று போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்தான் தபால்-தந்தி இலாகாவுக்கு மாகாணத் தலைவர். (சி.பி.எம்.ஜி. என்று எவரும் இருக்கவில்லை). ஜெனரல் என்றாலே அப்படித்தான் அர்த்தமாம். முப்பதாண்டுகளுக்குப் பின்னால் எப்படியோ இதெல்லாம் மாறிப்போயிற்று.
ஹைவேஸ் இலாகா கப்பிக்கல்லுக்குப் பதில் தார்ரோடுகள் போட ஆரம்பித்தது இந்த ஆண்டில்தான். அன்று பள்ளிப்படிப்பு பதினோரு ஆண்டுகள். அதன்பின் கல்லூரி (இந்த வார்த்தை அப்போதுதான் வந்திருந்தது. கலாசாலை என்ற பெயர்தான் அதிகம் வழங்கியது). அதாவது இரண்டு ஆண்டு இண்டர்மீடியட், அதற்குப்பிறகு பி.ஏ. அல்லது பி.எஸ்ஸி. என்ற இரண்டாண்டுப் பட்டப்படிப்பு. ஆனர்ஸ் என்ற மூன்றாண்டுப் பட்டப்படிப்பு, எம்.ஏ.க்குச் சமமானது. நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் அதில் இடம் கிடைக்கும்.
பண்டித ஜவாஹர்லால் நேருதான் பிரதம மந்திரி. அயல்நாட்டு விவகாரம் அவரிடமும், உப பிரதம மந்திரி சர்தார் பட்டேலின் பொறுப்பில் உள்நாட்டு விவகாரமும் இருந்தன.
இந்தியா என்ற வண்டியை ஓட்ட இவ்விருவரையும் ஜோடிக்குதிரைகள் போல மகாத்மா காந்தி ஏற்படுத்தியிருந்தார். விக்ருதி ஆண்டில் நிகழ்ந்த பேரிழப்பு பட்டேலின் மரணம். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கொண்டாடப்பட்டவர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைத்து தேசத்தின் ஐக்கியத்தைச் சாதித்தவர், இந்தியாவின் பிஸ்மார்க் என்று அவருடைய அரிய சாதனையை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். சர்வதேச அரசியல் திடீரெனச் சூடு பிடிக்கலாயிற்று. சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கும் (ஜனாதிபதி ட்ரூமன்) சோவியத் ரஷியாவுக்கும் (சர்வாதிகாரி ஸ்டாலின்) நடைபெற்றுவந்த பனிப்போர் திடீரென்று கிழக்காசியாவில் கொரியா என்ற குட்டி தீபகற்பத்தில் நிஜமான யுத்தமாக வெடித்தது விக்ருதி ஆண்டில்தான்.
சொல்லப்போனால் இரு உலக வல்லரசுகளுக்குமிடையே நடந்த பலப்பரீட்சை, சில மாதங்களுக்கு முன்னர்தான் சீனாவில் தேசியவாதிகளுக்கும் (சியாங்-கை-ஷேக் என்ற பெயர் ஞாபகமிருக்கிறதா) கம்யூனிஸ்டுகளுக்கும் ஆண்டுக்கணக்காக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிந்திருந்தது. மாபெரும் வெற்றிபெற்ற மாவோ, சீனாவின் முடிசூடா மன்னராகி இருந்தார். அவரும் ஸ்டாலினும் கைகோர்த்து நிற்க இப்போது வட ஆசியா முழுதும் கம்யூனிஸ்டு கோட்டையாய் இருந்தது. கொரிய தீபகற்பத்திலும் வடபகுதியில் கம்யூனிஸ்டு ஆட்சி.
சின்னஞ்சிறு தென் கொரியா மட்டும் இன்னும் வெளியே, அதுவும் அமெரிக்க செல்வாக்கில், இருந்தது மாஸ்கோ-பீக்கிங் (இன்றைய உச்சரிப்பு பெய்ஜிங்) கூட்டின் கண்ணை உறுத்தியது. விளைவு, அவர்களின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டிருந்த வட கொரியா, தென் கொரியா மீது திடுமெனப் படையெடுத்து வெகுவேகமாக முன்னேறியது. உடனே அமெரிக்கா ஐ.நா.சபைக்குச் செல்ல, அதன் தீர்மானத்தின்படி ஒரு சர்வதேசப் படை (90 அமெரிக்கப்படை) கொரியாவில் வந்திறங்கி வட கொரியாவுக்குள்ளேயே முன்னேற சீனா நேரடியாகவே சண்டையில் குதித்தது.
யுத்தப்பிரகடனம் ஏதுமில்லாமல் நடந்த இந்த யுத்தம் அடுத்த மூன்று ஆண்டுகள் நீடித்து யாருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்ததென்பது பின்னாள் கதை.
அந்த யுத்தத்தால் அளவுகடந்த சேதத்தை அனுபவித்த தென் கொரியா அந்தக் காரணத்தாலேயே பின்னால் வரலாறு காணாத செல்வமும் செழிப்பும் அடைந்தது என்பது ஒரு சரித்திர முரண்.
எப்படி நடந்ததென்றால், அதன் புனர்நிர்மாணத்துக்காக அப்போது குபேர நாடாக இருந்த அமெரிக்கா, பணத்தைக் கொண்டுபோய்க் கொட்டியது. யானை விழுந்தால் எழுந்து நிற்பது கஷ்டம், பூனைக்கு சுலபம் என்பார்கள். தென் கொரியாவோ சின்னஞ்சிறு நாடு. கொரியர்கள் கடின உழைப்பாளிகள், நல்ல வேலைத்திறமை உடையவர்கள். (இதற்கு, அவர்களை அரை நூற்றாண்டு ஆண்ட ஜப்பானியரின் பாதிப்பும் காரணம்).
இந்த நிலையில் அவர்கள் கிடுகிடுவென்று முன்னேறி இன்று உலகச் சந்தையில் ஆகட்டும், உலக சினிமாவில் ஆகட்டும், தங்களுக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமில்லைதான். நேர்மாறாக, அதே மக்களைக் கொண்ட வட கொரியாவைச் சரித்திரம் சதி செய்துவிட்டது.
இன்றைய ஒரே இரும்புத்திரை நாடாக அது அகில உலகத்திலிருந்தும் தனிப்பட்டுப் போய் ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தில் நசுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பின்னால் வெகுவாகப் பாதித்த ஒரு விக்ருதி ஆண்டு நிகழ்வு சீனா கிழக்கு திபெத் மீது படையெடுத்தது.
திபெத்தின் பழையகால ராணுவம் சுலபமாக முறியடிக்கப்பட்டு சுமார் 5000 வீரர்களையும் இழந்தது. சீனர்கள் தலைநகர் லாஸôவை நோக்கி முன்னேறவுமில்லை, தங்கள் ஊருக்குத் திரும்பவுமில்லை. சமாதானமாக சரணடையுமாறு அப்போது இளைஞரான தலாய்லாமாவுக்கு நெருக்கடி கொடுக்கலாயினர்.
நாற்பதாண்டு முந்திய சீன-பிரிட்டிஷ் இந்திய-திபெத் முத்தரப்பு ஒப்பந்தப்படி திபெத்தின் நடுநிலைமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நிலையில் திபெத் தன்னைக் காப்பாற்றுமாறு இந்தியாவை இறைஞ்சியது. இமயமலை நாடான திபெத் முற்றிலும் இந்தியாவாலும் சீனாவாலும் (நேபாளத்தாலும்) சூழப்பட்டிருப்பதால் பாரதத்தையன்றி அவர்களுக்கு வேறு யாரும் உதவ வழியில்லை.
அதேசமயம் பலம் வாய்ந்த சீனாவின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரு தயங்கினார். சுதந்திர திபெத் இந்தியாவுக்கு அவசியமான பாதுகாப்பு அரண், அங்கே சீன ஆதிக்கம் வந்தால் அடுத்தது நமது இமாலய எல்லைக்கே சீனாவிடமிருந்து ஆபத்து வரும் என்று விளக்கி, நேருவுக்கு ஒரு நீண்டகடிதம் அனுப்பினார் சர்தார் பட்டேல். திபெத்துக்கு உதவியே ஆகவேண்டும் என்றார்.
சீனா தன் பங்குக்கு, திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் உத்தேசமில்லை, திபெத்தின் உள் சுதந்திரமும் கலாசாரமும் பத்திரமாயிருக்கும் என்று நமக்கு உறுதியளித்துக் கொண்டிருந்தது. அதற்குள் சர்தார் காலமானார்.
உதவி ஒன்றும் வராத நிலையில் கர ஆண்டின் (1951-52) தொடக்கத்தில் திபெத் சீனாவிடம் சரணடைந்ததும் சில ஆண்டுகளில் சீனர்கள் நமது லடாக்கில் ஊடுருவி அக்சாய்-சின் சாலை போட்டுக் கொண்டதும் அதை நேரு அரசு தட்டிக்கேட்டதைத் தொடர்ந்து சீன-இந்திய யுத்தம் (1962) மூண்டதும் பிற்காலக் கதைகள்.
No comments:
Post a Comment