Saturday, October 23, 2010

திருவெள்ளறை திவ்ய தேசம் - Sree Vaishnava Divya Desam Thiruvellarai




ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கோவில் என்றாலே மதிள் திருவரங்கம் தான். 

21/10/10 அன்று திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் உள்ள திருவெள்ளறை திவ்யதேசம் சேவிக்கும் பாக்கியம் அமைந்தது. திருப் புண்டரீகாக்ஷ  பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.  இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது.  கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை  கோபுரம் உள்ளது.

கோபுரம் கோவில் உள்ளிருந்து பார்க்கும் போது

கோவில் வாசல் மொட்டை  கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் இன்னொரு அழகான கோபுரம் உள்ளது.




இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல திருக்குளமும்   அதன்  முன்பே  பலிபீடமும்,  த்வஜஸ்தம்பமும் உள்ளன. இத் திருக்கோவிலில் பலி பீடத்துக்குக்கூட விசேஷமாக  திருமஞ்சனம் நடை பெறுமாம்.


நாம் சன்னதியை நோக்கி நின்று சேவிக்கும் போது  இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக  உள்ளது.   தாயார்  பங்கஜவல்லி என்ற திருநாமத்துடன்  தனிக்கோவில் நாச்சியார் அழகாக சேவை சாதிக்கிறார்.    த்வஜஸ்தம்பத்தை சேவித்து உள்ளே  சென்றால் பெருமாளின் அழகான வரைபடம் உள்ளது.   மறுபடி பிரதட்சிணமாக சென்று  'தட்சிணாயனம் உத்திராயணம்' என இரண்டு வாசல்கள் உள்ளதை தர்சிக்கலாம். படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால்,   அழகான நின்ற  திருக்கோலத்தில்   எழுந்து அருளி சேவை சாதிக்கும்  புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன் பெருமாள் சேவை கண் குளிரக்காணலாம்.   

தற்சமயம் தட்சிணாயன காலமானதால்  இந்த வாசல் வழியாக சென்று சேவித்தோம்.  நின்ற திருக்கோலத்தில் நெடிய  பெருமாள் மார்கண்டேய மகரிஷிக்கும் பூமா தேவிக்கும் சேவை அருள,   அருகில் ஆதி சேஷனும்  எழுந்து அருளி உள்ளனர். சுவற்றில் சந்திரனும் சூரியனும் சாமரம் வீசி கைங்கர்யம் செய்கின்றனர்.  பெருமாளுக்கு அருகில் கருட ஆழ்வாரும் ஆதி சேஷனும் நின்ற திருக்கோலத்திலும், மார்கண்டேய மகரிஷியும் பூமாதேவியும் மண்டியிட்டு அமர்ந்தும் பெருமாளை வணங்கிக்கொண்டு உள்ளனர்.   சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி தந்தமையால் பெருமாளுக்கு ச்வேதபுரி நாதன் எனவும் திருநாமம். புண்டரீகாக்ஷ பெருமாள் உத்சவருடன் செங்கமலவல்லி தாயார் உள்ளார்.  பெருமாள் சன்னதி அருகே வலது புறம் எல்லா ஆழ்வார்களும் மறு புறத்தில் ஆச்சார்யர்களும் எழுந்துஅருளி உள்ளனர்.  சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் ஆகியோருக்கு   தனிச்சன்னிதிகள் உள்ளன.

இந்த திவ்ய தேசத்தில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளகாவே அமைந்துள்ளனவாம். பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனை காப்பிட அழைக்கும் பாசுரத்தில் " சதுரர்கள் வெள்ளறை நின்றாய்,  அந்தியம் போதிதுவாகும்  அழகனே! காப்பிட வாராய்" என மங்களா சாசனம்  செய்துள்ளார்.    திருமங்கை ஆழ்வார்  இத்திருத்தலத்தை பற்றி பத்து பாசுரங்கள் சிறப்பித்துள்ளார். ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி மாமழுவேந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ ! ..................  தென்றல் மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே !  பத்தாவது  பாடலில்   " மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை அதன் மேய ...............  எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே "  என மங்களாசாசனம் பண்ணி உள்ளார்.
கோவில் மதிள்   
ஸ்ரீ மணவாளமாமுனிகள் சன்னதி 
இத்திருத்தலத்தில், உய்யக்கொண்டார், எங்களாழ்வான் ஆகிய இரண்டு  ஆச்சார்யர்கள் திருஅவதாரம் செய்துள்ளனர். உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர்.  இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886.  இவர்களது பரம்பரையினர் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்து  வருகின்றனர்.  ஆள்  மறைந்தால்தான்   வேதாந்தமே   புரியும்  என உலகுக்கு உரைத்த   பிள்ளை  எங்களாழ்வான் இங்கே அவதரித்தார். ஸ்ரீராமானுஜரின்      மருமகனார்    நடாதூராழ்வான்.  அவருடைய    பேரர்   நடாதூரம்மாள்.    அவர்  பிள்ளை  எங்களாழ்வான்    திருமாளிகையைக்  கண்டறிந்து   விஷய  ஞானம் கற்றார் என பெரியோர் வாக்கு.  எங்களாழ்வான் வம்சாவழி சுவாமி கோவில் அருளப்பாடு கண்டு மாலை மரியாதையுடன் எழுந்து அருளும் காட்சி இங்கே ::.  



அடியேன் ஸ்ரீனிவாச தாசன்


1 comment:

  1. dear sampath,
    this is another excellent article. it clearly explains the sanctity and importance of a divyadesam, possibly not talked of much otherwise. the details about the acharyans make it more interesting.

    ReplyDelete