Tuesday, November 28, 2023

Thirukkarthigai Deepam festivity 2023 ~ திருக்கார்த்திகை தீப உத்சவம்.

ஐப்பசி   மாதத்திலே நம் ஆசார்யன் சுவாமி மணவாள மாமுனிகள் உத்சவம் இனிதே நடந்து முடிந்தது ~ கூட,  பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் சாற்றுமுறைகளும் இனிதே நடந்தேறின.   பின் வரும் கார்த்திகை மாதம் ஒரு சிறப்பான மாதம்.  திருமங்கை மன்னன், திருப்பாணர் சாற்றுமுறைகள்  மற்றும் திருக்கார்த்திகை தீப உத்சவம். 




ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்து கொள்ள தேவை  பார்வை -   வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது.   வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவது மட்டும் அல்ல.  இருளை, அஞ்ஞானத்தை ஒழிக்கும் அகல் ஒளி.   தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது. 

கார்த்திகை தீப திருநாள்.  தீபமேற்றி இறைவனை வணங்குவதுதான் நம்முடைய ஸம்ப்ரதாயம்.  வீடு முழுக்க, வாசலில் வரிசையாக, வீட்டைச் சுற்றிலும் என தீபங்கள் வரிசைகட்டி ஏற்றிவைத்து, தீபத்தை வணங்கும் அருமையான நன்னாள்தான் திருக்கார்த்திகை தீபத் திருநாள். நம் வீடுகளில் எப்படி ஒளி நிறைந்திருக்கிறதோ... பரந்துவிரிந்த ஆகாயமும் பெளர்ணமி முழு நிலவால் தகதகத்து பிரகாசிக்கிற நன்னாள்  திருக்கார்த்திகை தீப திருநாள். 

நம் வைணவ ஸம்ப்ரதாயத்திற்கு திருவிளக்கு மிக முக்கியமானது. அன்றோர் பெருமழை நாளில் திருக்கோவலூர் இடைகழியில் - முதலாழ்வார்கள் மூவர் சந்தித்த அரும் சமயத்தில், பொய்கைப்பிரான் - "வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக" என   உலகம் அகல், கடல்தான் நெய், சூரியன் ஒளிப்பிழம்பு, என ஒரு  பிரம்மாண்டமான விளக்கை சங்கு சக்கரம் ஏந்திய பெருமானின் பாதத்தில் ஏற்றி, பாசுரங்களால் மாலை அணிவிக்க, தொடர்ந்து பூதத்தாழ்வார்   "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியா" என அன்பை  விளக்காகவும், ஆர்வத்தை  நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதிக்க, அவ்வருள் வெள்ளத்தில் பேயாழ்வார் திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என மங்களாசாசனம் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே !!  

திருக்கார்த்திகை என்றவுடன் பக்தர்களுக்கு நினைவில் வருவது - திருவண்ணாமலை தீபம்.   தீப திருவிழா அன்று திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.   பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம்.   1668 ஆம் ஆண்டு, வேங்கடபதி என்பவர் கொப்பரையை  அளித்துள்ளது பற்றி குறிப்புகள் உள்ளன.   இது காலப்போக்கில் பழுதான பின்னர், தற்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு  1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 92 கிலோ செம்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது. கொப்பரையில் அடிப்பாகம் 27அங்குல விட்டமும் மேற்புறம் 37 அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம் 57 அங்குலம் என ப்ரம்மாண்டமானது   

இதன் தொன்மை:  "அண்ணாமலையார் கோவிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு"  (கி.பி. 1031) கார்த்திகைத் திருநாளில் இறைவன் திருவேட்டைக்கு எழுதருளுவதைப் பற்றிக் கூறுகிறது.  'திருவண்ணாமலை உடையார் திருக்கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளி இருந்தால் பெந்திருவவமிர்தமெய்து செய்தருளவும் அடியார்க்குச் சட்டிச்சோறு பிரசாதஞசெய்தருளவும் குடுத்த பொன் ஏழு கழஞ்சில்' என்று அந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.  1311ஆம் ஆண்டில் ஹொய்சாள மன்னரான வீரவல்லாளனின் கல்வெட்டு பஞ்சபர்வ தீப உற்சவம் பற்றிக் குறிப்பிடுகிறது. திருவண்ணாமலை தீபத்தை  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்   வந்து வழிபடுகின்றனர்.  கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு இன்புற்றனர்.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் 27.11.2023 அன்று கார்த்திகை தீப உத்சவமும் திருமங்கை மன்னன் சாற்றுமுறை புறப்பாடும் சிறப்புற நடந்தேறின.  கோவிலின் வாசலில் பனைஓலைகளாலான சொக்கப்பனை பற்றி ஓர் முறை விரிவாக எழுதி இருந்தேன்.  திருக்கார்த்திகை தினத்தன்று - பெரிய சன்னதியில் தொடங்கப்பெற்று, எல்லா சன்னதிகளிலும்,  கொடிமரத்தின் முன்பும், வெளியே - சுவாமி நம்மாழ்வார் சன்னதி, பேயாழ்வார் சன்னதி, கைரவிணி திருக்குளம், திருக்குள திருவடி சன்னதி என எல்லா இடங்களிலும் - பெரிய அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.   



தீபத்தில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை, நம் திருவல்லிக்கேணி காப்போன் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானை  திருக்கார்த்திகை நன்னாளில் வேண்டும்  நம் அனைவரது நம் குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் ஒளிமயமான வாழ்க்கையைத் தந்தருள்வான்  எம்பிரான்.

 
~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.11.2023 













No comments:

Post a Comment