Tuesday, August 6, 2024

Beautiful Krishna ! ~ கண்ணனென்னும் கருந்தெய்வம்

உங்கள் கண்களை மூடிக்கொண்டு தியானியுங்கோள் !  கண்ணபிரான் எதிர் வர பிரார்த்தனை செய்யுங்கள்.  உங்கள் முன் இப்போது நிற்கும் கிருஷ்ண பரமாத்மா எப்படி இருப்பான் ??



திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் வாழும் நமக்கு கண்ணன் - ஸ்ரீபார்த்தசாரதி  -  வட மதுரையிலும், கோகுலத்தில், விருந்தாவனத்திலும், குருவாயூரிலும், உடுப்பி, துவாரகாபுரியிலும் இன்ன பிற புண்ணிய ஸ்தலங்களிலும் - எங்கும் உளன்.  எங்குமுளன் கண்ணன் !   எனினும் கண்ணனை நம் மனதில், சிந்தையில், என்ன ஓட்டத்தில் - கருமை நிற கண்ணனாக வரித்துள்ளோம் !!  கண்ணன் நீலமேக ஷ்யாமளன்; ஆண்டாள் வார்த்தைகளில், கருந்தெய்வம்; வட இந்திய கோவில்களில் வெள்ளை பளிங்கு நிறத்தனன்.


பேட் துவாரகையில் சேவை தரும் கண்ணன்

நாச்சியார் திருமொழியில் ஆற்றாமை விஞ்சி கோதைப்பிராட்டி - கண்ணன் இருக்கும் இடத்தில் என்னை சேர்த்து விடுங்கள், அவன் தொடர்புடைய இடங்களுக்கு கொண்டு சேருங்கோள்!, , கண்ணனோடு தொடர்புடைய ஏதாவது ஒன்றை - அணிந்த ஆடை, அவன் தரித்திருந்த துளஸி முதலியவற்றைக் கொண்டு வந்து என்னைத் தொடச்செய்து, அதன் மூலமாவது என்னை உயிர் தரிக்கச் செய்யுங்கள்  என்று பிரார்த்திக்கிறாள்.   'தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும் அவனுடன் கூடி மகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன். புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல் அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்த பெருமான் தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?' 

கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை

புண்ணில் புளிப்பெய்தாற்போலப் புற நின்று அழகு பேசாதே

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக

வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே  

கண்ணபிரான் என்றால் - ருக்மணி சத்யபாமா சமேதர்.  திருவல்லிக்கேணியில் மூலவர் ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணர் - வட நாட்டிலே   ராதைதான் முதலில் மனக்கண்முன் தோன்றுவாள். ஆம். கண்ணன் என்றால் ராதை.  

ஒருத்தி மகனாய்  பிறந்து, அன்றிரவே வேறொருத்தியிடம் வளர வந்த கிருஷ்ண பகவான் நந்தகோபர் மாளிகையில் சீரும் சிறப்புமாய் பல இன்னல்களையும் கூடவே சந்தித்து வளர்ந்தார்.  இதோ இங்கே பளபளக்கும் மேனியனாக வேய்ங்குழல் ஊதும் கண்ணபிரான் - தந்தத்தினால் ஆனது.  அதி அற்புதமான நுணுக்கமான சிற்பம் - சுமார் 150 வருஷங்கள் அல்லது அதற்கும் முன்னதாக இருக்க வாய்ப்பு உள்ளது.





Beautiful Krishna made of ivory pictured at Sri MA Narasimhan’s art gallery at Triplicane.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6.8.2024     

No comments:

Post a Comment